பொலிஸாரின் ஊழலை அம்பலப்படுத்திய செய்தி ஆசிரியருக்குக் கொலைமிரட்டல்; பொலிஸ்மா அதிபர் தலையிட கோரிக்கை

பொலிஸாரின் ஊழலை அம்பலப்படுத்திய செய்தி ஆசிரியருக்குக் கொலைமிரட்டல்; பொலிஸ்மா அதிபர் தலையிட கோரிக்கை

சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய ‘சதிஅக அருண’ மற்றும் ‘தினபதா அருண’ பத்திரிகைகளின் ஆசிரியர் சமிந்த சேனாரத்னவுக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

இது தொடர்பில் சுதந்திர ஊடக இயக்கத்தின் ஏற்பட்டாளர் லசந்த டி சில்வா மற்றும் செயலாளர் ஹனா இப்ராஹீம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த மார்ச் 15ஆம் திகதி அருண பத்திரிகையில் 'திடீரெனப் பணக்கார்களாக மாறும்  பொலிஸார்' என்ற தலைப்பில் கட்டுரை பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகச் சுதந்திர ஊடக இயக்கம் இது தொடர்பில் வினவியபோது ஊடகவியலாளர் சமிந்த சேனாரத்ன பதிலளித்தார்.

மேலும்  இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம்  புகார் அளித்துள்ளதுடன், CIB 3 272/143 என்ற முறைப்பாட்டிற்கு மேலதிகமாகத் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி பொலிஸ்மா அதிபரிற்கு எழுத்து மூலமான கடிதம் ஒன்றையும்  அனுப்பியதாக ஊடகவியலாளர் சமிந்த சேனாரத்ன தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சமிந்த சேனாரத்னவிற்கு 0712293495 என்ற உள்ளூர் தொலைபேசி இலக்கம் மற்றும் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட +916282807305 வட்ஸ்அப் இலக்கங்களில் இருந்து அச்சுறுத்தல் அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த கட்டுரையில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தொடர்பில் மேற்கொண்ட வெளிப்படுத்தல் காரணமாக ஊடகவியலாளர் சமிந்தவை மூன்று வாரங்களுக்குள் கொன்றுவிடுவோம் என மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கு இந்த சம்பவம் தொடர்பில் உண்மையான அக்கறை காணப்படின், தொலைபேசி தரவுச் சோதனையின் மூலம் ஊடகவியலாளர் சமிந்த சேனாரத்னவை அச்சுறுத்திய தரப்பினரை அடையாளம் காண முடியும்.

பொலிஸ் திணைக்களத்தின் நேர்மை மற்றும் பொறுப்புணர்வை சோதிக்க இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவிக்கின்றது. ஆகவே இச்சம்பவம் தொடர்பில் உரிய ஆதாரங்களுடன் விசாரணைகளைத் துரிதப்படுத்தி ஊடகவியலாளர் சமிந்த சேனாரத்னவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்குக் கோரிக்கை விடுக்கும் சுதந்திர ஊடக இயக்கம் இலங்கை பொலிஸ் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் கண்டிக்கப்பட வேண்டிய அளவுசீரழிந்துருப்பது வருந்தத்தக்கது என இந்த ஊடக அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது" என்றனர்.