சட்டங்களினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய சமூக ஊடகங்களின் போக்கு

சட்டங்களினால் ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய சமூக ஊடகங்களின் போக்கு

ஒருவர் தனது கருத்துக்களை படைக்கவும், பகிரவும் இணையத்தளத்தின் ஊடாக மூலம் இணைக்கப்பட்ட ஒரு தளம் அல்லது  மேடையே சமூக ஊடகமாகும். இன்றைய உலகில் சமூக ஊடகங்களே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன.

சமூக ஊடகங்கள் குறுகியதொரு காலப் பகுதியில் மக்கள் மனதில் இடம்பிடித்தமை முக்கிய விடயமாகும். இதற்காக சமூக ஊடகங்கள் இளைஞர்களினையே தெரிவுசெய்தது. எவ்வாறாயினும் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் முதியோர்களையும் சமூக ஊடகங்கள் ஈர்த்தன. இதற்கான பிரதான காரணிகளில் முதன்மையானது ஸ்மார்ட் போன்களின் அறிமுகமாகும்.

பேஸ்புக், டுவிட்டர், வட்ஸ்அப், யுடியூப், இன்ஸ்டர்கிரேம் உள்ளிட்ட சமூக ஊடகத் தளங்கள் இளைஞர்கள் மத்தியில் பிரபல்யமாக பேசப்படுவதாகும். சமூக ஊடகங்களின் வருகியினை அடுத்து பாரம்பரிய ஊடகங்களான பத்திரிகை, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் செல்வாக்கு குறைந்துகொண்டு செல்கின்றது.

சமூக ஊடகங்களில் பெரும்பாலான் செய்தியை உருவாக்குவதும், பகிருவதும் தனிமனிதராகிய நுகர்வோரேயாகும். இதனாலேயே எல்லோராலும் விரும்பப்படுகிற ஒரு ஊடகமாக சமூக ஊடகம் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில் சமூக ஊடங்களின் ஊடாக பல்வேறு இணையத்தளங்கள் உருவாகியுள்ளதுடன் பிரபல்யமும் அடைந்துள்ளன. இணையத்தங்கள், சமூக ஊடகங்களின் ஊடாகவே சந்தைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் இந்த சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு வகையான அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய ஊடகமொன்றை ஆரம்பிப்பதென்றால் பல கோடி ரூபா பணமும், ஆளணியும், உபகரணங்களும் தேவை.

ஆனால் சமூக ஊடகங்களின் வருகையினை அடுத்து தனிநபர் ஒருவரினால் குறிப்பிட்ட தொகை பணத்துடன் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தள வசதி ஆகியவற்றுடன் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகமொன்றினை இலகுவாக ஆரம்பிக்க முடியும்.

இந்த இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் ஊடாக பல்வேறு  வகையான விடயங்களை குறிப்பிட்ட சில வினாடிகளில் முழு உலகிற்கும் கொண்டுசெல்ல முடியும்.

எனினும் இன்றைய காலகட்டத்தில் இந்த இணையத்தளங்கள் தவறான வழியில் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக இனவாத, மதவாத பிரசாங்கள், போலி செய்திகளை பரப்புதல், குறிப்பிட்ட சில நபர்களை தாக்குதல் போன்ற விடயங்களை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும்.

கடந்த 2018ஆம் ஆண்டு கண்டி – திகன பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற பெற்ற கலவரம், கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் சம்பவம் மற்றும் மே மாதம் வட மேல் மாகாணத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற கலவரம் ஆகிய காலப் பகுதிகளில் சமூக ஊடகங்கள் நாட்டில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருந்தன.

குறித்த சம்பவங்கள் வீரியமடைய சமூக ஊடகங்களே காரணம் என அரசாங்கத்தினால் தெரிவிக்கப்பட்டே இந்த தற்காலி தடை மேற்கொள்ளப்பட்டது. எவ்வாறாயினும் சமூக ஊடகங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகள் மற்றும் போலிப் பிரசாங்களை நாட்டில் கட்டுப்படுத்துவது அரசாங்கத்திற்கான பாரிய சவாலாக இன்று மாறியுள்ளது.

இது தொடர்பில் சில சட்டங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளினால் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இவ்வாறான நிலையில் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தீர்மானிக்கப்பட்;டது. இதனையடுத்து 2012ஆம் ஆண்டு இது தொடர்பான தீர்மானமொன்று அமைச்சரையில் மேற்கொள்ளப்பட்டது.  

இதற்கமைய இணையத்தள பதவிற்காக 25,000 ரூபாவும், வருடாந்த புதுப்பித்தல் கட்டணமாக 10,000 ரூபாவும் ஊடக அமைச்சினால் அறவிடப்படுகின்றது. இந்த கட்டணத்தில் மாற்றம் கொண்டுவருமாறு பல தடவைகள் இணையத்தள உரிமையாளர்கள் மற்றும் ஊடக அமைப்புக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

'இந்த பதிவு நடவடிக்கை கட்டாயமானதொன்றால்ல. எனினும் இணையத்தளங்களை ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற செயற்பாட்டின் கீழே இந்த பதவு நடவடிக்கை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுகின்றது' என ஊடக அமைச்சின் அபிவிருத்தி பிரிவிற்கு பொறுப்பான பணிப்பாளர் ஜே.டப்ளியூ.எஸ்.கித்சிறி தெரிவித்தார்.

'ஊடக அமைச்சில் இணையத்தளமொன்றினை பதிவுசெய்வதன் ஊடாக அரசாங்கத்தின் அங்கீகாரத்தினை பெற முடிவதுடன் தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அரச ஊடக அடையாள அட்டையினையும் பெற முடியும்' என அவர் குறிப்பிட்டார்.

2012ஆம் ஆண்டு முதல் கடந்த ஜுலை மாதம் வரை சுமார் 180 தமிழ், சிங்கள மற்றும் ஆஙகில இணையத்தளங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதில் அதிகம் தமிழ் இணையத்தளங்களேயாகும் என அமைச்சின் பணிப்பாளா கூறினார்.

இந்த இணையத்தள பதிவுவிற்கான மதிப்பாய்வு சுயாதீனமான நியமிக்கப்பட்ட குழுவொன்றினாலேயே மேற்கொள்ளப்படுகின்றது. இதுவரை பதிவுசெய்யப்பட்ட இணையத்தளமொன்றிக்கு எதிராக எந்தவித முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை. அவ்வாறு முறைப்பாடு எதுவும் கிடைக்கப் பெற்றால், குறித்த சுயாதீன குழுவினால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் பதிவுசெய்யப்படாத இணையத்தளங்களிற்கு எதிராக எமது அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுப்பது சிரமமாகும் என பணிப்பாளர் கித்சிறி மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் ஊடாக நாட்டில் மேற்கொள்ளப்படும் இனவாத செயற்பாடுகளை இலங்கை தொலைத்தொடர்புபடுத்தல் ஆணைக்குழு மற்றும் இணைய பாதுகாப்புக்கான தேசிய நிலையம் ஆகிய நிறுவனங்கள் கண்காணித்து வருகின்றன. இதற்கு மேலதிகமாக பொலிஸ் தலைமையகத்தில் தனியான பிரிவொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சில சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கமைய இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டமொன்றினை தயாரிக்கும் நடவடிக்கையில் டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சு நடவடிக்கை ஈடுபட்டுள்ளது.

அதேபோன்று, இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் ஊடக அமைச்சருக்கு முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டு தொடர்ச்சியாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.

எவ்வாறாயினும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்களுக்கான கட்டுப்பாடுகள் அவசியம் என ஒரு தரப்பினர் தெரிவிக்கின்ற நிலையில் இந்த கட்டுபாடு அடிப்படை உரிமை மீறல் மற்றம் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு என மற்றுமொறு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

எனினும் இந்த வரைபுச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தொடர்பாக யாருக்கும் இதுவரை தெரியாது. குறித்த வரைபுச் சட்டம் வெளியாகிய பின்னரே இது தொடர்பில் கருத்துக் கூற முடியும் என ஊடக ஆய்வாளரான நாலக்க குணவர்த்தன தெரிவித்தார்.

எவ்வாறாயினும் இணையத்தள பதிவு நடவடிக்கை என்பது விருப்பத்திற்குரியதே தவிர கட்டாயமானதல்ல. இந்த பதிவின் ஊடாக ஊடக அடையாள அட்டையினை பெற முடியும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அடுத்த தேர்தலொன்றை இலக்காகக் கொண்டு நாட்டில் தற்போது இனவாத தீ சமூக ஊடகங்களின் ஊடாக பரப்படுகின்றது. இந்த தீ, அடுத்த தேர்தலின் பிற்பாடு மற்றுமொரு வடிவத்தில் சமூக ஊடங்களில் பரப்பப்படும். எவ்வாறாயினும் இதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய பொறிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதன் ஊடாகவே இதற்கு தீர்வு காண முடியும். சிலாபம் பிரதேசத்தினைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் பேஸ்புகின் உழஅஅநவெள பகுதியில் பதவிட்டதினை அடுத்து இனவாதத்தினை தூண்டினார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

எனினும் குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக திவயின பத்திரிகையில் முன்வைக்கப்பட்ட கருக்கலைப்பு தொடர்பான போலி குற்றச்சாட்டுக்கு எதிராக அரசாங்கத்தினால் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இவற்றுக்கு பிரதான காரணம் இந்த விடயம் தொடர்பில் ஒழுங்கான சட்டமூலமொன்றின்மையே காரணமாகும். இலங்கையில் சமூக ஊடகங்கள் அறிமுகமாகி ஒரு தசாப்தத்தினை தாண்டியுள்ள நிலையிலும் அதன் ஊடாக மேற்கொள்ளப்படும் தவறான செயற்படுகளுக்கு எதிராக  இதுவரை பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பாடாமை பாரிய தவறாகும்.

இவ்வாறான நிலையில் நாட்டில் அண்மையில் ஏற்பட்ட இனவாத சூழ்நிலைகளை கருத்திற்குகொண்டு சமூக ஊடகங்கள் மற்றும் இணையத்தளங்கள் தொடர்பில் நாட்டில் சட்டமொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும். 

றிப்தி அலி