மீண்டும் பாராளுமன்றம் செல்லும் எண்ணம் இல்லை: அலி சப்ரி

மீண்டும் பாராளுமன்றம் செல்லும்  எண்ணம் இல்லை: அலி சப்ரி

மீண்டும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எண்ணம் இல்லை எனவும் பாராளுமன்றத்தில் இருப்பதை விட சட்டத்துறையில் ஈடுபடுவதையே விரும்புவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

சட்டத்தரணி பிரேமரத்ன ஜயசிங்கவால் எழுதப்பட்ட குற்றவியல் சட்டம் தொடர்பான நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்தும் கருத்து வெளியிட்ட அவர், நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

வழக்குரைஞர் தொழிலுக்கு பொதுமக்கள் மிக முக்கியமான காரணிகள் என்றும், மக்களின் நலனை கருத்தில் கொள்ளும்போது மற்ற அனைத்து அம்சங்களும் இரண்டாம் பட்சம் என்றும் அவர் கூறினார்.

30க்கும் மேற்பட்ட குழுக்கள் செயற்படுவதாக கூறி, நாட்டில் சில சட்டங்கள் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக புதுப்பிக்கப்படவில்லை என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சமூக ஊடகங்கள் ஊடாக மக்கள் முறைப்பாடுகளை சமர்ப்பித்து வருவதாகவும், பிரதம பீடாதிபதிகள் விசேட நீதிமன்ற முறைமைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.