இனவாத தேரில் தொடரும் ரதன தேரரின் அரசியல் பயணம்

இனவாத தேரில் தொடரும் ரதன தேரரின் அரசியல் பயணம்

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அடிப்படைவாதி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினால் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலினை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு வகையான இனவாதப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதில் குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போலி இனவாதப் பிரசாரம்;  மிகப் பிரபல்யமாக பேசப்பட்டதொன்றாகும்.

அதுரலிய ரதன தேரர்

அரசியல் ரீதியாக தோல்வியுற்றவர்களினாலேயே இந்த இனவாத பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான அதுரலிய ரத்ன தேரனினாலும் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது அரசியலில் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ள அதுரலிய ரத்ன தேரர், தனது செல்வாக்கினை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரிப்பதற்காவே இந்த நடவடிக்கையினை மேற்கொள்வதாக சிங்கள நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு எதிராக அதுரலிய ரத்ன தேரரினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து இனவாதப் பிரசாரங்களும் தோல்வியிலேயே முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  1962ஆம் ஆண்டு பிறந்த அதுரலிய ரத்ன தேரர், கம்பஹா மாவட்ட மக்கள் பிரதிநிதியாக 2004ஆம் ஆண்டு பாராளுமன்றம் நுழைந்தார்.

ஜாதிக ஹெல உருமய

திலக் கருணாரட்னவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சிஹல உருமய என்ற கட்சியே பின்னர் ஜாதிக ஹெல உருமய என பெயர் மாற்றப்பட்டது. இந்த கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் அதுரலிய ரத்ன தேரரும் ஒருவராவார்.

2003ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆட்சியிலிருந்து ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மே;றகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக இந்த கட்சி நாடளாவிய ரீதியில் பாரிய பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்ததை அடுத்து 2004ஆம் ஆண்டு ஏப்ரல் 2ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 225 ஆசனங்களில் ஒன்பது ஆசனங்களை ஜாதிக ஹெல உருமய கைப்பற்றியது.

பௌத்த தேரர்களான இந்த ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊடாக முதற் தடவையாக தேரர்கள் பாராளுமன்றம் சென்றமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் இந்த கட்சிக்குள் பல தடவைகள் பாரிய பிளவுகள் இடம்பெற்ற போதிலும் தனது பாராளுமன்ற உறுப்புரிமையினை அதுரலிய ரத்ன தேரர் 2004ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை பாதுகாத்து வருகின்றார்.

2004ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட ஜாதிக ஹெல உருமய 2010ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்டது. எனினும் இந்த தேர்தலில் குறைந்தளவான ஆசங்களையே கைப்பற்றியது.

பின்னர் 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இந்த கட்சி மைத்ரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்ததுடன் பாராளுமன்ற தேர்லில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டு மூன்று ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியது.

இதில் அதுரலிய ரத்ன தேரர், தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எவ்வாறாயினும் 2004, 2005, 2010 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற அனைத்து தேர்தல்களிலும் இவர் முன்னிலை பேச்சாளராக செயற்பட்டார்.

எனினும் 2015ஆம் ஆண்டின் பிற்பாடு ஜாதிக ஹெல உருமயவிற்குள் ஏற்பட்ட பிளவினை அடுத்து அதுரலிய ரத்ன தேரர் அக்கட்சியிலிருந்து ஒரங்கட்டப்பட்டார். இதனால் பாராளுமன்றத்தில் சுயாதீனமா செயற்படவுள்ளதாக அறிவித்த அவர், ஜாதிக ஹெல உருமய அங்கம் வகிக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்டார். எனினும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நல்லுறவினை பேணியே வந்தார்.

இவ்வாறான நிலையில் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற அரசியல் ஸ்திரத்ன்மையின் போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவிற்கு இவர் ஆதரவளித்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த ஆதரவளிப்பின் ஊடாக மக்கள் மத்தியில் தான் இழந்துள்ள செல்வாக்கினை கட்டியொழுப்ப அதுரலிய ரத்ன தேரரினால் முடியவில்லை. இவ்வாறான நிலையில் அடுத்த தடவை எவ்வாறு பாராளுமன்றம் செல்ல முடியும் என தவித்துக் கொண்டிருந்த இவருக்கு சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான குழுவினால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல் தீனி போட்டதாக இருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரம்

ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தினை மேற்கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்ததினைப் போன்று இந்த தற்கொலை தாக்குதலினை அடிப்படையாக வைத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரசாரத்தினை முன்னெடுத்து பிரபல்யமடைய முயற்சித்தார்.

இவரின் இந்த பிரசார செயற்பாடு கட்டுக்கடுங்காத நிலையில் சென்றபோதும் அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளாமை பாரிய தவறாகும். எவ்வாறாயினும் இவரது பிரசார நடவடிக்கைகள் அனைத்து தோல்வியிலேயே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கு ஆதராவாக கூட்டு எதிர்க்கட்சியினரால் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்களும் தயாராக விருந்தனர். இந்த நம்பிக்கையில்லா பிரேரணையினை வெற்றி கொள்வதன் ஊடாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்ப கூட்டு எதிர்க்கட்சியினர் தயாராவிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் றிசாத் பதீயுதீனை அமைச்சர் பதவியிலிருந்தும், அசாத் சாலி மற்றும் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரினை ஆளுநர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக அதுரலிய ரத்ன தேரர் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டார்.

இதனையடுத்து அனைத்து முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோர் கூட்டாக இணைந்து தமது பதவியினை இராஜினாமாச் செய்தனர். இதனால் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செல்வாக்கு அதிகரித்ததுடன் கூட்டு எதிர்க்கட்சியின் பகல் கனவிற்கு ஆப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அதுரலிய ரத்ன தேரரை கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுன்ற குழுக் கூட்டத்தில் கடுமையாக விமர்;சித்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த ஓகஸ்ட் 11ஆம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்ள இவர் முயற்சித்த போது, அதற்கு குறித்த கட்சியின் தலைமை பீடம் அனுமதி வழங்கவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

இதனையடுத்து குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டொன்றினை முன்வைத்தார். எனினும் குற்றப்புலனாய்வு பிரிவினரின் நடுநிலையான விசாரணையினால் குறித்த வைத்தியர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனுக்கு எதிராக அதுரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள போலிக் குற்றச்சாட்டினால் இன்று எமது நாட்டின் வைத்திய துறை சர்வதேச ரீதியில் பாரிய சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட இரண்டு விடயங்களிலும் பாரிய தோல்வியினை அதுரலிய ரத்ன தேரர் எதிர்நோக்கியதுடன் சிங்கள மக்கள் மத்தியில் காணப்பட்ட குறைந்தளவான செல்வாக்கினையும் தற்போது இழந்துள்ளமையினை அவதானிக்க முடிகின்றது.

இவ்வாறான நிலையில் கல்முனை உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக கல்முனை சென்ற  அதுரலிய ரத்ன தேரருக்கு முஸ்லிம் தரப்பினரால் வழங்கப்பட்ட தெளிவூட்டளினை அடுத்து குறித்த விடயத்திலிருந்து அவர் பின்வாங்கினார்.

மட்டக்களப்பு கொம்பஸ்

இவ்வாறான நிலையில் தற்போது அவர் கையில் எடுத்துள்ள விடயம் தான் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிரமமான புணானையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கொம்பஸ் விவகாரமாகும்.

இந்த கொம்பஸ் விவகாரம் தொடர்பில் அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கருத்து தெரிவிக்கையில்,

'மட்டக்களப்பு கொம்பஸினை ஒருபோதும் அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடியாது. எனினும் இந்த விவகாரத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட எப்போதும் தயாராகவுள்ளோம்.

இந்த பல்கலைகழகத்தின் முகாமைத்துவ செயற்பட்டில் 50:50 என்ற அடிப்படையில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும். சவூதி அரேபியாவின் ஜித்தா நகரினை தளமாகக் கொண்டு செயற்படும் அல் ஜுபைல் நன்கொடை மன்றத்தின் ஊடாக உலகிலுள்ள பல நாடுகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக நிதியுதவி வழங்கப்படுகின்றது.

அந்த அடிப்படையிலேயே குறித்த அமைப்பினால் மட்டக்களப்பு கொம்பஸின் நிர்மாணப் பணிக்கு வட்டியின்றி இலகு கடன் அடிப்படையில் கடனுதவி வழங்கப்பட்டது. இந்த நிதியினை பல்கழைக்கழக கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து ஐந்து வருடங்களின் பின்னர் 15 வருடங்களுக்குள் செலுத்தி முடிக்க வேண்டும். இங்கு எந்தவித ஷரீஆ கற்கைநெறியும் கற்பிக்கப்படவில்லை.

அதேபோன்று சவூதி நிதியத்தின் ஒரு தலையீடும் இந்த பல்கலைக்கழகத்தில் இல்லை. இந்த நிர்வாகிகளாக எமது நாட்டினை சேர்ந்தவர்களே உள்ளனர். இலாப நோக்கமற்ற அடிப்படையிலான இந்த பல்கலைக்கழகத்தின் ஊடாக கிடைப்பெறும் வருமானத்தில் 90 சதவீதமானவை பல்கைலக்கழத்திற்கே செல்லும். மிகுதி 10 சதவீதத்தினை மாத்திரமே கொம்பஸின் பணிப்பாளர்கள் பெற முடியும்' என்றார்.

இவ்வாறன நிலையில் இந்த பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்வதற்காக நிதி அமைச்சர், உயர் கல்வி அமைச்சர் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஆகியோரைக் கொண்ட அமைச்சரவை உப குழுவொன்றினை அமைச்சரவை நியமித்துள்ளது.

இந்த குழுவின் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அதுரலிய ரத்ன தேரர், குறித்த கொம்பஸிற்கு எதிரான பொய் பிரச்சாரத்தினையும் முன்னெடுத்துள்ளார்.

இதன் ஒரு அங்கமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த கொம்பஸிற்கு பலவந்தமாக நுழைந்து குறித்த பல்கலைக்கழகத்தினை பார்வையிட்டார். இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு கொம்பஸிற்கு எதிராக மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை (19) மக்கள் சந்திப்பொன்றையும் ஆர்ப்பாட்டமொன்றினையும் அவர் ஏற்பாடு செய்திருந்தார். தமிழ் மக்களினால் தோற்கடிக்கப்பட்ட சில தமிழ் அரசில்வாதிகளும் அவர்களின் ஆதரவாளர்கள் மாத்திரமே இதில் கலந்துகொண்டனமை குறிப்பிடத்தக்கது.

சஹ்ரான்களை உருவாக்கும் ஹிஸ்புல்லாவின் பல்லைக்கழகத்தை அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருமாறு இதன்போது கோரிக்கை விடுத்தனர்.  அத்துடன் இந்த பல்லைக்கழகமானது இஸ்லாமிய தீவிரவாத தற்கொலைதாரிகளை உருவாக்குவதற்கும், மதவாத உரமூட்டும், மூளைச்சலவை செய்யும் கோட்பாடு சார்ந்த இடமாகும் எனவும் ஆர்பாட்டக்கார்கள் குற்றஞ்சாட்டினர்.

எனினும் குறித்த நிகழ்வு எதிர்பார்த்த மக்கள் ஆதரவின்றி பிசுபிசுத்துப் போனமை குறிப்பிடத்தக்கது. எவ்வாறாயினும் முஸ்லிம்களுக்கு எதிராக அதுரலிய ரத்ன தேரரினால் தற்போது முன்வைக்கப்படும் போலிப் பிரசாரங்களை சிங்கள மக்கள் கணக்கிலெடுப்பதில்லை.

அது மாத்திரமல்லாமல் தமிழ் மக்களின் ஆதரவுடன் இந்த பிரசாரங்களை முன்னெடுக்க அவர் முயற்சித்து வருகின்றார். எனினும் அதற்கு தமிழ் மக்கள் இதுவரை சந்தர்ப்பம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் அதுரலிய ரத்ன தேரரினால் முன்வைக்கப்படும் பிரசாரங்கள் போலியானவை என்பதனை முஸ்லிம் மக்கள் ஏனைய சமூகத்தினருக்கு ஊடனடியாக தெரிவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது கட்டாயமாகும். 

-றிப்தி அலி-