இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு தமிழகத்தில் சிறப்புத் திட்டங்கள் அறிவிப்பு

தமிழகத்தில் இலங்கை தமிழர்களின் மேம்பாட்டுக்காக, பல்வேறான திட்டங்களை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப் பேரவையில் நேற்று (27) அறிவித்தார்.

அவர்களின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். அதன்படி, இலங்கை தமிழர்கள் முகாம்களில் உள்ள 7,469 பழுதடைந்த வீடுகள் 231 கோடி ரூபாய் செலவில் கட்டித்தரப்படும் என்றும், அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதகாவும் அறிவித்தார்.

மேலும், இலங்கை வாழ் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல், இலங்கை திரும்ப விரும்பும் பகுதிகள் ஆய்வு செய்தல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றிட பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், பொதுத் துறை செயலாளர், முகாம் வாழ் தமிழர்களுக்கான பிரதிநிதி அடங்கிய குழு அமைக்கப்படும்.

அத்துடன், இலங்கை வாழ் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தருவதை அரசு உறுதி செய்யும். மேலும், இலங்கை தமிழ் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ரூபாய் 2,500லிருந்து ரூபாய் 10,000 ஆகவும், கலை, அறிவியல் மாணவர்களுக்கு ரூபாய் 3,000 இல் இருந்து ரூபாய் 12,000 ஆகவும், இளநிலை தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூபாய் 5,000 இல் இருந்து ரூபாய் 20,000 ஆக உதவித் தொகை உயர்த்தப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைத் தமிழர்கள் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.