உப வேந்தர் பதவி: 'முன்மொழியப்பட்ட மூவர் தவிர்ந்த வேறு எவரையும் ஏற்கத் தயாரில்லை'

உப வேந்தர் பதவி: 'முன்மொழியப்பட்ட மூவர் தவிர்ந்த வேறு எவரையும் ஏற்கத் தயாரில்லை'

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்மொழியப்பட்டுள்ள மூவர் தவிர்ந்த வேறு யாரும் நியமிக்கப்ட்டால் அதனை ஒருபோது ஏற்கத் தயாரில்லை என பல்கலைக்கழக சமூகம் இன்று (07) திங்கட்கிழமை அறிவித்தது.  

பல்கலைக்கழகத்தின் தற்போதைய உப வேந்தரின் பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் 23ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. இதனால் புதிய உப வேந்தருக்கான விண்ணப்பம் கோரப்பட்டு அதில் தெரிவுசெய்யப்பட்ட மூவரின் பெயர்களை பல்கலைக்கழக பேரவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

எனினும், எந்தவித காரணங்களுமின்றி குறித்த மூவரின் பெயர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக சமூகம் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகின்றது.

இவ்வாறான நிலையில் இது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (07) திங்கட்கிழமை இணையத்தளத்தின் ஊடாக நடைபெற்றது.

இலங்கை திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம ஆகியன கூட்டாக இணைந்து இந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

திறந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க தலைவர், போராசிரியர் அந்தோனி பிரியரத்ன, இந்த சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினரான பேராசிரியர் ரொஹான் பெர்ணான்டோ, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்க தலைவர் மனோஜி டி சில்வா மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் ஹர்ஷன மதுசங்க உள்ளிட்டோர் பலர் இதில் கலந்துகொண்டனர்.

அங்கு அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் தற்போதைய உப வேந்தரான பேராரிசியர் எஸ்.ஏ ஆரியதுரையின் பதவிக்காலம் எதிர்வரும் ஜுன் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதனால் குறித்த பதவிக்கு புதியவரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கடந்த வருடம் கோரப்பட்டது. இதற்கு விண்ணப்பித்த ஆறு பேரில் இருந்து மூவரை பல்கலைக்கழக பேரவை புள்ளிகள் அடிப்படையில் தெரிவுசெய்திருந்தது.

இலங்கை திறந்த பல்கலைக்கழத்தின் பொறியியல் தொழிநுட்ப பீட பீடாதிபதி பேராசிரியர் அசேல டொலகே (புள்ளிகள் - 70), பல்கலைக்கழகத்தின் கல்வி தொழிநுட்ப பேராசிரியரும், கல்வி பீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் சிரோனிகா கருணாநாயக்க (புள்ளிகள் - 69) மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர் லலித் திலகரட்ண (புள்ளிகள் - 67) ஆகியோரே தெரிவுசெய்யப்பட்டன.

உப வேந்தர் நியமனத்திற்காக இவர்கள் மூவரின் பெயர்களும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பட்டிருந்தது. எனினும், குறித்த மூவரின் பெயர்களும் எந்தவித காரணங்களுமின்றி ஜனாதிபதியினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகத்தின் சுயாதீன தன்மைக்கு எதிராக யாரும் செயற்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறான நிலையில் புதிய உப வேந்தரை தெரிவுசெய்யவதற்காக  மீண்டும் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பத்திற்கான இறுதித் திகதி எதிர்வரும் 10ஆம் திகதியாகும். எனினும், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பிரயாண தடையின் காரணமாக இது மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பலர் எமது பல்கலைக்கழத்தில் உள்ளனர்.

இந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதிய விண்ணப்ப கோரலுக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை. அத்துடன் புதிய விண்ணப்பத்தின் அடிப்படையில் உப வேந்தரை தெரிவுசெய்வதற்கான குழுவில் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.

எனினும் அந்தக் குழுவில் பங்கேற்க எந்தவொரு விரிவுரையாளரும் தயாரில்லை.  எவ்வாறாயினும், தற்போதைய உப வேந்தரின் பதவிக்காலம் இம்மாதம் 22ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

இதனால் குறித்த வெற்றிடத்திற்கு பல்கலைக்கழக பேரவையினால் சிபாரிசு செய்யப்பட்ட மூவரில் ஒருவரை உடனடியாக நியமிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பல்லைக்கழக பேரவையினால் சிபாரிசு செய்யப்பட்டவர்களில் இருவர் எமது பல்கலைக்கழத்தினை சேர்ந்தவர்களாவார். இவர்களிடம் இந்த பல்கலைக்கழகத்தினை அபிவிருத்தி செய்வது தொடர்பில் பல திட்டங்கள் காணப்படுகின்றனர்.

அவ்வாறில்லாமல் நியமிக்கப்படும் வேறு யாரையும் ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழக சமூகம் ஒருபோதும் தயாரில்லை. அது மாத்திரமல்லாமல் இதற்கு எதிராக போராடவும் நாங்கள் தயாராக உள்ளோம்.

பல்கலைக்கழக வரலாற்றில் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் சங்கம் மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம ஆகியன கூட்டாக இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இதனால் எமது கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறில்லாத பட்டசத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்லைக்கழக விரிவுரையாளர்ள் ஒன்றியம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களுடன் தொடர்புடைய அமைப்புக்களை இணைத்துக்கொண்டு எமது போராட்டம் தொடரும்.

இதற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பு வழங்க அவர்கள் முன்வந்துள்ளனர். பல்கலைக்கழகத்தின் சுயாதீன தன்மையில் கைவைக்க வேண்டாம் என அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

எமது பல்கலைக்கழத்திற்கு 9 மாகாணத்திலும் 25 மாவட்டங்களிலும் கிளைகளைக் கொண்ட பாரிய வலையமைப்பு காணப்படுகின்றது. எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டால் அது முழு நாட்டையும் இது பாதிக்கும் என தெரிவித்துக்கொள்கின்றோம்.  

இதனால் அனைவரும் கூட்டாக இணைந்து மக்களின் பல்கலைகழகத்தினை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்" என்றனர்.

இதேவேளை, அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (07) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிடம் இந்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளரொருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் பீரிஸ்,

"இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பதவிக்கு புதியவர்களின் பெயர்கள் விரைவில் முன்மொழியப்படும்.  உப வேந்தர் நியமனம் தொடர்பில் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய உப வேந்தரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது. அது போன்று புதிய பெயர்களை கோரும் அதிhரமும் ஜனாதிபதிக்கு உள்ளது.

இது தொடர்பில் பல்கலைக்கழக பேரவை மறுபரிசீலனை செய்து விரைவில் புதிய பெயர்களை உப வேந்தர் பதவிக்கு முன்மொழியும். எவ்வாறாயினும் இது முதற் தடவையல்ல. கடந்த நல்லாட்சிக் காலத்திலும் இதுபோன்று இடம்பெற்றுள்ளது" என்றார்.