இணையவெளிக் கற்றல் மற்றும் கற்பித்தலில் தொடரும் சவால்கள்!

இணையவெளிக் கற்றல் மற்றும் கற்பித்தலில் தொடரும் சவால்கள்!

-அஹ்ஸன் அப்தர்-

தேசிய பாடசாலை ஒன்றில் தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியர் நவாஸ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கொரோனா அச்சுறுத்தலினால் இணையவெளியில் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்தப் பிரச்சினை எல்லாப் பாடசாலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டுள்ள பொதுவான புதிய சவால் என்கின்றபோதிலும் தொழில்நுட்ப உலகத்திற்குப் பழக்கப்படாத நவாஸிற்கு அது ஒரு கூடுதல் பிரச்சினையாக இருந்தது.  

இந்நிலையில் சக ஆசிரியர்களின் உதவியுடன் Zoom செயலியின் ஊடாக சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு நவாஸ் கற்பித்துக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த அழைப்பினை சீர்குழைக்கும் நோக்கில் இணைந்து கொண்ட இனந்தெரியாத மாணவன் ஒருவன் தூய்மையற்ற வார்த்தைகளை ஆசிரியருக்கு பேசத்தொடங்கினான்.

மேலும் ஆசிரியர் நவாஸின் தலை தட்டையாக இருப்பதைக் கிண்டல் செய்த குறித்த மாணவன் யாரென்பதை அடையாளம் காணவே முடியவில்லை. இந்நிலையில் மாணவர்களிடம் எதுவும் சொல்லாமலே குறித்த இணையவெளி வகுப்பில் இருந்து நவாஸ் நீங்கினார்.

இந்த சம்பவத்தினால் ஏற்பட்ட மனக்கவலையில் இருந்து மீண்டு வருவது அவருக்கு சாதாரண விடயமொன்றாக இருக்கவில்லை. தன்னை தாழ்வாக உணர்ந்த அவர் மீண்டும் அந்த மாணவர்களிடம் சென்று கற்பிப்பது அவமானம் எனக் கருதினார். தனக்கு ஏற்பட்ட நிலையை தெரிவிக்கும் நவாஸ் “ஆசிரியர்களுக்கு இப்படி செய்ய வேண்டும் என்று எப்படி மனம் வருகின்றது என்று தெரியவில்லை.

நாங்கள் எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளாக வளர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம், ஆனால் எல்லா ஆசிரியர்களும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பிள்ளைகள் விரும்புவதில்லை,” என வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

கற்பித்தலில் தொடரும் வன்முறைகள்

இணையவெளிக் கற்பித்தலில் இதுபோல பல வன்முறைகள் நடந்து வருகின்றன. இணையவெளியானது அனைவருக்கும் சுதந்திரமான ஒன்றாகவும் யாருடைய சுயகௌரவத்தையும் பாதிக்காத ஒன்றாகவும் இருக்க வேண்டும்.

அப்போது தான் இணையவெளிக் கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய விடயங்களை மிகச்சிறப்பாக கொண்டு நடத்த முடியும். கொரோனாவுக்கு மத்தியில் கற்பித்தலை முன்னெடுக்க பல சவால்கள் நிலவுகின்ற இந்த தருணத்தில் இவ்வாறான வன்முறைகள் யாவும் ஆசிரியர்களுக்கு வெந்த புன்னில் வேல் பாய்ச்சும் செயலாகவே இருக்கின்றது.

உலகில் உள்ள எல்லாத் துறைகளுக்கும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஒரு முட்டுக்கட்டையாக உள்ள நிலையில் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளின் கல்வித்துறைகளுக்கு பெரியதொரு பேரிடியாக இந்த அச்சுறுத்தல் இருக்கின்றது. இதற்கு மத்தியில் கற்றல் மற்றும் கற்பித்தலில் தொடரும் இவ்வாறான வன்முறைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான தீர்வுகளை ஆராய வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல்

கொரோனாவின் வருகைக்கு முன்னர் பாடசாலையின் வகுப்பறையில் மாணவர்களை ஒன்றிணைத்து கற்பிக்கும்போது கிடைக்கும் கற்றல் அனுபவத்தை இப்போது ஆசிரியர்களால் வழங்க முடியவில்லை. இணையவெளியில் கூட எல்லா மாணவர்களையும் ஒன்றிணைத்து கற்பிப்பது சாத்தியமான ஒன்றாக இல்லை.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பரகஹதெனிய தேசிய பாடசாலையின் ஆசிரியர் பயாஸ் பௌஸான் “வகுப்பறையைப் போன்று எல்லா மாணவர்களையும் இணையவெளியில் ஒன்றிணைக்க முடியவில்லை. சில மாணவர்களிடம் தொலைபேசி ஒன்று கூட இல்லை, சிலரிடம் இணைய வசதிகள் இல்லை, சில பகுதிகளில் வலையமைப்பு (நெட்வர்க்) இல்லை, குழு வேளைகளை வழங்குவதில் சிக்கல் என இப்படிப் பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மாணவர்களின் பிறழ்வு நடத்தைகளை கண்காணிப்பது சாத்தியமான ஒன்றாக இல்லை,” என தெரிவித்தார்.

பாடசாலையில் திட்டமிடப்பட்ட நேரசூசி ஒன்றின் அடிப்படையில் வகுப்புகள் நடைபெறுவதாக ஆசிரியர் பயாஸ் தெரிவிக்கிறார். மாணவர்களின் வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களின் வருகையானது இடாப்பு ஒன்றின் மூலம் பதிவு செய்யப்படுகின்றது. இவ்வாறான திட்டம் ஒன்று இருக்கின்றபோதிலும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையில் நேரடித்தொடர்புகள் இல்லாததால் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவது சிரமமான ஒன்றாக இருப்பதாக அவர் தெரிவிக்கிறார்.

இதேபோல ஆரம்பத்தில் இணையவெளிக் கற்பித்தலுக்கு மாணவர்களை இசைவாக்கமடையச் செய்வதற்கு மிகுந்த சிரமம் இருந்ததாக அதே பாடசாலையில்  உயர்தர மாணவர்களுக்கு தமிழ் பாடத்தினைக் கற்பிக்கும் ஆசிரியை எம்.வை. சியாமா தெரிவிக்கிறார். மாணவர்ளுக்கு வீட்டில் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் வட்ஸப் குழுவொன்றை தொடங்கிய குறித்த ஆசிரியையின் வட்ஸப் குழுவின் இயக்கத்தில் சிக்கல்கள் இருந்ததால் இப்போது அதில் இருந்து புதிய வட்ஸப் குழுவொன்றை ஆரம்பித்து மாணவர்களை வழிநடத்துகின்றார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் ஆசிரியை சியாமா “கல்வித் தேவைக்காக வட்ஸப் குழுவொன்றை திறக்கும்போது அதில் தனிப்பட்ட அரட்டைகள் இருக்கக் கூடாது, நகைச்சுவை, ஸ்டிக்கர் அனுப்புதல் மற்றும் கற்கைகளுக்கு சம்பந்தம் இல்லாத விடயங்களை அனுப்புதல் என்பவற்றுக்கு இது பொருத்தமான இடம் கிடையாது,” என தெரிவிக்கிறார்.

மாணவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதை குறை சொல்லவும் முடியவில்லை என்றும் ஆசிரியை சியாமா தெரவிக்கிறார். “மாணவர்களுக்கு இது தொடர்பான ஒழுக்க நெறிமுறைகளை கற்றுக்கொடுக்கும்போது அதைப் புரிந்து கொண்டு செயற்படுகின்றார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை பாடசாலை முகாமைத்துவம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்,” என அவர் மேலும் தெரிவிக்கிறார்.

Zoom செயலியில் கற்பிக்கும்போது பகிரப்படும் தொடு திரையில் இனந்தெரியாத மாணவர்கள் கிறுக்கி விளையாடுவதுடன் கமராவை மூடிவிட்டு வகுப்பில் இருந்து விலகிச் செல்லுதல் போன்ற விடயங்களை சில மாணவர்கள் செய்கிறார்கள். இது போன்ற சில விடயங்களை எந்நேரமும் கன்னனின் குறும்புகளாக இரசிக்க முடியாது என்றே எல்லா ஆசிரியர்களும் கருதுகின்றார்கள்.

கல்வித் துறையில் உள்ள பெண்களின் பிரச்சினைகள்

கொரோனா அச்சுறுத்தலினால் கல்வித் துறையில் பாடசாலை ஆசிரியையாக பணி செய்யும் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பதை நேரடி அவதானிப்பு மற்றும் ஆய்வுகளின் ஊடாக தெரிந்துகொள்ள முடிந்தது. ஆசிரியைகள் தாயாக இருக்கும்போது பல்வேறு சிரமங்கள் இருக்கின்றன.

இவ்வாறே பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தாயான ஆசிரியை நிலுபா தமது பிள்ளைகள் இணையவெளியில் கற்பதை மேற்பார்வை செய்து உறுதி செய்வதுடன் தனது பாடசாலை மாணவர்களுக்கும் கற்பிக்க வேண்டிய கட்டாய நிலைமை உள்ளது.

சிறுவர்களாக இருக்கின்ற பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் தொலைபேசி ஒன்றை தனியான பாவனைக்கு வழங்க முடியாது, தன்னுடைய ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை கற்பிப்பதற்காக பயன்படுத்த வேண்டும் என்பதால் அதையும் பிள்ளைகளுக்கு கொடுக்க முடியாது. இது பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு தாயாக உள்ள எல்லா ஆசிரியைகளும் எதிர்கொள்ளும் சவாலாகும்.

இது பற்றி தெரிவிக்கும் ஆசிரியை நிலுபா, “இந்த அச்சுறுத்தல் காலத்தில் கற்றல் நடவடிக்கைகளை தொடர்வதற்கு இணையவெளியைத் தவிர வேறு வழிகள் கிடையாது. ஆனால் பாதுகாப்பு என்பது இணையவெளியில் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கிறது. ஆசிரியர்களின் சிரமங்களை புரிந்துகொண்டு மாணவர்கள் இந்த வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கல்வி கற்று நல்ல பெறுபேறுகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்,” என தெரிவித்தார்.

பெண்களின் புகைப்படங்கள் மற்றும் கானொளிகளை பயன்படுத்த வேண்டிய தேவை உள்ளமை சவாலினை ஏற்படுத்தும் ஒன்றாக இருக்கிறது. மாணவிகள் மற்றும் ஆசிரியைகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் கானொலிகள் இணையவெளிக்கு வரும்போது ஏதாவது பிரச்சினைகள் ஏற்படுமோ என்ற சிந்தனை மக்களுக்குள் இருக்கிறது.

ஆனால் பொது இடங்களைப் போலவே இணையவெளியும்  தமது அடையாளத்தினை வெளிக்காட்டுவதற்கு பாதுகாப்பான இடம்தான்,  ஆனால் தேவை ஏற்படின் பாதுகாப்பான பொறிமுறைகளை பயன்படுத்தி இணையவெளிக் கற்றல் மற்றும் கற்பித்தல்களைத் தொடர்வது சிறந்த அம்சமாக அமையும் என்று டிஜிடல் ஆர்வலர்கள் கருதுகின்றார்கள்.

மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்கத்தின் நிலை

பாடசாலைச் சூழலில் மாணவர்களின் கல்வியோடு ஒழுக்க விழுமியங்களை கண்காணிப்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. இப்போது கல்வி கற்பது கூட சவாலான விடயமாக மாறியிருக்கின்ற நிலைமையில் மாணவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்களை கண்காணிப்பது சிரமமான ஒன்றாக மாறியுள்ளது.

மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் தொடர்பாக தல்கஸ்பிடிய அல்-அஷ்ரக் மஹா வித்தியாலயத்தின் ஆசிரியர் ஸுஹைல் அஹமட் கருத்து தெரிவிக்கும்போது “பாடசாலையைப் போல ஒழுக்க விவகாரங்களை இணையவெளியில் கண்காணிக்க முடியவில்லை. குறைந்தபட்சம் அதுபற்றி சிந்திக்கக் கூட முடியவில்லை. பாடசாலையைப் பொருத்த வரையில் சிகையலங்காரம், சீருடை போன்ற விடயங்கள் மேற்பார்வை செய்யப்படுகின்றன. ஆனால் இந்த வாய்ப்பு இணையவெளியில் இல்லை,” என அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் ஒழுக்க விழுமியங்கள் கல்வியிலும் எதிர்கால விவகாரங்களிலும் தாக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாகும். இணைவெளிக் கற்றலில் குறித்த விடயத்தினை மேற்பார்வை செய்ய முடியாமல் இருப்பது பாரியதொரு துர்ப்பாக்கியமாக உள்ளது.

பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் என்ன செய்ய வேண்டும்?

பாடசாலைப் பருவத்தில் உள்ள பிள்ளைகள் மத்தியில் பிறழ்வு நடத்தை இருப்பது சாதாரணமான விடயமாகும். மாணவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க விழுமியங்கள் சீராக இருப்பதில் ஆசிரியர்களும் பாடசாலைச் சூழலும் பிரதான பங்களிப்பை இத்தனை காலமும் வழங்கி வந்தன.

ஆனால் இவ்வாறனதொரு அச்சுறுத்தல் நிலவுகின்ற ஒரே காரணத்தினால் தமது பணியினைச் செய்வதில் சிரமத்தினை எதிர்நோக்குகின்றார்கள். குறைந்தபட்சம் தமது பிள்ளைகளின் ஒழுக்க விடயங்களை மாத்திரமாவது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

பெற்றோர்கள் போதுமானளவு தொழில்நுட்ப அறிவை கொண்டிருக்கும்போது மாத்திரமே பிள்ளைகளின் இணைய செயற்பாடுகளை கண்காணிக்க முடியும். எனவே பெற்றோர்கள் பிள்ளைகள் இணையத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தவரை இணையம் சார்ந்த விடயங்களை கற்றுக்கொள்ள பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும்.

சமூக ஊடகங்களை பாவிப்பது ஒரளவு இணைய அறிவைத் பெற்றுத் தரும். குறைந்த பட்சம் அதையாவது செய்து இணைய அறிவை மேம்படுத்திக்கொள்ள சகல பெற்றோர்களும் முன்வர வேண்டும்.

இந்தப் பெருந்தொற்றுக் காலத்தினை காரணமாக காட்டி பிள்ளைகள் கல்வியை புறக்கணிப்பதற்கு வாய்ப்புகளை வழங்கி விடக்கூடாது. இணையவெளிக் கற்றல் மாத்திரமே இப்போதைக்கு கூடியபட்ச சாத்தியமான கல்வி கற்றல் முறையாக இருக்கும் நிலையில் அதன் பூரண பயனைப் பிள்ளைகள் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். போதுமான இணைய வசதிகள் மற்றும் இணைப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து பிள்ளைகள் பாதுகாப்பாக கல்வி கற்பதற்கான வாய்ப்பினை பெற்றோர்கள் ஏற்படுத்த வேண்டும்.

இணையவெளிக் கற்றலை பாதுகாப்பானதாக மாற்றுவோம்

கல்வியைத் தொடர்வதற்கு ஒரேயொரு வாய்ப்பாக இருக்கின்ற இணையவெளியினை பாதுகாப்பாக மாற்றினால் நாம் இணையவெளிக் கல்வியின் சுவையினை முழுமையாக அனுபவிக்க முடியும். பாடசாலைச் சூழல், மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் என மூன்று தரப்பினரும் இது தொடர்பாக கரிசனை காட்டும்போது இந்த விடயத்தில் கண்டிப்பாக நிறைவினைக் காண முடியும்.

இணையவெளியில் கற்பிக்கும்போது இவ்வாறான வன்முறைகள் தோன்றுவதற்கு பெரும்பாலான ஆசிரியர்களின் தொழில்நுட்ப அறிவு பின்னடைவில் இருப்பதுதான் அடிப்படைக்காரணம் என தனது அடையாளத்தினை வெளிப்படுத்த விரும்பாத பாடசாலை அதிபர் ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து வெளியிடுகையில் “பாடசாலை ஆசிரியர்கள் தம்மிடம் தொழில்நுட்ப அறிவு இல்லாததை வெளிப்படுத்த விரும்புவதில்லை. எல்லோரையும் போல அவர்களும் இணையவெளி என்பது புதுமையான விடயம், அதற்காக இப்போது கட்டாய தேவையாக உள்ள தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்வதில் ஆசிரியர்கள் பின்நிற்பது எதிர்கால சந்ததியினை நேரடியாக பாதிக்கும்,” என தெரிவித்தார்.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கின்ற இந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்கு பாடத்திட்டங்களை கற்பிப்பதற்கு முன்னர் சந்தர்ப்பம் கிடைக்கும் ஒரு தருணத்தில் அவர்களை பகுதி பகுதியாக ஒன்றிணைத்து தொழில்நுட்பங்களை கற்றலுக்கும் கற்பித்தலுக்கும் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை செயலமர்வுகள் அல்லது கருத்தரங்குகள் ஊடாக தெளிவு படுத்த வேண்டும் என குறித்த அதிபர் கருதுகின்றார். முடிந்த வரை பெற்றோர்களுக்கு இவற்றை தெளிவுபடுத்த வேண்டும என்பதே அவருடைய விருப்பம் ஆகும்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பாக இந்தப் பெருந்தொற்று அச்சுறுத்தலுக்குப் பின்னர் இணையத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இணையம் வன்முறைகளால் மாத்திரம் நிறைந்த இடம் கிடையாது, இதை பாதுகாப்பான முறையில் பாவிக்கும்போது இணையவெளிக் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற விடயங்கள் பாதுகாப்பாக நிகழும் என்பது சாத்தியமான விடயம்.

கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகளில் வன்முறைகளைக் கலைந்து பாதுகாப்பாக பயன்படுத்துவது எவ்வாறு என தெரிந்துகொண்டு அதன்படி செயற்படுவதற்கு முன்வருவோமாக இருந்தால் பாடசாலை மட்டத்தில் இருந்தே நிறைவான டிஜிடல் சமூகம் ஒன்றை கட்டியெழுப்ப முடியும்.

நன்றி: bakamoono.lk