நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைக்கு ஆட்சி மாற்றமே தீர்வு: சம்பந்தன்

நாட்டின் பொருளாதார, அரசியல் பிரச்சினைக்கு ஆட்சி மாற்றமே தீர்வு: சம்பந்தன்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார, மற்றும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் உடனடியாக ஆட்சி மாற்றமொன்று அவசியம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று, நாடு முழுவதும் மக்கள் வீதிக்கு இறங்கி, ஆட்சி மாற்றம் ஒன்று வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து வருகின்றனர். ஏனெனில், இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையை முழுமையாக இழந்துவிட்டார்கள் என்பதே அதன் வெளிப்பாடாகும்.

நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டுமாயின் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும். தற்போதைய அரசால் நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது.

அது வெளிப்படையாகத் தெரியவந்துள்ளது. நாட்டினதும் மக்களினதும் நலனில் அக்கறை கொண்டுள்ள அனைவரும் திடசங்கற்பத்துடன் செயற்பட்டு ஒருமித்த தீர்மானங்களை எடுத்தால் மட்டுமே ஆட்சியில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

சர்வதேச சமூகமும் இந்த செயற்பாடுகளில் அக்கறை காட்டும் என்று நான் நம்புகின்றேன். ஏனெனில் தற்போதைய ஆட்சியில் ஒரு மாற்றம் ஏற்பட்டால்தான் சர்வதேச சமூகத்துக்கு எமது நாட்டின் மீது ஒரு நம்பிக்கை ஏற்படும். சர்வதேச சமூகம்
சகல வழிகளிலும் எமது நாட்டுக்கு உதவிகளையும் வழங்கும்.அவ்விதமான ஓர் ஆட்சி மாற்றம் இல்லாமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.