றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாரணைகளிலிருந்து நீதியரசர் ஜனக டி சில்வா விலகல்

றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனுவின்  விசாரணைகளிலிருந்து நீதியரசர் ஜனக டி சில்வா விலகல்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளிலிருந்து விலக்கிக்கொள்வதாக நீதியரசர் ஜனக டி சில்வா இன்று (28) வெள்ளிக்கிழமை மன்றில் அறிவித்தார்.

ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி  விசாரணை ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றியமையினாலேயே இந்த தீர்மானத்தினை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டமை தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோர் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றினை தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகள் இன்று (28) வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்ற நீதியரசர்களான விஜித் கே. மலல்கொட, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜனக டி சில்வா ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

இதன்போதே, நீதியரசர் ஜனக டி சில்வா இந்த அறிவிப்பினை மேற்கொண்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு புதிய நீதியரசர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த விசாரணைகள் நீதியரசர்களான விஜித் கே. மலல்கொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் இடம்பெற்றது.

முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் றியாஜ் பதியுதீன் ஆகியோரின் கைது தொடர்பில் மன்றில் அறிக்கையொன்றை  சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு நீதியரசர்கள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் நெறிப்படுத்தலில் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் மற்றும் றுஸ்தி ஹபீப் ஆகியோரும், சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் அவன்தி பெரேராவும் மன்றில் ஆஜராகினர்.