தங்கத்திற்கான தட்டுப்பாடு காரணமாக தங்க விலையில் திடீர் அதிகரிப்பு

தங்கத்திற்கான தட்டுப்பாடு காரணமாக தங்க விலையில் திடீர் அதிகரிப்பு

றிப்தி அலி

நாட்டில் தங்கத்திற்கு நிலவுகின்ற பாரிய தட்டுப்பாடு காரணமாக தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்மைய, கொழும்பு – 11 செட்டியார் தெருவில் ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை 127,000 ரூபாவாக இன்று (03) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த புதன்கிழமை (30) 116,000 ரூபாவாக காணப்பட்ட ஒரு பவுண் 24 கரட் தங்கத்தின் விலை ஜுலை 1ஆம் திகதி வியாழக்கிழமை 120,000 ரூபாவாக சடுதியாக அதிகரிக்கப்பட்டது.

இவ்வாறன நிலையில் மீண்டும் இன்று (03) சனிக்கிழமை மேலும் 1,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"கடந்த 10 நாட்களிற்குள் தங்கத்தின் விலை சுமார் 10 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது" என அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் பொருளாளர் ஆர். பாலசூப்ரமணியம் தமிழனுக்கு தெரிவித்தார்.

தங்க இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டில் தங்கத்திற்கு பாரியவில் பற்றாக்குறை காணப்படுகின்றது. இதன் காரணமாகவே இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், தங்க இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை ஓரளவு குறைவடையும் என நம்புவதாக  அவர்  கூறினார்.

இது தொடர்பில் நிதி அமைச்சருடன் பேச்சு நடத்த அகில இலங்கை நகைக்கடை உரிமையாளர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தொழிலதிபர் ஆர். பால தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த திடீர் விலையேற்றம் காரணமாக தங்க வியாபாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நாடளாவரிய ரீதியல் சுமார் 5,000 தொடக்கம் 7,000 வரையான நகைக் கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் சுமார் 100,000 பேர் பணியாற்றுகின்றனர்.

இதற்கு மேலதிகமாக சுமார் 200,000 பேர் தங்க ஆபரண உற்பத்தி துறையுடன் தொடர்புபட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடைய பல குடுபங்கள் தற்போதைய விலையேற்றம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமல்லாம் நகை வியாபாரத்துடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, "நாட்டில் தங்கத்திற்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் அதற்கான விநியோகம் மிகக் குறைவாக காணப்படுகின்றமையினாலேயே  இந்த திடீர் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது" என பிரபல நகை வர்த்தகரான எம்.எம்.  ராயீஸ் தெரிவித்தார்.

"தற்போது தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு இலங்கைக்கு மாத்திரமான பிரச்சினையென்றல்ல. இது சர்வதேச ரீதியாக நிலவுகின்ற பிரச்சினை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் தங்கத்தில் முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதும் இந்த விலையேற்றத்திற்கான காரணமாகும் என ராயீஸ் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மத்திய வங்கியினால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட 220 பில்லியன் ரூபா நாணய அச்சிடல் காரணமாகவே நாட்டில் தங்கத்திற்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் சுதாகரன் பேரம்பலம் தெரிவித்தார்.

"புதிதாக நாணய அச்சிடலை மேற்கொள்ளும் போது அதற்கு ஏற்ற அளவினால் தங்க இருப்பினை மத்திய வங்கி பேணுவது வழமையாகும். இதற்கமைய அண்மையில் நாட்டில் மேற்கொள்ள நாணய அச்சிடலின் போது உள்நாட்டில் காணப்பட்ட தங்கத்தினை மத்திய வங்கியின் இருப்பிற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளமையினால் தற்போது நாட்டில் தங்கத்திற்கு பாரிய நெருக்கடி நிலவுகின்றது" என அவர் கூறினார்.

இதன் காரணமாகவே நாட்டில் தங்கத்தியின் விலையில் பாரிய அதிகரிப்பு குறிப்பட்ட சில நாட்களுக்குள் நிகழ்ந்துள்ளது என பொருளாதார ஆய்வாளர் சுதாகரன் மேலும் தெரிவித்தார்.