ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை

ஜயந்த கெட்டகொட 9ஆவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவராக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (21) உறுதியுரை செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் உறுதியுரை செய்து கொண்ட அவர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள்
பதிவேட்டில் கையொப்பமிட்டார்.

அஜித் நிவாட் கப்ரால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தமையினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதற்காக ஜயந்த கெட்டகொட, கடந்த ஜூலை மாதம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்தார்.

கொழும்பு லும்பினி கல்லூரியின் பழைய மாணவரான ஜயந்த கெட்டகொட, கட்புல ஆற்றுகைக் கலைகள் பல்கலைக்கழகத்தின் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்பான டிப்ளோமாதாரி ஆவார்.

1991 இல் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடுவலை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்ட அவர் 1999 மேல் மாகாண சபைக்குதெரிவாகினார்.

2000ஆம் ஆண்டில் முதன்முறையாக பாராளுமன்றத்துக்குத் தெரிவான கெட்டகொட, இன்றுடன் ஐந்து முறை பாராளுமன்ற உறுப்பினராக உறுதியுரை செய்துள்ளார்.