முஸ்லிம் சேவையில் மொழிபெயர்ப்பு பூரணப்படுத்தப்படுவதில்லை என ஆதங்கம் வெளியீடு

முஸ்லிம் சேவையில் மொழிபெயர்ப்பு பூரணப்படுத்தப்படுவதில்லை என ஆதங்கம் வெளியீடு

இலங்கை ஒலிபரபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பப்படும் சிங்கள மொழியிலான பேச்சுக்கள் தமிழ் மொழியில் முழுமையாக மொழி பெயர்க்கப்படுவதில்லை என நேயர்கள் மற்றும்  கலைஞர்கள் ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பிலான பதிவொன்றினை முஸ்லிம் சேவை நேயர் கலைஞரும் மூத்த உலமாவும், மூத்த பிராந்திய ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்முஸ்தபா சமூக ஊடகங்களில் இன்று (21) சனிக்கிழமை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"முஸ்லிம் சேவையை விரும்பிக் கேட்கும் அதிகமான நேயர்கள் சிங்கள மொழி தெரியாதவர்களாவே உள்ளனர். அண்மையில் முஸ்லிம் சேவை நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்ட மீண்டும் கடந்த 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு ஒலிபரப்பு ஆரம்பமாகிய போது இலங்கை ஒலிபரபரப்புக் கூட்டுத்தாபன தலைவர்  ஹட்சன் சமரசிங்க முஸ்லிம் சேவையில சிங்கள மொழியில் உரையாற்றினார்.

அது போன்று இன்று (21) சனிக்கிழமை காலை முஸ்லிம் சேவையில் கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாயலில் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொவிட் கொறோனா ஒழிப்பு பாதுகாப்பு மற்றும்  சுகாதார வழிமுறைகளை பின்பற்றும் விழிப்புணர்வு உரை சிங்கள மொழியில் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

இவ்விரு உரைகளும் மிக முக்கியமானதாகும். இருந்தும் முஸ்லிம் சேவை முழுக்க முழுக்க தமிழ் மொழியிலேயே எல்லா நேயர்களும் கலைஞர்களும் விரும்பிக் கேட்கின்றனர்.

அப்படி இருந்தும் அந்த இரு உரைகளையும் பூரணமாக முஸ்லிம் சேவை தமிழ் மொழியில் மக்களுக்கு சொல்லத் தவறியதை சுட்டிக்காட்டுகின்றேன். ஏனென்றால் மக்களுக்கு ஒரு செய்தி தகவல்  பூரணமாக தெளிவாக சென்றடைய வேண்டும்.

தலைவர் ஹட்சன் சமரசிங்கவின் உரையில் நிறைய முஸ்லிம் சமூகம் சார்ந்த வரலாற்று  விடயங்களை சொன்னார். பொலிஸ் பொறுப்பதிகாரி நல்ல பேணுதல் விடயங்களை சொன்னார். எனினும் அவை முமையாக மொழி மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே எதிர்காலத்தில் இந்த செயற்பாட்டை முன்னெடுக்கும் வகையில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவைப் பணிப்பாளருக்கு இது சமர்ப்பணம். இலங்கை வானொலி முஸ்லிம் சேவை அது தன்னுடைய பணிகளை மிக கச்சிதமாக சிறப்பாக நடாத்தி வருகின்றமை பாராட்டுக்குரியது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.