சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான செயலணிக்கு தலைவரா? சாணக்கியன் கேள்வி

சட்டத்தை மதிக்காதவர் சட்டம் சம்பந்தமான  செயலணிக்கு தலைவரா? சாணக்கியன் கேள்வி

'ஒரு நாடு ஒரு சட்டம்' என்னும் ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டதன் மூலம் தமிழ் மக்கள் பாரிய விளைவுக்கு முகம்கொடுக்க வேண்டிவரும் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஜனாதிபதியினால் இன்று காலை புதிய செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலணிக்கு கலகொடே அத்தே ஞானசார தேரர் தலைமைவகிப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

தற்போது இந்த நாட்டில் இருக்கும் ஒரு நாடு ஒரு சட்டத்தினை அமுல்படுத்துவதற்காக அந்த செயலணி தொடர்பில் வெளியான செய்தியில் பார்க்ககூடியதாகவுள்ளது. இந்த நாட்டில் உள்ள சட்டத்தினை அமுல்படுத்தினாலேயே போதுமானது.

இருக்கின்ற சட்டத்தினை அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்துங்கள் என்பதே இந்த நிலைப்பாடாகும். ஜனாதிபதிக்கு வேண்டப்பட்டவர்கள், தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும், வட - கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு சட்டமும் என்ற நிலைப்பாடில்லாமல் ஒரு சட்டத்தினை அமுல்படுத்துங்கள் என்றே நாங்கள் கூறியிருந்தோம்.

அதனைவிடுத்து புதிதாக ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயணியை உருவாக்குவதன் மூலம் இலங்கை நாட்டின் சட்டத்தினை மதிக்காத ஒருவரை ஜனாதிபதியாக கொண்டுவந்துள்ளனர்.

இந்த சட்டத்திற்கு எதிரான எங்களது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். எதிர்காலத்தில் இதன் ஊடாக தமிழ் பேசும் மக்கள் பாரிய விளைவுகளுக்கு முகம்கொடுக்கும் நிலையுருவாகும்.

இன்று மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடிவருகின்ற நிலைகாணப்படுகின்றது. இன்னும் இரண்டு வருடத்தில் இந்த நாட்டில் பசியினால் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்படும்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் மக்களை திசைதிருப்புவதற்காக போலியான விடயங்களை செய்யாமல், நாட்டு மக்களின் நலனுக்காக செயற்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கின்றேன்" என்றார்.