நான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கினேன்: ஜனாதிபதி

நான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கினேன்: ஜனாதிபதி

“நான் விவசாயிகளுக்கே முன்னுரிமை வழங்கினேன். அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கையை மீற மாட்டேன். விவசாயிகளான நீங்களே நல்லது கெட்டதை ஆராய்ந்து தீர்மானம் எடுங்கள். மனிதர்களைத் தூண்டும் அரசியலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். எதிர்காலச் சந்ததியினருக்காக ஒன்றிணையுங்கள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விவசாயிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

உடுபந்தாவ - புன்னெஹெபொல சேதனப் பசளை தயாரிக்கும் மத்திய நிலையம் மற்றும் சேதனப் பசளை பயிர்ச்செய்கை இடங்களைப் பார்வையிடுவதற்கு ஜனாதிபதி  இன்று (23) முற்பகல் சென்றிருந்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பசளை தயாரிக்கும் மத்திய நிலையத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, சேதனப் பசளை உற்பத்தி செய்யப்படும் விதத்தைப் பார்வையிட்டதோடு, உற்பத்திகளின் தரத்தைப் பேணுவதற்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறைமைகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

பின்னர் பயிர்ச்செய்கை நிலத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி, அங்கு பயிரிடப்பட்டிருந்த மரக்கறிகள் மற்றும் ஏனைய பயிர்கள் தொடர்பாக தனது அவதானத்தைச் செலுத்தினார். உரத்தைப் பயன்படுத்தி மண்ணை வளப்படுத்தும் முறையையும் பார்வையிட்டார்.

மண் புழுக்களைப் பயன்படுத்தி கொம்போஸ்ட் உரம் தயாரிக்கப்படும் இந்த மத்திய நிலையத்தின் மூலம், மாதாந்தம் 12 தொன் உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. 13 ஏக்கர் கொண்ட தென்னை பயிரிடப்பட்டுள்ள நிலப்பரப்பில், பப்பாளி, வாழை, கொடித்தோடை போன்ற பழங்களும் கோவா, பீட்ரூட், பட்டாணி போன்ற மரக்கறிகளுடன் மஞ்சள் மற்றும் முன்மாதிரி நெல் பயிர்ச்செய்கையும் சேதனப் பசளையைப் பயன்படுத்திப் பயிரிடப்பட்டுள்ளன.

விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எமது எதிர்பார்ப்பாகும். அதற்காக, அரசியல் தலைவர்கள் எடுக்காத கடினமான தீர்மானங்களை எடுப்பதற்கு நான் தயார். அன்று யுத்தத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று பலர் கேட்டுக்கொண்டனர். ஆனாலும், 30 வருட யுத்தத்தை நிறைவு செய்தது போல் எந்தவிதத் தடைகள் ஏற்பட்டாலும், பசுமை விவசாயத்தை வெற்றிகொள்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

தமக்குத் தேவை வாக்குகள் அல்ல, பொதுமக்களுக்கு சரியானதைச் செய்வதாகும் என்றும் சரியானதைச் செய்வதற்காகப் பயப்படாது தீர்மானங்களை மேற்கொண்டு, மக்களின் தேவைகளை மாத்திரம் கண்டறிவதற்குத் தான் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

உலகின் இரசாயன உர உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு வகையில் தூண்டுதல்களை மேற்கொள்வதன் மூலம் தடைகளை மேற்கொண்டாலும், அவை எவற்றுக்கும் தாம் அஞ்சப் போவதில்லை என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், மக்கள் தம்மைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தது சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கே ஆகும் என்றும் குறிப்பிட்டார்.

சேதன உரத்தைப் பயன்படுத்திப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இவ்விஜயத்தை மேற்கொண்டார். அதன் பின்னர், உடுபந்தாவ பிரதேச சபை வளாகத்தில் உள்ள கழிவு மீள்சுழற்சி மத்திய நிலத்தையும்
ஜனாதிபதி பார்வையிட்டார்.

அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் குணபால ரத்னசேகர, யூ.கே.சுமித், சமன்பிரிய ஹேரத், வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் அத்துல விஜேசிங்க, உடுபந்தாவ பிரதேச சபைத் தவிசாளர் ராஜ் சிசிரகுமார மற்றும் பிங்கிரிய பிரதேச சபைத் தவிசாளர் திமுத் துஷார ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.