முதலீட்டு நிறுவனத்திடம் நிதியை இழந்தர்களுக்கு நீதி கிட்டுமா?

முதலீட்டு நிறுவனத்திடம் நிதியை இழந்தர்களுக்கு நீதி கிட்டுமா?

புலனாய்வுக் கட்டுரை

றிப்தி அலி

"இஸ்லாமிய அடிப்படையில் செயற்படுவதாக தெரிவிக்கப்பட்ட பிரிவேல்த் குளோபலில் வைப்புச் செய்தமையின் காரணமாக இன்று நான் கடன்காரியாகவும், நோயாளியாகவும் மாறியுள்ளேன்" என்கிறார் மருதமுனையைச் சேர்ந்த 40 வயதான அலியார் பர்சானா.

மிகவும் வறுமையான குடும்பத்தினைச் சேர்ந்த பர்சானா, தனது வீட்டில் சில்லறை கடையொன்றினை நடத்தி வருவதுடன், தினசரி சம்பளத்திற்காக கைத்தறி தொழிலையும் மேற்கொள்கின்றார். மூன்று பிள்ளைகளின் தாயாரான இவர், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சிறிய வீடொன்றில் வாழ்ந்து வருகின்றார்.

அவரது உழைப்பின் மூலம் கிடைத்த பணம் மற்றும் அவரது கணவர் - 10 வருடங்கள் கட்டாரில் வியர்வை சிந்தி உழைத்த பணம் ஆகியவற்றின் ஊடாக வீடு கட்டுவதற்காக 45 இலட்சம் ரூபாவினை கஷ்டப்பட்டு சேமித்திருந்தார்.

இந்த விடயத்தினை பிரிவேல்த் குளோபலின் சம்மாந்துறை கிளை ஊழியர்கள், பர்சானாவின் உறவினரொருவரின் ஊடாக அறிந்துகொண்டமையினால் குறித்த நிதியினை அவர்களின் கம்பனியில் வைப்புச் செய்யுமாறு கோரியுள்ளனர்.  

"குறித்த கம்பனியின் முகவர்கள் தனது வீட்டுக்கு பல தடவைகள் வந்து அவர்களின் நிறுவனத்தில் வைப்புச் செய்யுமாறு ஆசை வார்த்தை கூறினார்கள்" என பர்சானா தெரிவித்தார்.

"அதற்கு நானும், எனது குடும்பமும் முதலில் இணங்கவில்லை. இஸ்லாமிய ஷரீஆவின் அடிப்படையில் இலாபம் வழங்குகின்றோம். இதில் எந்தவித வட்டியுமில்லை. வங்கிகளை விட இந்த நிறுவனம் பாதுகாப்பானது என்றனர். இதனையடுத்தே கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் குறித்த கம்பனியில் பணத்தினை வைப்புச் செய்தேன்" என்றார் அவர்.

முகவர்களை நம்பியமையினால் ஆங்கில மொழி மூலமான ஒப்பந்தப்  பத்திரத்தினை முழுமையாக புரிந்துகொள்ளாமலே கையெழுத்திட்டேன் எனவும் அவர் தெரிவித்தார். இதற்காக பர்சானாவிற்கு மாதாந்தம் 80,000 ரூபா இலாபப் பணம் அவரது வங்கிக் கணக்கிற்கு 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை வைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அயலவர்களுடன் இணைந்து மாதாந்தம் 60,000 ரூபா பெறுமதியான சீட்டொன்றினை பர்சானா கட்டியுள்ளார். இதில் இவருக்கு மூன்றாம் சீட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதன்மூலம் கிடைக்கப் பெற்ற 30 இலட்சம் ரூபா பணத்தினையும் பிரிவேல்த் குளோபலின் கல்முனை கிளையில் 23 சதவீத வருடாந்த இலாபத்திற்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் வைப்புச் செய்துள்ளார். இந்த வைப்பினை மேற்கொண்டு தற்போது 11 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் எந்த இலாபமும் இதுவரை அவருக்கு வழங்கப்படவில்லை.

"இதனால் இன்று நான் கடன்காரியாக மாறியுள்ளேன். குறித்த சீட்டினை எப்படி கட்டி முடிப்பது என்று யோசித்து மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதோடு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று அண்மையிலேயே வீடு திரும்பினேன்" என அவர் அழுதவாறு கூறினார்.

"என்னிடமிருந்த நகைகளை விற்றே கடந்த பல மாதங்களாக இந்த சீட்டினை கட்டி வருகின்றேன். எனினும், தற்போது குறித்த சீட்டினை கட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி வந்தாலே பயமாக உள்ளது. இதனால் நான் வசிக்கும் வீட்டின் நிலத்தினை அடகு வைத்து மிகுதி சீட்டினை கட்ட தீர்மானித்துள்ளேன்" என பர்சானா மேலும் கூறினார்.

 

இவரது ஒப்பந்தத்தினைப் போன்று 1,400 ஒப்பந்தங்களை வைப்பாளர்களுடன் மேற்கொண்டு சுமார் 170 கோடி ரூபா பணத்தினை இந்த நிறுவனம் வசூலித்துள்ளதாக புலனாய்வு அறிக்கையிடலின் மூலம் தெரியவந்தது.

வைப்பாளர்களில் 90 சதவீதமானவர்கள் கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவர்களாவர். இதற்கு மேலதிகமாக அநுராதபுரம், கொழும்பு மற்றும்  கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இந்த நிறுவனத்தில் வைப்புச் செய்துள்ளனர்.

இந்த பிரிவேல்த் குளோபல் தனியார் கம்பனி, கடந்த  2014ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. கம்பனி பதிவாளர் திணைக்கள பதிவுகளின் பிரகாரம், கொழும்பு - 05 இனைச் சேர்ந்த 45 வயதான சிஹாப் ஷெரீம் என்று அழைக்கப்படும் அஹமட் ஷெரீம் முஹம்மது சிஹாப் மற்றும் அவரது மனைவியான கல்கிசை பிரதேசத்தினைச் சேர்ந்த 39 வயதான பாத்திமா பர்சானா மார்கார் ஆகியோர் இதன் ஸ்தாபக பணிப்பாளர்களாவர்.

2016ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் திகதியிலிருந்து குறித்த நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் கிழக்கு மாகாணத்திற்கு விஸ்தரிக்கப்பட்டன. சுமார் 15 மாத காலப் பகுதிக்குள் இதன் ஐந்து கிளைகள் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய நகரங்களில் திறக்கப்பட்டன.

"இந்த ஐந்து கிளைகளிலும் சுமார் 80 நிரந்த ஊழியர்கள் கடமையாற்றியுள்ளனர். இவர்களுக்கு 30,000 முதல்  190,000 ரூபா  வரை மாத சம்பளம் வழங்கப்பட்டதாக" குறித்த நிறுவனத்தின் அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

"இவர்களுக்கு பல்வேறு பெயர்களில் பதவிகளும், வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டதுடன், வைப்பாளர்களின் வைப்புத் தொகைக்கு ஏற்ற வகையில் 2 - 10 சதவீதம் வரையான தரகுப்பணமும் வழங்கப்பட்டது" என அவர் குறிப்பிட்டார்.

'வக்காலா' எனும் இஸ்லாமிய பெயரிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த நிறுவனத்தில் பணம் வைப்புச் செய்யப்பட்டது. முதலீட்டின் இலாபத்தினையும், நட்டத்தினையும் பகிர்ந்துகொள்ளும் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தத்தினை அரபியில் 'வக்காலா' என்று அழைப்பார்.

இலாபத்தினையும் நட்டத்தினையும் ஏற்பதற்கு வைப்பாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என குறித்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவத்தினால் வைப்பாளர்களுக்கு 18 - 25 சதவீத வருடாந்த இலாபம் வழங்கப்பட்டுள்ளது.

வருடாந்த இலாப சதவீதமும், தரகுப் பண சதவீதமும் கிளைகளுக்கு இடையிலும், நபர்களுக்கு இடையிலும் மாறுபாட்டு காணப்பட்டதையும் ஆறு மாத முதலீடு மேற்கொண்டவருக்கும் 12 மாத முதலீடு மேற்கொண்டவருக்கும் ஒரே சதவீத இலாபம் வழங்கப்பட்டுள்ளமை எமது தேடலின் மூலம் அறிய முடிந்தது.

இவ்வாறான நிலையில் "குறித்த நிறுவனத்தினால் வைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்திற்கு கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இலாபம் வழங்கப்படவில்லை" என வைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"அது மாத்திரமல்லாமல், தற்போது ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையிலும் வைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணம் திரும்ப வழங்கப்படாமல் உள்ளது" எனவும் அதன் வைப்பாளரான சாய்ந்தமருதினைச் சேர்ந்த எம்.ஐ.எம். வகீல் குற்றஞ்சாட்டினார்.

இதேவேளை, நட்டத்தில் இயங்கிய ஹாஜரா ட்ரவல்ஸ் தனியார் நிறுவனத்தினை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் அதன் பணிப்பாளராக சிஹாப் ஷெரீம், 2015ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த ட்ரவல்ஸின் நிறைவேற்றுப் பணிப்பாளரான செய்யது அலவி சாலிஹ் மௌலான (முர்ஷி), பிரிவேல்த்  குளோபலின் ஷரீஆ ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.  

"இவ்வாறான நிலையில், ஹாஜரா ட்ரவல்ஸ் - பிரிவேல்த்  குளோபலின் இணை நிறுவனமாகும். இதில் பல கோடி ரூபா பணம் தனது நிறுவனத்தினால் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக சிஹாப் ஷெரீம் தெரிவித்ததாக" அவரின் கீழ் பணியாற்றிய நபரொருவர் தெரிவித்தார்.

இதனை முற்றாக நிராகரித்த அலவி மௌலானா, "தனக்கு சிஹாப் ஷெரீம் 60 இலட்சம் ரூபா கடனாக வழங்கியிருந்தார். இதில் 60 சதவீத பணத்தினை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் திருப்பிக் கொடுத்துவிட்டேன்" என்றார்.

"எனினும் குறித்த நிறுவனத்தில் வைப்புச் செய்யுமாறு நான் யாரிடமும் கூறவில்லை" என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி கம்பனியின் பொதுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட பிரேரணையொன்றின் ஊடாக  கம்பனியின் யாப்பில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்மூலம் குறித்த நிறுவனம், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் காணி வியாபாரத்தில் முதலீடு, தரகு சேவை, அரிசி மற்றும் ஆடை உற்பத்தி  ஆகியவற்றில் மொத்த வியாபார உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றினை மேற்கொள்ள முடியும் என புதிய யாப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட தினத்திலேயே அமெரிக்காவின் டெக்ஸாஸ் நகரினைச் சேர்ந்த அஸ்ரப் பஹ்ஜா ஜவாத் அஹமட் மற்றும் ஜோர்தானின் அம்மான் நகரைச் சேர்ந்த முஹம்மத் நியாஸ் இஷாக் அல் ஹாதீப் ஆகியோர் இதன் பங்காளர்களாக இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

"வைப்பாளர்களின் நிதியினை திருப்பி செலுத்துவதற்காகவே மேற்குறிப்பிட்ட இருவரையும் எனது நிறுவனத்தின் பங்காளர்களாக இணைத்துள்ளேன்" என பிரிவேல்த் குளோபலின் பணிப்பாளர் சிஹாப் சரீம் கடந்த ஓக்டோபர் 8ஆம் திகதி விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"இந்த பங்காளர்களின் இணைவினால் நாட்டுக்குள் வரவேண்டியுள்ள 16 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தற்போது மத்திய வங்கியினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக' அவர் குற்றஞ்சாட்டினார்.

"வைப்பாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட பணத்தினை பாமஸி, ஆடை உற்பத்தி, அச்சு, வாகன வியாபாரம், அரிசி உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளதாக" தெரிவித்த அவர், "நிதி முதலீடு செய்யப்பட்ட நிறுவனங்களின் விபரங்களை கூற" மறுத்துவிட்டார்.

எவ்வாறாயினும், 'பிரிவேல்த் குளோபல் நிறுவனத்திற்கு எதிராக தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக' மத்திய வங்கியின் உயர் அதிகாரியொருவர் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

"இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கின்ற சமயத்தில், அது விசாரணைகளுக்கு பாதிப்பினை எற்படுத்தும்" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த நிறுவனத்தினால் வைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகளின் ஐந்து வங்கிக் கணக்குகளும் தற்போது மூடப்பட்டுள்ளமை எமது புலனாய்வு அறிக்கையிடலின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் வைப்பாளர்கள் பொலிஸ் திணைக்களத்தில் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கு அமைய இதன் பணிப்பாளர்களுக்கு பொத்துவில் மற்றும் கல்முனை நீதவான் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, "குறித்த கம்பனி 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கிச் சட்டம், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டம், 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதி குத்தகை சட்டம் மற்றும் 2016ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க மைக்ரோ பினான்ஸ் சட்டம் ஆகிய எந்தவொரு சட்டத்தின் கீழும் பதிவுசெய்யப்படவில்லை.

எனினும் குறித்த கம்பனியினால் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கல் வாங்கல் மேற்கொண்டுள்ளமை அறிய முடிகின்றமையினால் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்" என வைப்பாளரொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு மத்திய வங்கி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.