முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் சிந்தனை கொண்டவர்கள் அல்ல: சரத் வீரசேகர

முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் சிந்தனை கொண்டவர்கள் அல்ல: சரத் வீரசேகர

றிசாத் ஏ காதர்

"நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ் தீவிரவாத சிந்தனையுள்ளவர்கள் என்று கூறவில்லை. எங்களைச் சுற்று இப்படியான சிந்தனையுள்ளவர்கள் இருக்க முடியுமென்றுதான் கூறினேன்.

பாராளுமன்றத்தில் நான் கூறிய கருத்து தொடர்பாக சில ஊடகங்கள் வெளியிட்ட செய்தி முற்றுலும் தவறானது" என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேரக தெரிவித்தார்.

ஐ.எஸ் மத தீவிரவாத சிந்தனை ஆபத்தானவை, அப்படியான சிந்தனையுள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள் - புனர்வாழ்வழித்து சமூகத்துடன் இணைக்க முடியும்  என்று தான் நான் தெரிவித்தேன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

முஸ்லிம்கள் அனைவரிடத்திலும் ஐ.எஸ் மத தீவிரவாத சிந்தனை காணப்படுவதாகவும், அச்சிந்தனை என்றோ ஒருநாள் வெடிக்காலமெனவும் நான் கூறியதாக சில ஊடகங்கள், இணைத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

அச்செய்திகள் திரிவுபடுத்தப்பட்டது என அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் பாராளுமன்றில் உத்தியோகபூர்வமான கேள்வி ஒன்றினூடாக ஞானசார தேரர் கூறிய இன்னுமொரு தாக்குதல் இடம்பெறலாம் என்கிற விடயத்திற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்கிற வகையில் அது பற்றி என்ன நினைக்கின்றீர்கள், அதற்கு எவ்வகையான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளீர்கள் அத்துடன் அதுபற்றி ஞானசார தேரரிடம் விசாரிக்கவில்லையா என்று வினவியிருந்தார்.

அதற்கு நான் பதிலளிக்கையில், ஞானசார தேரரிடம் பொலிஸ் வாக்குமூலத்தினை பெற்றுள்ளது என்றும், அவர் கூறிய விடயங்கள் சிலதினையும் சுட்டிக்காட்டியுமிருந்தேன்.

அதனை தொடர்ந்து நான் கூறிய விடயம், ஐ.எஸ் மத தீவிரப்போக்கு உள்ள ஒருவரால் தேவையான நேரத்தில் தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்றே.  உதாரணமாக நியூசிலாந்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தின் பின்னணியிலுள்ள தீவிரவாதியை நீதிமன்றம் விடுவிப்புச் செய்தது.

அவர் பற்றி கணணியில் இருந்த தகவல் வேறு. ஆனால் அவருடைய மூளையில் இருந்த சிந்தனை வேறு. குறித்த சிந்தனை அந்த நிமிடம் வரை மூளையில் இருந்து அழிக்கப்படவில்லை. அதனால்தான் அந்த தாக்குதல் இடம்பெற்றது.

அதேபோல் நமது நாட்டிலும் சில நேரம் ஐ.எஸ்.சிந்தனையுடையவர்கள் இருக்ககூடும். அவ்வாறான இளைஞர்கள் சமூகத்திற்குள் மறைந்திருக்கவும்கூடும்.  இன்னும் ஆழமாக கூறப்போனால் ஏப்ரல் - 21 தாக்குதல்தாரிகளான வர்த்தகர் இப்றாஹிமுடைய மகன்கள் இருவருமே ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுதாரிகளாக மாறியிருந்தனர்.

குறித்த இருவரும் இளைஞர்கள். ஐரோப்பிய நாடுகளிலுள்ள பல்கலைக்கழகங்களில் கல்விகற்றவர்கள். செல்வந்த குடும்பத்தவர்கள். அவ்வாறான இளைஞர்களே இப்படியொரு சிந்தனைக்குள் அக்கப்பட்டுள்ளனர் என்றாரல், (மரணித்த பின்னர் சுவர்க்கத்தினை அடையமுடியும், கன்னியர்களை அடைந்துகொள்ளமுடியும் என்கிற சிந்தனையூட்டல்களால் கவரப்பட்டுள்ளார்கள்)  சாதாரணமான முஸ்லிம் இளைஞர்களிடமும் இப்படியான சிந்தனைக்குள் இலகுவாக அகப்பட முடியும்.

நான் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மானிடம் கூறியது ஐ.எஸ் மதவாத சிந்தனை உள்ளவர்களை அடையாளப்படுத்துமாறே. ஜனாதிபதி இவ்வாறான சிந்தனை உள்ளவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் புதிய சரத்தினை கெண்டுவரவுள்ளார்.

இப்போது நமக்கு தேவை ஐ.எஸ். மத தீவிரவாதத்தினை களைவதே. அது சிலநேரம் உங்களிடமோ அல்லது என்னிடமோ இருக்கலாம் அதனை கண்டுகொள்ள முடியாது. அது மூளையுடன் தொடர்புபட்டது. அப்படியான ஒருவர் நாளை வேண்டுமெனாலும் தாக்குதல் நடத்த முடியும்.

நாம் மிகுந்த அவதானத்துடனும், பாதுகாப்புடனும் இருக்கவேண்டும். மக்கள் அனைவரும் அதுதொடர்பில் விழிப்புடன் இருத்தல் அவசியம். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் றஹ்மான் உட்பட ஏனையவர்களும் இதற்கு உதவிபுரிதல் அவசியம். அப்படியான மத சிந்தனை உள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள் என்றுதான் கூறினேன்.

நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் "முஸ்லிம்கள் அனைவரும் ஐ.எஸ்.  தீவிர சிந்தனையுள்ளவர்கள்" என்று கூறவில்லை.  எங்களை சுற்றி இப்படியான சிந்தனையுள்ளவர்கள் இருக்க முடியும் என்றுதான் கூறினேன்.

அவர்களால் அவர்களுக்கு தேவையான நேரத்தில் நியுசிலாந்து உட்பட ஏனைய நாடுகளில் நடாத்தப்பட்ட தாக்குதல்கள் போன்று தாக்குதல் நடத்தமுடியும். அதன் பின் அவர்களை மரணிக்கச் செய்வதில் எந்த பிரயோசனமும் இல்லையே.

அவ்வாறான சி;ந்தனையுள்ளவர்களை அடையாளம் காட்டினால் அவ்விளைஞர்களுக்கு புனர்வாழ்வளிக்க முடியும் என்றுதான் கூறினேன். இதுதான் ஜனாதிபதியின் சிந்தனையில் உள்ளது. இதனை திரிபுபடுத்தி எவராவது கூறினால் அது தவாறானது மட்டுமல்ல மிகப் பிழையானதுமாகும்.

நான் முஸ்லிம் மக்களை அதிகம் நேசிப்பவன், கௌரவப்படுத்துபவன். இன்று வரை நிறைய முஸ்லிம் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் பின்பற்றும் மதத்தினை கௌரவப்படுத்துபவன். நான் அம்பாரை மாவட்டத்தில் இருந்தபோது மௌலவிமார்களுக்கு தொழிகளை வழங்கினேன்.

எனது சக்திக்கு உட்பட்டு  பள்ளிவாசல்களுக்கு உதவியிருந்தேன். மௌலவிமார்களை அரச சம்பளத்துடன் பள்ளிகளில் கடமையாற்றுவதற்கு பணித்திருந்தேன். அம்பாரை மாவட்டத்தில் இருந்த எந்தவொரு அமைச்சரும் இந்தப்பணியை செய்திருக்கவில்லை.

நான் ஒரு சிறந்த பௌத்தனாக இருந்தால் ஏனைய மதங்களை கௌரவப்படுத்துதல் வேண்டும். அதுதான் எனது சிந்தனையும். நான் அப்படி ஒரு வசனத்தைக்கூட முஸ்லிம் மக்களுக்கு கூறவில்லை, தயவுசெய்து கூறுவேன் என்றும் நினைக்க வேண்டாம்.

ஐ. எஸ். மத தீவிரவாத சிந்தனை மிகப் பாரதூரமான சிந்தனை, தேவையான நேரங்களில் அதனை வெளிப்படுத்த முடியும், அப்படியான சிந்தனையுள்ளவர்களை அடையாளப்படுத்துங்கள் என்றுதான் கூறினேன்" என்றார்