றியாஜ் பதியுதீனை நிபந்தனையுடன் விடுவிக்குமாறு உத்தரவு

றியாஜ் பதியுதீனை நிபந்தனையுடன் விடுவிக்குமாறு உத்தரவு

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் சகோதரரான றியாஜ் பதியுதீனை நிபந்தனையுடன் விடுவிக்குமாறு உயர் நீதிமன்றம் இன்று (15) திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் விடியல் இணையத்தளம் சிரேஷ்ட சட்டத்தரணி றுஸ்தி ஹபீபினை தொடர்புகொண்டு வினவியது. இதற்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

"குற்றப்புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள றியாஜ் பதியுதீனினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பயங்காரவது தடுப்பு சட்டத்தின் 11ஆம் பிரிவின் கீழ் நிபந்தனையுடன் அவரை விடுவிப்பு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கமைய, கொழும்பில் இருந்து வெளி நகரங்களுக்கு செல்லத் தடை, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகிய கையெழுத்திட வேண்டும் மற்றும் வெளிநாடு செல்லத் தடை போன்ற  நிபந்தனைகளுடன் தடுப்புக் காவலில் உள்ள அவரை விடுவிப்பு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது" என்றார்.

இந்த மனு மீதான விசாரணைகளில் றியாஜ் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான  என்.எம். சஹீட், றுஸ்தி ஹபீப் மற்றும் புலஸ்திஹேவமான ஆகியோர் ஆஜராகினர்.