'கொவிட் ஜனாஸாக்களை அடக்க இடமில்லை'

'கொவிட் ஜனாஸாக்களை அடக்க இடமில்லை'

"கொவிட் - 19 காரணமாக உயிரிழப்பவர்கள் அடக்கம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு நாளாந்தம் 25 க்கு மேற்பட்ட சடலங்கள் வண்ணமிருக்கின்றன.

ஆகையால், இனிவரும் நாள்களில் அங்கு சடலங்களை அடக்கம் செய்ய இடம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது" என ஓட்டுமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌவ்பர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதனால் மாற்று இடத்துக்கு எங்கு செல்வது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக ஓரிடத்தை தெரிவு செய்ய வேண்டிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது என அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களில் 1,437 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அடையாளப்படுத்தப்பட்ட ஒரே ஒரு இடம் ஓட்டுமாவடி பிரதேச சபை எல்லைக்குள் உள்ள பகுதியான மஜீமா நகர் சூடுபத்தினசேனை. இந்த பொது மயானத்திலே இந்த உடலகங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுவருகின்றன.

"இதனை எமது சபை பெறுப்பேற்று மனிதவலு, இயந்திரவலு என்பவற்றை பயன்படுத்தி மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருகின்றது. இதற்கு இராணுவத்தினர், சுகாதார பணியாளர்கள் ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர்" என தவிசாளர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் இந்த உடல்களை அடக்கம் செயவதற்கு 3 ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி அதில் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டது. இந்த காணி போதாது என அதனுடன் இணைந்த மேலும் இரண்டு ஏக்கர் காணியை அடையாளப்படுத்தி 5 ஏக்கர் காணியில் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன எனவும் அவர் கூறினார்.

இதில் அடக்கம் செய்யபப்பட்ட இடங்களில் அடையாள கல்கள் நாட்டப்பட்டு இலக்கங்கள் இடப்பட்டு அந்த இலக்கங்களின் உடல்கள் யாருடையது என்ற பெயர் விபரங்கள் தயாரிக்கப்பட்டு பிரதேச சபையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த 5 ஏக்கர் காணியிலே இன்னும் சுமார் 500 உடல்கள் மட்டுமே அடக்கம் செய்யமுடியும். இருந்தபோதும் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நாளாந்தம் 25 அல்லது 30 உடல்கள் நாடளாவிய ரீதியில் இருந்து வருகின்றதன் காரணமாக இன்னும் ஒரு சில நாட்களில் இந்த இடம் முடிந்துவிடும்.