'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதற்குள் சகவாழ்வு அடங்கியிருக்கின்றது: மஹிந்த தேசப்பிரிய

'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதற்குள் சகவாழ்வு அடங்கியிருக்கின்றது: மஹிந்த தேசப்பிரிய

அஷ்ரப் ஏ சமத்

'பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்' என்பதற்குள் சகவாழ்வு அடங்கியிருக்கின்றது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.  

அத்துடன் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பது போல் நாம் அனைவரும் இன, மத வேறுபாடுகளின்றி ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

ஊடகவியலாளர் எம்.ஜே பிஸ்ரின் மொஹமத் எழுதிய 'சகவாழ்வியம்' எனும் நூல் வெளியீட்டு வைபவம் நேற்று (6) சனிக்கிழமை கொழும்பு -06, வெள்ளவத்தை தமிழ் சங்கத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும், எல்லைகள் நிர்ணய ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருமான மஹிந்த தேசப்பிரிய பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின்  சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி பரீனா றுசைக், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் ஆகியோர் நூல் ஆய்வுரையை மேற்கொண்ட இந்த நிகழ்வில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எம்.எம். மொஹமட், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.ஜே.எம். அஸ்ரப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த தேசப்பிரிய,

"ஊடகவியாளார் பிஸ்ரின் மொஹமதின் சகவாழ்வியம் என்ற நூலை இக்காலகட்டத்தில் வெளியிட்டு இருப்பது  சாலச் சிறந்ததாகும். இதனை சிங்கள மொழி மாற்றம் செய்து வெளிக்கெனர வேண்டும். இதற்கு உதவுமாறு தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் மொஹமதை வேண்டிக்கொள்கின்றேன்.

சகாழ்வு என்பது  தேர்தலினைக் குறிக்கின்றது. இலங்கையில்  வாழ்ந்த பிரஜைகளுக்கு  முதன் முதலில் வாக்களிக்கும் உரிமை  1931ஆம் ஆண்டே  கிடைக்கப் பெற்றது. இந்த நூல் வெளியிட்டாளர் பிறந்த அனுராதபுரம் மாவட்டத்தின் நேகம்ப எனும் ஊர் சகவாழ்வியத்திற்கு எடுத்துக்காட்டக்கூடிய ஒரு பிரதேசமாகும்.

அங்கு  தமிழ் பேசும் முஸ்லிம்களும், சிங்களம் பேசும் பௌத்தர்களும் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு பிறந்து, வாழ்ந்த  பிஸ்ரின் சகவாழ்வினைக் கற்றுக்கொண்டதன் விளைவாகவே  அந்த  அனுபவங்களை வைத்தே அவர் சகவாழ்வியம் என்ற  நூலைப்  பகிர்ந்து கொள்கின்றார்.

இந்த  வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் அபாயா, சாரி, தேசிய உடுப்பு, நீண்ட காற்சட்டை அணிந்து ஒரு குடையின் கீழ் சகல இன, மத,  நிற வித்தியாசமின்றி  மூவினங்களை சார்ந்தவர்களும் இங்கு கூடியிருக்கின்றோம்.

இதுவே சகவாழ்வு. ஆனால் நம்மில் இன்னும் சிலர் இன, மத, நிற, குலம் என பிரிந்து நின்று வாழ்கின்றார்கள். நாம் இந்த நாட்டில் சமாதானமாக வாழப் பழகிக் கொள்ளல் வேண்டும்.  

ஒவ்வொரு மதமும் அன்பு சாந்தி சமதானத்தினையே நமக்கு போதிக்கின்றது. இந்த சகவாழ்வியம் என்ற நூல் எழுதி வெளியிட்டமைக்காக ஊடகவியலாளர் பிஸ்ரினை நான் பாராட்டுகின்றேன்" என்றார்.