இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்

இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்தல்

இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இஸ்லாம் தரம் 6 (சிங்களம்),  இஸ்லாம் தரம் 6 (தமிழ்), இஸ்லாம் தரம் 7 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (சிங்களம்), இஸ்லாம் தரம் 10 (தமிழ்) மற்றும் இஸ்லாம் தரம் 11 (தமிழ்) ஆகிய பாடநூல்களையே பெற்றுக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயிலப்பெருவினால் சகல தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் பாடநூல்கள் நேரடியாக விநியோகிக்கப்படும் பாடசாலைகளின் அதிபர்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது.  

மேற்குறிப்பிட்ட பாடநூல்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளமையினால் அப்பாடநூல்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதை இடைநிறுத்துமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது மாத்திரமல்லாமல், குறித்த பாடநூல்கள் ஏற்கனவே மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பின் அவற்றை திருப்பி பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நூல்களுக்கு பதிலாக புதிய திருத்தப்பட்ட நூல்களை வழங்குவதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.