புற்று நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு

புற்று நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் ஆதரவு

இந்திரா புற்றுநோய் நம்பிக்கை நிதியத்தின் தலைமை அதிகாரி வைத்தியர் லங்கா ஜயசூரிய திசாநாயக்கவுக்கும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி “Grant Assistance for Grassroots Human Security Projects (GGP)” திட்டத்தின் கீழ் மானிய உதவிக்கான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தார்.

இந்த நிகழ்வு 2024 மார்ச் 13 ஆம் திகதி நடைபெற்றது. மஹாரகம “சுவ அரண” நோய் தணிப்பு பராமரிப்பு நிலையத்தில் குணப்படுத்தும் பூங்காவை நிறுவுவதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் இந்திரா புற்றுநோய் நம்பிக்கை நிதியத்துக்கு 51,675 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 16 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது.

GGP திட்டத்தினூடாக 320 திட்டங்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. 1989 ஆம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை 58.4 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.

ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவி கொள்கையுடன் இந்தத் திட்டம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளதாக தூதுவர் மிசுகொஷி குறிப்பிட்டதுடன், நபர்களுக்கு மகிழ்ச்சியாகவும், கண்ணியத்துடனும் வாழ்க்கையை முன்னெடுப்பதற்கு அவசியமான வலுவூட்டலினூடாக சமூக கட்டியெழுப்பலை மேற்கொள்வதனூடாக மனித பாதுகாப்பில் கவனம் செலுத்தப்படுகின்றதாக தெரிவித்தார். 

மேலும், இலங்கையின் நீண்ட கால உறுதித்தன்மைக்கும் சுபிட்சத்துக்கும் உதவிகளை வழங்கும் கொள்கையின் பிரகாரம் உதவிகளை வழங்க தம்மை அர்ப்பணித்துள்ளதாக தெரிவித்தார்.