கொழும்பில் சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தின நிகழ்வு

கொழும்பில் சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தின நிகழ்வு

றிப்தி அலி

முதலாவது சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினத்தினையொட்டி "Cat Walk" எனும் நிகழ்வினை கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் கடந்த சனிக்கிழமை (10) கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானியின் தலைமையில் கொழும்பு - காலி முகத்திடலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கட்டார், பலஸ்தீன் ஓமான் உள்ளிட்ட நாடுகளில் தூதுவர்கள் உள்ளிட்ட பல இராஜதந்திரிகள், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அரேபிய சிறுத்தைகளை பாதுகாக்கும் நோக்கில் சவூதி அரேபியாவினால் முன்மொழியப்பட்ட சர்வதேச அரேபிய சிறுத்தைகள் தினம் எனும் முன்மொழிவு, கடந்த ஜுன் 12ஆம் திகதி 30க்கு மேற்பட்ட நாடுகளின் அனுசரனையுடன் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அரேபிய சிறுத்தை என்பது பெரிய பூனைகளில் (சிங்கம், பாந்தெரா டைகிரிஸ், மலைச் சிங்கம், ஜாகுவார், சிறுத்தை, புலி, பனிச் சிறுத்தை) மிகவும் அழிந்து வரும் இனங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

வனவிலங்குகள் மற்றும் உயிரியல் பன்முகத்தன்மையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் முயற்சியிலேயே இந்த சர்வதேச தினம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், சவூதி அரேபியா உட்பட அரேபிய சிறுத்தையின் தாயகமாக கருதப்படும் நாடுகளில் அதனை உயிர் வாழ்வதற்கு பங்களிக்கும் பல்வேறு முயற்சிகள் மூலம் அரேபிய சிறுத்தைகளைப் பாதுகாப்பதற்காக தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அரேபிய சிறுத்தைகளை பாதுகாப்பதற்காக நிதியமொன்றும் கடந்த 2019ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பல சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து சவூதி அரேபியா மூன்று வருடங்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாகவே இந்த சர்வதேச தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.