சுடர் ஒளியின் தலைப்பினை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பொய்ச் செய்தி பரப்பல்

சுடர் ஒளியின் தலைப்பினை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக பொய்ச் செய்தி பரப்பல்

யாழ்ப்பாணத்தினை தளமாகக் கொண்டு வெளிவரும் சுடர் ஒளி பத்திரிகையின் தலைப்பினை பயன்படுத்தி சஜித் பிரதேமதாச தலைமயிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக சமூக ஊடங்களில் பொய்ச் செய்தி பரப்பப்படுகின்ற விடயம் அம்பலமாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் சிலரினை மேற்கோள் காட்டி சுடர் ஒளி பத்திரிகையின் தலைப்பினை பயன்படுத்தி வெளியிடப்பட்ட செய்திகளை அக்கட்சியின் தலைவரான சஜித் பிரேமதாசா நிராகரித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் அமைச்சர் மனோ கணேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் 'சுடர் ஒளி' மாலைப் பத்திரிகையின் தலைப்பைப் பயன்படுத்தி போலியாக செய்திகள் உலா வருகின்றன. அதாவது:

"கொரோனா வைரஸை பரப்பியவர்கள் முஸ்லிம்களே" – சஜித் பிரேமதாசா

"தமிழர்களுக்கு சுமந்திரன் வாய் திறந்தது கிடையாது; தமிழனாக இரு முதலில் பிறகு சோனிக்காக வாதாடலாம்"  - மனோ

"ரிஷ்வி முப்தி கோட்டாவின் கைக்கூலி" – முஜீப் ஆகிய தலைப்புக்களில் இந்த வாரம் மூன்று செய்திகள் வெளியாகியிருந்தன.

மேற்குறிப்பிட்ட செய்திகள் யாவும் சமூக ஊடகங்களில் வைரலாக பரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குறித்த செய்திகளை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்களுக்கு மத்தியில் இன, மத, சமூகப் பிரிவினைகளை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இது எமது தேசிய நலனுக்கு எதிரானதும், அதற்கு குந்தகம் விளைவிப்பதும் ஆகும். மனிதத் தன்மைக்கும், உயர் மனித விழுமியங்களுக்கும்கூட அது எதிரானது. எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராக பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை. 

நம் அனைவராலும் எதிர்க்கப்பட வேண்டியவை. இத்தகைய வெறுக்கத்தக்க செயற்பாடுகள் கௌதம புத்தரின் உன்னத போதனைகளுக்கும் முரணானவை ஆகும்.
ஆசிர்வதிக்கப்பட்ட அந்தப் போதனைகளுக்கு தவறான அர்த்தம் கற்பிப்பதற்கு எடுக்கப்படும் எந்த முயற்சியும் அவற்றுக்கு எதிரான குற்றமாகவும் தேசத்துரோகமாகவுமே அமையும்" என்றார்.

இதற்கு மேலதிகமாக முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான முஜீபுர் ரஹ்மான் ஆகியோரும் அவர்களின் பெயர்களின் வெளியாகிய செய்திகளை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், "யாழ்ப்பாணத்தினை தளமாகக் கொண்டு வெளிவரும் சுடர் ஒளி பத்திரிகையில் இந்த செய்திகள் எவையும் வெளியாகவில்லை" என குறித்த பத்திரிகையின் முகாமைத்துவம் விடியல் இணையத்தளத்திற்கு உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.