பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

2022ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்களிடம் முன்மொழிவுகளை கோருவதற்கான முதலாவது கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இன்று (11) அலரி மாளிகையில் நடைபெற்றது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் ஏற்பாடு செய்த மேற்படி சந்திப்பில் கிராம, பிரதேச மற்றும் மாவட்ட மட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய விடயங்கள், தேசிய மட்டத்தில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துதல் போன்ற துறைகள் தொடர்பில் பின்வரிசை உறுப்பினர்களின் முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.

உள்ளூர் சேதன விவசாயத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதி உற்பத்தியை அதிகரித்தல், தொழில்துறை மற்றும் சேவைத் துறையில் கிராமப்புற சமூகத்தின் பங்களிப்பு மற்றும் பாரம்பரிய தொழில்முனைவோரை மேம்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல், மீன்வளத் துறையை விரிவுபடுத்துதல், மலர் மற்றும் அலங்கார இலை வளர்ப்பாளர்கள், விலங்கு உற்பத்தி துறை ஆகியவற்றை மேம்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பின்வரிசை உறுப்பினர் இதன்போது முன்மொழிவுகளை முன்வைத்தனர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சராக சேவையாற்றிய காலப்பகுதியில் அப்போது நாட்டின் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் துறை சார்ந்தவர்களினால் வரவு செலவுத் திட்ட முன்மொழிவை தயாரிக்கும் போது ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாகவும், அது மிகவும் வெற்றிகரமான முன்னேற்றத்தை வெளிப்படுத்தியதனால் இம்முறை வரவு செலவுத் திட்ட தயாரிப்பிலும் முடிந்தளவு பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் முன்மொழிவுகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது வலியுறுத்தினார்.

குறித்த கலந்துரையாடல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் கல்வி அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொது செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.