பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள இம்ரான் கான்

பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ள இம்ரான் கான்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

இது தொடர்பில் இன்று (08) திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை இம்ரான் பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் இன்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தனது பேஸ்புகில் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை 9 அரச தலைவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றியுள்ளனர். இதில் இறுதியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

இதேவேளை, பாகிஸ்தானின் ஜனாதிபதிகளான பீல்ட் மார்சல் முஹம்மத் ஐயூப் கான் 1963ஆம் ஆண்டும், சுல்பிகார் அலி பூட்டோ 1975ஆம் ஆண்டும் பாராளுமன்றத்தில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ,  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.  

இதேவேளை, இலங்கைக்கு எதிராக ஜெனிவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பெப்ரவரி 23ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாக சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.