சர்சையை கிளப்பியுள்ள ஜனாதிபதி செயலணி

சர்சையை கிளப்பியுள்ள ஜனாதிபதி செயலணி

றிப்தி அலி

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டமைக்கு எதிரான கருத்துக்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் சிறைவாசம் அனுபவதித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட ஒருவர் இந்த செயலணியின் தலைராக நியமிக்கப்பட்டமையே இதற்கான பிரதான காரணமாகும்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் ஞானசார தேரரின் பொதுபலசேனா அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஞானசார தேரர் நிகழ்த்திய உரைகள் தொடர்பில் ஐ.சீ.சிபீஆர் சட்டத்தின் 56ஆம் பிரிவின் கீழ் தொடர்பில் குற்றவியல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையினுள் 'ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துதல் தொடர்பாகக் கற்றாராய்ந்து அதற்காகச் சட்டவரைவொன்றைத் தயாரிக்கும் நோக்கிலேயே இந்த ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் ஜனாதிபதியின் செயலர் பி.பீ. ஜயசுந்தரவினால் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிட்டப்பட்ட 2251/30 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பபட்டதிலிருந்து இன்று வரை பல செயலணிகளை நியமித்துள்ளார். அவற்றில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பாதுகாப்பதற்கான செயலணியும், தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர் தலைமையிலான செயலணியும் பலர்த்த எதிர்ப்புகளை சம்பாதித்துள்ளவைகளாகும்.

தேர்தல் வாக்குறுதி

முஸ்லிம் தனியார் சட்டம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம், தேசவழமைச் சட்டம், மலைநாட்டு (கண்டிய) விவாகம் மற்றும் விவாகரத்து சட்டம் போன்ற பல சட்டங்கள் நாட்டில் தற்போது அமுலில் உள்ளன.

இவை எல்லாவற்றினையும் இல்லாதொழித்து ஒரே நாடு ஒரே சட்டம் எனும் எண்ணக் கருவை நடைமுறைப்படுத்துவேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியில் பிரதானமாக குறிப்பிட்டிருந்தார். அது மாத்திரமல்லாமல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரச்சார மேடைகளிலும் இந்த வாக்குறுதி பிரதான பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது.

அது மாத்திரமன்றி முஸ்லிம் தனியார் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்ளவதற்கான தீர்மானங்கள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு அது தொடர்பான வரைபுகள் சட்ட வரைஞர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருட பூர்த்தி நிகழ்வு அனுராதபுரம் - சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தiலைமயகத்தில் நடைபெற்றது.

இதில் பங்ககேற்க சென்ற ஜனாதிபதி, ருவன்வெலிசாயவை வழிபடவும் சென்றிருந்தார். அங்கு அவரைச் சந்தித்த இளம் வயது பிக்கு ஒருவர் 'ஒரே நாடு, ஒரே சட்டத்தை எப்போது உருவாக்குவீர்கள் என கேள்வி எழுப்பியதாகவும், இந்த வாக்குறுதியை இவ்வருட இறுதிக்குள் நிறைவேற்றுவேன் என ஜனாதிபதி உறுதியளித்ததாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கவனத்தை திசை திருப்பவா?

பௌத்த பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைவடைந்து வருகின்ற நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத்தை தூண்டிவிடுவது வழமையாகும்.

அந்த அடிப்படையிலேயே மாடாறுப்பு தடை, நிகாப் மற்றும் புர்காவிற்கான தடை, முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம், காதி நீதிமன்றம் இல்லாமலாக்க நடவடிக்கை போன்றவற்றிக்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்ட சந்தர்ப்பங்களை இங்கு குறிப்பிடலாம்.  

இந்த அடிப்படையிலேயே தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாடு, அத்தியவசியப் பொருட்களின் விலையேற்றம், பொருட்கள் தட்டுப்பாடு, அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் எதிர்ப்பலை போன்றவற்றின் காரணமாக அரசாங்கத்தின் செல்வாக்கு தினந்தோறும்  குறைவடைந்து வருகின்றது.

ஜனாதிபதி செயலணி நியமனம்:

இவற்றினை திசை திருப்பு நோக்கில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP:26 என்றழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டுக்கு செல்வதற்கு முன்னர் இந்த ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் செயலணி ஜனாதிபதி நியமித்தார்.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரைக்கு அமைய ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களின் கீழ் இந்த செயலணி உருவாக்கப்பட்டுள்ளது.  செயலணியின் உறுப்பினர்கள் குறைந்தபட்சம் மாதத்துக்கொருமுறை ஜனாதிபதிக்கு அறிக்கையளிக்க வேண்டும் எனவும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

செயலணி உறுப்பினர்களின் தெரிவானது, அவர்களது விவேகம், திறமை மற்றும் பற்றுறுதி என்பவற்றின் மீது ஜனாதிபதிக்கு உள்ள  மிகுந்த பக்தியும் நம்பிக்கையும் அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அது பற்றிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஞானசார தேரர் தலைவராகவும், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்கவினை செயலாளராகவும் கொண்ட இந்த செயலணியின் ஏனைய 12 உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தகுதிகள் வருமாறு:

1.    பேராசிரியர் தயானந்த பண்டார – முன்னாள் கலைப் பீடாதிபதி, பேராதனை பல்கலைக்கழகம்  

2.    பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க – சிரேஷ்ட விரிவுரையாளர், சமூகவியல் துறை, பேராதனை பல்கலைக்கழகம்  

3.    பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன - சிரேஷ்ட விரிவுரையாளர் மெய்யில் துறை, பேராதனை பல்கலைக்கழகம்

4.    என். ஜி. சுஜீவ பண்டிதரத்ன

5.    இரேஷ் செனெவிரத்ன - சட்டத்தரணி

6.    சஞ்ஜய மாரம்பே - சட்டத்தரணி

7.    எரந்த நவரத்ன

8.    பாணி வேவல

9.    மௌலவி மொஹமட் - காலி உலமா சபை

10.    மொஹமட் இந்திகாப் - விரிவுரையாளர்

11.    கலீலுர் ரஹ்மான் - கொழும்பு மாநகர சபை உறுப்பினர்

12.    அஸீஸ் நிசார்தீன் - சிவில் செயற்பட்டாளர்

இந்த செயலணி நியமனத்தினத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில்; பாரியளவில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் சமூகம் சார்பில் நியமிக்கப்பட்வர்கள் குறித்தும் சமூகத்தில் பலத்த விமர்சங்கள் கிளம்பியுள்ளன.

சிங்களவர்கள் சார்பில் மூன்று பேராசிரியர்கள், இரண்டு சட்டத்தரணிகள் மற்றும் ஒரு பௌத்த சமயத் தலைவர் என பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில், குறித்த விடயத்தில் நிபுணத்துவம் பெற்ற பல திறமையானவர்கள் முஸ்லிம் சமூகத்தில் இருக்கின்ற நிலையில், அவர்களை நியமிக்காமல், எந்தவித நியாயப்படுகளுமின்றி, ஆலோசனையுமின்றி இந்நால்வரும் நியமிக்கப்பட்டது எவ்வாறு என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழ் பிரதிநிதித்துவம்

இதேவேளை, தமிழ் பிரநிதியொருவரேனும் இந்த செயலணியில் நியமிக்கப்படாமை பாரிய விமர்சனத்திற்குள்ளாகியிருந்தது. இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற ஆளும் கட்சி கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனையடுத்து வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று தமிழர்களை இந்த செயலணியில் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தமிழர்களிடையே காணப்படும் பிரிவினை காரணமாகவே இந்த செயலணியின் முதற் கட்ட நியமனத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் உள்ளடக்கப்படவில்லை என செயலணியின் தலைவர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

யாழ்ப்பாண தமிழர்களுக்கு, மலையகத்தவர்களை தமிழர்களை இணைத்துக்கொள்ள விரும்பம் கிடையாது. ஒரு இனத்திற்குள் ஒற்றுமை இல்லாத நிலையில் இவ்வாறன செயலணிக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்யும் போது மிக அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் தமிழ் பிரதிநிதித்துவம் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட வேண்டும். நாம் யாரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. அனைவரையும் ஒரே இனம் என்று தான் பார்கின்றேன். இன அடிப்படையில் அல்லாமல் திறைமையானவர்களுக்கே இந்த செயலணியில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என ஞானசார தேரர் கூறியுள்ளார்.

அதாஉல்லா – பசில்

இதேவேளை, செயலணியின் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆளும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா எதிர்ப்பினை வெளியிட்டார்.

அதாஉல்லாவிற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரரும் குரல் கொடுத்தார். எனினும் '69 இலட்சம் மக்கள் தங்களுக்கு வாக்களித்தது உங்களிடம் கேட்டுவிட்டு செய்ய வேண்டும் என்பதற்காகவல்ல' என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பதிலளித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையில் இந்த கூட்டத்தில் வாக்குவதம் ஏற்பட்டதாக அறிய முடிகின்றது.  

நீதி அமைச்சர்

இதேவேளை, இந்த செயலணி நியமனம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரிவியாது. இது தொடர்பில் தன்னுடன் கலந்துரையாடப்படவில்லை' என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இந்த செயலணி தொடர்பில் நான் மகிழச்சியடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த செயலணி நியமனம் மற்றும் அதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதி அமைச்சர் பதவியினை அவர் இராஜினாமாச் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அலி சப்ரி தனது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினரும், இராஜினாமாச் செய்யக்கூடாது என இன்னொரு சாராரும் வலியுறுத்தி வருவதாக அறிய முடிகின்றது. இதேவேளை, பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவினரும் ஜனாதிபதியின் இந்த நகர்வு தொடர்பில் பலத்த அதிருப்தியில் உள்ளதாக அறிய முடிகின்றது.

ஐக்கிய சமதான கூட்டமைப்பு

இதேவேளை, 'ஐக்கிய சமதான கூட்டமைப்பின் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக கலீலுர் ரஹ்மான் இந்த செயலணியின் உறுப்பினராக நியமிகக்ப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் எமது கட்சி அடுத்த வாரம் கலந்துரையாடவுள்ளது என கூட்டமைப்பின் தவிசாளரான பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். இந்த நியமனத்தினை கலீலூர் ரஹ்மான் ஏற்றுக்கொள்ளமாட்டார் என அவர் குறிப்பிட்டார்.

இதனை மீறி அவர் குறித்த நியமனத்தினை ஏற்றுக்கொண்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத் கூறினார்.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா

இதேவேளை, இந்த நியமனத்தினால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குறிப்பிட்டது.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமீதினால் வெளியிடப்பட்டிருந்த இந்த அறிக்கையில் இடத்திலும் ஞானசார தேரரின் பெயர் குறிப்பிடவில்லை. மாறாக சர்ச்சைக்குரிய நபர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த செயலணியின் நியமனத்திற்கு எதிராக 24 முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டாக இணைந்தும் அறிக்கையொன்றினை வெளியிட்டது. குறித்த அறிக்கையிலும் ஞானசார தேரரின் பெயர் குறிப்பிடவில்லை.

சிறுபான்மை கட்சிகள்

பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தை இந்த ஜனாதிபதி செயலணி கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகள் அறிவித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி, தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளோட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ஆகிய கட்சிகள் கூட்டாக இணைந்தே இந்த அறிவிப்பினை மேற்கொண்டுள்ளன.

குறித்த கட்சித் தலைவர்களின் சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன்போது நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில் ஒன்றாக இது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஊடக மாநாடு

இதேவேளை, குறித்த ஜனாதிபதி செயலணி தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் மாநாடொன்றை ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.

இதில் ஞானசார தேரர் மற்றும் பேராசிரியர் சுமேத சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன் மூலம் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேடை அமைத்துக்கொடுத்திருந்தது.

இலங்கைக்குள் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதைச் செயற்படுத்துவதற்கான ஆய்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்கான பொறுப்பே எமக்கு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அதன் உறுப்பினர் பேராசிரியர் சுமேத சிறிவர்தன, தவிர சட்டத்தை இயற்றுவதற்கான அதிகாரம் இந்தச் செயலணிக்கு வழங்கப்படவில்லை என்றும் அது, அரசியலமைப்புச் சபையினால் முன்னெடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்து வெளியிட்ட ஞானசார தேரர்,

"அனைவரும் ஒன்றுபட்டே இக்கடமையினை நிறைவேற்றுவோம். ஒரே நாடு ஒரே சட்டம் என்ற சட்ட வரைபு அறிக்கை அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்று தயாரிக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன்.

நீதியமைச்சினால் இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைபுகள் மற்றும் திருத்தங்களை ஆராய்ந்து  தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படும். பல்கலைக்கழகம், உயர்க்கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து இளைஞர், யுவதிகளும், தங்கள் யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை இந்தச் செயலணிக்கு வழங்க வேண்டுமென்று அழைப்பு விடுக்கின்றேன்.

இது தொடர்பில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், மத மற்றும் சிவில் அமைப்புகள் மற்றும் குழுக்களுடனும் தங்களுடைய கருத்துகளைப் பரிமாற்றிக்கொள்ள தாங்கள் எதிர்பார்க்கின்றோம். மறைமுக நிகழ்ச்சி நிரல் இல்லாமல் வரும் அனைவருக்கும் கலந்துரையாடலுக்கான கதவுகள் திறந்திருக்கும்" என்றார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டின் மூலம் ஞானசார தேரரின் கருத்துக்கள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவின் மூலம் சகல ஊடகங்கள் வழியாகவும் மக்களைச் சென்றடைய மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.