ஓமிக்ரோன் பிறழ்வைக் கண்டறிவதற்கான வசதிகள் இலங்கையில் உள்ளன: சுகாதாரத் தரப்பு

 ஓமிக்ரோன் பிறழ்வைக் கண்டறிவதற்கான வசதிகள் இலங்கையில் உள்ளன: சுகாதாரத் தரப்பு

ஓமிக்ரோன் பிறழ்வு பரவுதல் தொடர்பாக உரிய புரிதல் இலங்கையில் இருப்பதாகவும், சிலவேளை நாட்டுக்குள் வைரஸ் நுழைந்தால் மரபணு பரிசோதனையின் மூலம் அதனை அடையாளம்காண்பதற்கு ஆய்வுகூட வசதிகள் உள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியது.

“ஓமிக்ரோன் வைரஸை தடுப்பதற்கு நாடு தயார்” என்ற தலைப்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நுண்நுயிர் எதிர்ப்பிகள் விஞ்ஞானம் மற்றும் மூலக்கூறு விஞ்ஞானக் கல்விப் பிரிவின் தலைவர் பேராசிரியர் நீலிக்கா மலவிகே, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எச்.எஸ்.முனசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உயிர் அணு உயிரியல் விஞ்ஞான கல்விப் பிரிவின் தலைவர் கலாநிதி சந்திம ஜீவந்தர, சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் ஆகியோர் கலந்துகொண்ட ஊடக சந்திப்பு ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்கவினால் நடத்தப்பட்டது.

இதுவரை இருந்த கொரோனா வைரஸ் பிறழ்வு 04ஐ விடவும் ஒமிக்ரோன் பிறழ்வு மிகவும் வேகமாக பரவக்கூடியதுடன், கொவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களுக்கும்.

இது மீண்டும் தொற்றக்கூடுமென்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் நுண்நுயிர் எதிர்ப்பிகள் விஞ்ஞானம் மற்றும் மூலக்கூறு விஞ்ஞான கல்விப் பிரிவின் தலைவர் பேராசிரியர் நீலிக்கா மலவிகே சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் இரண்டு மூன்று வாரங்களுக்குள் ஓமிக்ரோன் பிறழ்வு பற்றி தெளிவான கருத்துக்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டிய நீலிக்கா மலவிகே அவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி உயர்மட்டத்தில் இருக்குமாயின் மாறுபட்ட பிறழ்வுகளுக்கு அஞ்ச வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.

உலகின் 24 நாடுகளில் இதுவரை ஓமிக்ரோன் பிறழ்வு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக உலக சுகாதார பிரிவு விசேட அவதானத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பாரிய அர்ப்பணிப்பு மற்றும் தலையீடுகள் காரணமாக கொவிட் கட்டுப்படுத்தலில் உலகின் உயர் நிலைக்கு நாடு அடைந்திருப்பதாகவும், புதிய பிறழ்வை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியப்படுவதோடு, உரிய சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவது அனைவரினதும் கடமையாகும் என்று சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எச்.எஸ்.முனசிங்க குறிப்பிட்டார்.

இதுவரை தடுப்பூசிகளைப் பெறாதவர்கள் உடனடியாக தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டியதோடு, பூஸ்டர் தடுப்பூசியின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதனால் ஒமிக்ரோன் வந்தாலும் அனாவசிய அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ளத் தேவையில்லை என்றும் குறிப்பிட்ட கலாநிதி சந்திம ஜீவந்தர அவர்கள், பொதுமக்கள் உரிய சுகாதார பரிந்துரைகளைப் பின்பற்றுவது மிகவும் முக்கியம் என்றும் தெளிவுபடுத்தினார்.

நோய்க்கு பயப்படுவதற்குப் பதிலாக சுகாதாரப் பரிந்துரைகளைப் பின்பற்றி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்வதன் முக்கியத்துவத்தையும் அவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

தற்போது அரசாங்கம் செயற்படுத்துகின்ற கொவிட் தடுப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமானதாக உள்ளதோடு, பண்டிகை காலத்தில் பயணங்களை சுருக்கிக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் அவர்கள் குறிப்பிட்டார்.