அளுத்கமை சம்பவம் தொடர்பில் கோட்டாபய மீது விரல் நீட்டினாலும் அது நிரூபிக்கப்படவில்லை: அலி சப்ரி

அளுத்கமை சம்பவம் தொடர்பில் கோட்டாபய மீது விரல் நீட்டினாலும் அது நிரூபிக்கப்படவில்லை: அலி சப்ரி

அளுத்கமை சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மீது விரல் நீட்டினாலும் அது நிரூபிக்கப்படவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

"இந்த சம்பவம் நடந்த போது கடுமையாக பேசினேன். பொதுபலசேனாவை கண்டித்தேன். இதே போன்று தான் எதிர்காலத்திலும் செயற்படுவேன்.கோட்டாபய ஆட்சி வந்து முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தால் நிச்சயமாக குரல் கொடுப்பேன்" என அவர் குறிப்பிட்டார்.

இந்த நல்லாட்சியிலேயே முஸ்லிம்களுக்கு எதிரான அதிக சம்பவங்கள் நடைபெற்றதுடன் பள்ளிகள் மற்றும் பல கோடி சொத்துகளுக்கும் அழிக்கப்பட்டன என அவர் மேலும் கூறினார்.

தினகரன் வாராமஞ்சரிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். குறித்த நேர்காணலின் முழுமை  

கேள்வி: ஜனாதிபதி சட்டத்தரணியாக பல்வேறு சாதனைகளை படைத்து வரும் நீங்கள் அதனோடு நின்று விடாது முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள் பற்றி வெளிப்படையாக பேசியும் பங்களித்தும் வருகிறீர்கள். இதன் பின்னணியில் அரசியில் நோக்கமோ வேறு ஏதாவது நோக்கமோ உள்ளதா?

பதில்: இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் முஸ்லிம் சமூகத்தில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது. அரசியில்வாதிகள் தமது நலனுக்காகத்தான் பொதுவாக செயற்படுவார்கள்.

மதத் தலைவர்களுக்கு தமது மதத்தைப் பற்றி மட்டும் தான் அக்கறையிருக்கும். ஏனைய சமூகம் பற்றி அக்கறை கொள்வது கிடையாது. சிவில் சமூகம் முன்னணிக்கு வந்து தலைமைத்துவத்தை வழங்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களிடையே சிவில் சமூகம் தலைமைத்துவம் வழங்காததால் கடந்த 30-40 வருடங்களாக எமது சமூகம் பின்னோக்கியே சென்றுள்ளது. ஏனைய சமூகங்கள் எம்மை பற்றி சந்தேகமாக பார்க்கும் நிலை உருவானது. பிரதான பாதையில் இருந்து நாம் ஓரமாகிவிட்டோம்.

இந்த நிலைமையை மாற்றும் ஆளுமை முஸ்லிம் சிவில் சமூகத்திற்கே இருக்கிறது. அவர்கள் எந்த அரசியல் கட்சி சார்ந்தவர்களாக இருந்தாலும் பிரச்சினையில்லை. சமூகத்தையும் நாட்டையும் காப்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம் சமூகத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு எமது மூதாதையர்கள் அளித்த பங்களிப்பு மிக முக்கியமானது. ஒவ்வொருவரும் தம்மையும் தமது குடும்பத்தையும் பற்றி மாத்திரம் சிந்தித்து செயற்பட்டால் சமூகத்தின் நிலைமை என்னவாகும்? சிவில் சமூகத்திற்கு முக்கிய பங்கு இருப்பதாலேயே நாம் சமூகத்தின் நலனுக்காக இறங்கியிருக்கிறோம்.

கேள்வி: ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் சமூகத்தில் சிவில் சமூகத்தின் பங்கு குறைவாக இருக்கிறது. அவ்வாறு வருபவர்கள் கூட அரசியல் நோக்கிலோ வேறு தேவைகளுக்காகவோ தான் முன்வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே?

பதில்: குற்றச்சாட்டுகளுக்கு அஞ்சி எமது சமூக நலனுக்கான எமது பங்களிப்பை ஒதுக்கி வைக்க முடியாது. எமது சமூகத்தில் துறைசார் வல்லுநர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். எமது சமூகத்தில் வர்த்தகர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். வெளிநாட்டில் கற்ற துறைசார் வல்லுநர்கள் இருந்தாலும் எமது சமூகத்துடன் இணைந்து செல்லும் நிலைமை அவர்களிடம் இல்லை.

அரசியல் யாரும் செய்யலாம். துறைசார் வல்லுநர்கள் முன்னணிக்கு வராவிட்டால் தகுதியில்லாவர்கள் தான் தலைமைத்துவத்தை கையில் எடுப்பார்கள். 1977இற்கு முன்னர் மருத்துவர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் போன்றோர் தான் அரசியலில் ஈடுபட்டார்கள்.

இன்று அந்த நிலை முற்றாக மாறிவிட்டது. அதனால் தான் இன்று பாராளுமன்றத்தில் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் சித்தியடையாத பலர் இருக்கிறார்கள். இவர்கள் தான் எம்மை பற்றிய முடிவுகளை எடுக்கிறார்கள்.

கேள்வி: இலங்கையில் காலத்துக்குக் காலம் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கும். சில காலம் வரை அதுபற்றி பேசப்பட்டு பின்னர் அது மறக்கடிக்கப்படுகிறது. இவ்வாறு நடப்பதற்கு என்ன காரணம். இதற்கு நிரந்தர தீர்வு கிடையாதா?

பதில்: கடந்த வரலாற்றை திரும்பிப் பார்த்தால் முன்னர் முஸ்லிம் லீக், வை.எம்.எம்.ஏ என்பன பலமான சிவில் சமூக பங்களிப்பை வழங்கின. டொக்டர் ஜாயா. ஏ.எம்.ஏ.அஸீஸ், ராஸிக் பரீத், டொக்டர் கலீல், பதியுதீன் மஹ்மூத், போன்றோர் சமூகத்திற்கு தலைமைத்துவம் கொடுத்து வழிநடத்தினார்கள்.

அவர்கள் ஒரு சமூகம் சார்ந்த தலைவர்களாக அன்றி தேசிய தலைவர்களாக செயற்பட்டார்கள். அவர்களை சமூகம் நம்பியது. ஏனைய சமூகங்களுடன் இணைந்து அவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுத்தார்கள். இன்றுள்ள தலைவர்கள் முகவர்கள் போன்று மாறிவிட்டார்கள். இவர்கள் முஸ்லிம் கொள்கைகளை பற்றி பேசுகிறார்களா? தங்களுக்கு என்னென்ன வாய்ப்புகள் கிடைக்கிறது என்று தான் பார்க்கிறார்கள்.

இன ரீதியில் முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டன. ஒரு இனம் சார்ந்து செயற்படுவதும் பிரச்சினைகளுக்கு வித்திட்டது. அதிகாரத்திற்காக ஆட்சியிருக்கும் பக்கம் பாய்வதால் அவர்கள் கௌரவம் நசிந்து விட்டது. இது தவிர சிவில் சமூகத்தின் பொறுப்பை உலமாக்கள் கையிலெடுத்து செயற்பட ஆரம்பித்திருப்பதும் இந்த பிரச்சினைகளுக்கு காரணமானது.

தாம் தான் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிபோன்று செயற்படத் தொடங்கி விட்டார்கள். இலங்கை என்பது பாகிஸ்தானோ மத்திய கிழக்கோ அல்ல என்பது இவர்களுக்கு புரியவில்லை. உலமாக்கள் சிவில் சமூகமாக செயற்படுவது மிக ஆபத்தானது. பலமான சிவில் சமூகமொன்று உருவாக வேண்டும்.

கேள்வி: உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக தலைதூக்கிய பிரச்சினைகளைத் தணிப்பதற்கு முஸ்லிம் தலைவர்களும் உலமா சபையும் முக்கிய பங்காற்றியதாக சமூகத்தில் பரவலான கருத்துகாணப்படுகிறது. இதனை மறுக்கிறீர்களா?

பதில்: அந்த சமயத்தில் சகலரும் பங்களிப்பு செய்தார்கள். அதனை மறுக்க முடியாது. ஆனால் இந்த பிரச்சினைகள் ஏன் உருவானது? யார் உருவாக்கினார்கள். இவர்கள் இனவாத அரசியல் செய்யாதிருந்தால் எமது சமூகத்தை தனிமைப்படுத்தாதிருந்தால் பெரும்பான்மை சமூத்தில் சந்தேகம் ஏற்படாதவாறு நடக்காதிருந்தால் இந்த பிரச்சினைகள் தலைதூக்கியிருக்காது.

உலமா சபையும் முஸ்லிம் தலைவர்களும் செய்த பங்களிப்பை இல்லை என்று கூற மாட்டேன். உலமா சபையின் பொறுப்பு பரந்துபட்டது. கம்பியூட்டரில் மென்பொருளை விட வன்பொருள் பிரதானமானது. தாடி வளர்ப்பதா? முகத்தை மூடுவதா? கறுப்பு அணிவதா? என்பது பற்றி தான் பிரதானமாக சிந்திக்கிறார்கள்.

முன்னைய காலத்தில் முஸ்லிம்கள் பற்றிய நன்மதிப்பு இருந்தது. நம்பிக்கையில் உயர்ந்த நிலையில் இருந்தார்கள். ஊரைவிட்டு யாராவது செல்வதாக இருந்தால் முழு சொத்தையும் அயலவரிடம் கொடுத்து விட்டு செல்லும் நிலைமை அன்றிருந்தது. இன்று அந்த தகைமைகள் இல்லாமல் போய்விட்டன.

எம்மீதான மதிப்பு இல்லாமல் போய்விட்டது. அயலவருடன் நெருக்கமாக இருப்பதை நபிகள் வலியறுத்தியுள்ளார்கள். உடைக்கு கொடுக்கும் முக்கியம் ஏனையவற்றுக்கு கொடுப்பதில்லை.

சில ஆங்கில சிவில் சமூக பிரதிநிதிகளை சந்தித்த போது உலமா சபை தொடர்பில் கவலை தெரிவித்தார்கள். நிகாப் தடை செய்யப் போவதாக பெரிய மாநாடு நடத்தப்படுகிறது. ஆனால், உயிர்த்த ஞாயிறு போன்று இனி நடக்காது என ஆயிரம் பேரை கூட்டி மாநாடு நடத்த இவர்களால் முடியவில்லை என ஆதங்கப்பட்டார்கள்.

சிறிய கலாசார ஆடைக்காக கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏனையவற்றுக்கு வழங்க தவறிவிட்டோம். அறிக்கையை வெளியிட்டு விட்டு அமைதியாக இருந்தால் எப்படி பெரும்பான்மை சமூகத்தின் உள்ளத்தை கவர முடியும்?

கேள்வி: அந்தக் காலத்தில் முஸ்லிம் பெண்கள் சாரி அணிந்து முக்காடு போட்டுக் கொண்டார்கள். பின்னர் ஹிஜாப்,நிகாப் என கறுப்பில் ஆடை அணிந்தார்கள். இந்த ஆடை தானா ஏனைய சமூகத்தில் இருந்து தூரமாவதற்கு பிரதான காரணம்?

பதில்: அது மட்டும் காரணமென்று கூற மாட்டேன்.ஏனைய சமூகத்தினர் தமக்கு விரும்பியதை அணிவது போன்று எமக்கும் எதனையும் அணியலாம் என வாதிடலாம். சில பிரச்சினைகளை மற்றவர்கள் தரப்பில் இருந்து நோக்கியே கையாள வேண்டும். ஏனைய சமூகத்தினர் ஜீன்ஸ்,மேலைத்தேய ஆடைகள் அணிகிறார்கள்.

எமக்கும் ஆடை தெரிவில் சுதந்திரம் உள்ளது என பரவலாக கூறுகிறோம். ஆனால், நாம் அனைவரும் ஒரே காலப்பகுதியில் ஒரே ஆடையை ஒரே நிறத்தில் அணியத் தொடங்கியிருக்கிறோம். உலக அளவில் முஸ்லிம்களைத் தான் தீவிரவாதத்துடன் தொடர்புபடுத்தி பேசப்படும் நிலையில் இங்கும் அதற்கான ஆயத்தம் நடப்பதாக ஏனைய சமூகம் சிந்திப்பதற்கு இவை காரணமாகின்றன.

அனைவரும் ஒரேமாதிரி அணிவது ஏனைய சமூகத்தில் இருந்து தூரமாவதற்கு காரணமாக அமைந்தது. எம்மை பற்றி சந்தேகம் வலுக்கவும் ஏதுவாகியுள்ளது. முற்காலத்தில் கந்தூரி முதல் மத வைபவங்கள் ஏனைய சமூகத்தினரையும் அரவணைத்தே இடம்பெற்றன. இன்று அனைத்தும் நிறுத்தப்பட்டு வருகிறது. அனைத்திற்கும் பத்வா வழங்கி மதத்தை பின்பற்றுவதை கஷ்டப்படுத்தி விட்டார்கள்.

இலகுவாக மதத்தை பின்பற்றுவதற்கு இடமளிக்க வேண்டும். தீவிரவாதம் ஓர் இரவில் தலைதூக்குவதல்ல. இதற்கு 10--15 வருடங்கள் வரை செல்லும். ஏனைய சமூகத்தில் இருந்து ஒதுங்கி தனியான சமூகமாக செயற்படத் தொடங்கி வங்கி, உணவு, உடை என அனைத்திலும் ஒதுங்கி தனியாக செயற்பட ஆரம்பித்தோம். விலகிச் செல்லலில் அடுத்த கட்டம் தீவிரவாதமாக மாறும். ஒரு குழு தனியாக கடும் போக்கிற்கு மாறி விடுகின்றனர். ஸஹ்ரான் போன்றவர்கள் உருவாக இது தான் காரணம்.

கேள்வி: ஐரோப்பிய நாடுகளில் ஹிஜாப் நிகாப் என்பவற்றுக்கு தடை இடப்பட்டாலும் அங்குள்ள முஸ்லிம்கள் அதனை விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள். எமது ஆடைச் சுதந்திரத்தில் தலையிட இடமளித்தால் ஏனைய உரிமைகளிலும் கைவைப்பார்கள் என முஸ்லிம்கள் தரப்பில் கூறப்படுவது பற்றி?

பதில்: ஹிஜாப் எமது உரிமை.அதனால் எவருக்கும் பாதிப்பு கிடையாது. முற்காலத்தில் எமது பெண்கள் சாரி அணிந்து முக்காடு போட்டு தமது உடலை மறைத்தார்கள்.அது மாறி ஹிஜாப் அணிய தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஹபாயாவையும் விட்டுக் கொடுக்க முடியாது. இது தொடர்பில் நீதிமன்றத்திற்கு கூட சென்றிருக்கிறோம். ஆனால் அனைவரும் கறுப்பு அபாயாவை மாத்திரம் அணிய வேண்டுமா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். ஆடை தொடர்பில் பல தெரிவுகள் இருக்கையில் ஒன்றை மாத்திரம் பிடித்துக் கொண்டிருப்பது குறித்து முஸ்லிம் புத்துஜீவிகளான யாஸிர் ரௌடா, டொக்டர் காதிர், சேக் அல்பானி, ஸாகிர் நாயக், உஸ்தாத் மன்சூர் போன்றோர் தெளிவாக கருத்து கூறியிருக்கிறார்கள்.

நிகாபிற்கு எதிராக சட்டம் வரும் வரை காத்திருக்காமல் நாம் ஏன் எம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது. அத்தியாவசியமில்லாததற்கு போராடும் நாம் அத்தியாவசதியமானதை விட்டு விடுகிறோம். 12 வயது பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்து நடுவீதியில் விடுவதற்காக நாம் போராட வேண்டுமா.

18 வயது திருமண வயதிற்காகத் தான் போராட வேண்டும். தேவையில்லாத எல்லாவற்றுக்கும் போராடுவதால் தேவையானவற்றுக்கு போராடினால் அது எடுபடாது. தொழுகை, ஸக்காத், நோன்பு என எமது உரிமைகள் பறிக்கப்பட்டால் போராடத்தான் வேண்டும். ஆனால் 25 வருடங்களுக்கு முன்னர் வந்த வேறு நாட்டு கலாசாரத்தை கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கிறோம்.

அநுராதரபுத்தில் தனியாக செல்லும் எமது தங்கைக்கும், முல்கிரிகல ஆஸ்பத்திரிக்கு மருந்து பெறச் செல்லும் எமது நோயாளிக்கும் பாதுகாப்பான சூழலை உருவாக்கத்தான் நாம் போராடுகிறோம். ஸாஹிரா கல்லூரி ஆரம்பிக்கும் போது 2 வீதமான பெண்களுக்கு தான் கல்வி அறிவு இருந்தது.

இன்று 80-85 வீதமாக அது உயர்ந்துள்ளது. எமது பெண்கள் கல்வித் துறையில் முன்னேறியிருக்கிறார்கள். இல்லாவிட்டால் எமது பெண்கள் பல்கலைக்கழகம் சென்றிருப்பார்களா? மருத்துவர்கள் உருவாகியிருப்பார்களா? சிவில் சமூகம் தான் இதற்குக் காரணம்.

கேள்வி: உலமா சபை குறித்து சில குற்றச்சாட்டுகள் முன்வைத்தீர்கள். ஆனால், இந்த சமூகத்தை சரியாக வழிநடத்தும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

பதில்: உலமா சபைக்கு பெரும் பங்கு இருக்கிறது. உலமா சபை தனது பொறுப்பை சரிவர செய்ய வேண்டும்.அந்த அமைப்பில் மூவாயிரம் பேர் இருந்தாலும் முடிவுகள் எடுப்பது பத்துப்பேர் தான். 20 வருடங்களாக ஒரே குழு தான் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். பாகிஸ்தான் தேவவந்தி பல்கலைக்கழகத்திலும் பிந்நூராணி மத்தரஸாவிலும் கற்று வந்தவர்களுக்கு அதே சிந்தனைப் ​போக்குத் தான் இருக்கும்.

அது எமது நாட்டுக்கு பொருந்தாது. பழைய சிந்தனை தற்காலத்திற்கு எடுபடாது. 10 வீதத்திற்கு குறைவாக வாழும் முஸ்லிம்கள் பல்லின மக்கள் வாழும் நாட்டில் எவ்வாறு வாழ வேண்டுமென இவர்கள் என்றாவது சிந்தித்துள்ளார்களா? சில விடயங்களை கட்டிப் பிடித்துக் கொண்டு பிடிவாதமாக இருக்கிறார்கள். சிங்கள பிரதேசத்தில் வாழும் பெண்கள் குறித்தோ தமிழ் பிரதேசத்தில் வாழும் பெண்கள் குறித்தே இவர்கள் கவலைப்படவில்லை.

கேள்வி: முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான சர்ச்சை தணிந்துள்ளது. ஆனால், பெண் காதி நீதிபதி நியமிக்கும் கோரிக்கை ஓரங்கட்டப்பட்டுள்ளது. இது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில்: தற்பொழுதுள்ள காதி நீதிபதிகள் தொடர்பில் எனக்கு நல்ல அபிப்பிராயம் கிடையாது. தமது பதவியை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த முறைமை மாற வேண்டும். பெண் காதிக்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு முன்வைக்கின்றனர். நபிகள் நாயகத்தின் ஒரு ஹதீஸை பிடித்துக் கொண்டு இதனை மறுக்கிறார்கள்.

மலேசியாவில் பிரதம நீதியரசர் பெண். பங்களாதேஷில் 15 வருடங்களாக பெண் ஒருவர் தான் ஜனாதிபதி. பெண் காதி நியமிப்பதை எதிர்ப்பதை ஏற்கமுடியாது. பல்கலைக்கழகத்திலும் சட்டக் கல்லூரியிலும் 70 வீதம் வரை பெண் மாணவிகள் தான் உள்ளனர்.

கேள்வி: நோன்புப் பெருநாள் வந்தால் பிறை தொடர்பில் சர்ச்சை வருவது வழமையாகி விட்டது. தனியொரு அமைப்போ பள்ளிவாசலின் கீழோ இல்லாமல் சுயாதீனமாக செயற்படும் நிறுவனமொன்று தேவை என சிலர் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

பதில்: சிங்கப்பூரில் ஒரு குழுவுக்கு இதனை கையாள விடவில்லை. இஸ்லாமிய விவகார ஆலோசனை கவுன்ஸில் ஒன்று உருவாக்கப்பட்டு அதனூடாக முடிவு செய்யப்படும். இதில் புத்துஜீவிகள், மௌலவிமார்கள் உட்பட பல தரப்பும் உள்ளனர். அவ்வாறான கவுன்ஸில் இங்கும் இருப்பது கட்டாயம்.

அதில் உலமாக்கள் மட்டுமன்றி சகல தரப்பும் உள்வாங்கப்பட வேண்டும். வக்பு சபையை மேலும் பலப்படுத்த வேண்டும். பள்ளிவாசல்கள் தொடர்பிலிலும் மௌலவிமார்கள் தொடர்பிலும் உரிய மேற்பார்வை செய்ய வேண்டும்.

கேள்வி: மத்ரஸாக்களை மேற்பார்வை செய்வது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: இது முக்கியமான தீர்மானமாகும். 350 ற்கும் அதிகமான மத்ரஸாக்களும் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உலமாக்களும் இருக்கிறார்கள். நாட்டுக்கு எத்தனை மத்ரஸாக்கள் தேவை என முதலில் முடிவு செய்யவேண்டும். மத்ரஸாக்களில் 13 வருட கட்டாயக் கல்வி அமுல்படுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படைக் கல்வியுடன் தான் மார்க்கக் கல்வியை கற்பிக்க வேண்டும். சரீஆ சட்டத்தை 8--10 வயது பிள்ளைக்கு புகட்ட முடியுமா? மத்ரஸாக்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? எதனை கற்பிக்கிறார்கள்? யார் கற்பிக்கிறார்கள். என்பது தொடர்பாக மேற்பார்வை செய்வது கட்டாயம். பொதுவான பாடவிதானம் இருக்கவேண்டும்.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய அறிவிக்கப்பட்டுள்ளார். நீங்கள் அவருக்கு நெருக்கமான ஒருவர். அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த போது முஸ்லிம்களுக்கு எதிராக பல சம்பவங்கள் நடந்தன. அவர் ஜனாதிபதியானால் முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடக்காது என்று கூற முடியுமா?

பதில்: அரசியல் எமது குடும்பத்திற்கு புதிதல்ல. ஆனால் நேரடி அரசியலில் இறங்க மாட்டேன். கோட்டாபய ராஜபக்‌ஷவின் குடும்ப நண்பராக நான் இருக்கிறேன். 10 வருட ஆட்சியில் நடைபெறும் ஒரு சம்பவத்தை வைத்து முழு ஆட்சியையும் எடைபோட முடியாது.

இந்த ஆட்சியில் தான் துரத்தப்பட்ட பெருமளவு முஸ்லிங்கள் மீள்குடியேற்றப்பட்டார்கள். 200ற்கும் அதிகமான பள்ளிகள் அரச செலவில் கட்டப்பட்டன. காத்தான்குடி பள்ளி தாக்குதல், பதியதலாவ பிக்கு கொலை என கடந்த காலத்தில் நடந்த அனைத்தும் யுத்தத்தை வெல்வதோடு முடிவடைந்தது.

அளுத்கமை சம்பவம் குறித்து கோட்டாபய மீது விரல் நீட்டினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. இந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எதிரான அதிக சம்பவங்கள் நடைபெற்றன. பள்ளிகள், சொத்துகள் அழிக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது கோட்டாபயவின் பிரதான இலக்கு. நாட்டின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க இருக்கிறார். இதனூடாக கடந்த காலம் போன்று நிகழ்வுகளை எதிர்பார்க்க முடியாது.

கேள்வி: வெறுக்கத்தக்க பேச்சுக்கள் காரணமாகத் தான் இவ்வாறான இனவாத பிரச்சினைகள் எழுகின்றன. இதனை சட்டமாக்க கோட்டாபய ஆட்சிக்குவந்தால் அழுத்தம் கொடுப்பீர்களா?

பதில்: 1956களில் தமிழ்மக்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சுகள் பேசப்பட்ட பின்னர் தமிழ்மக்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன. பின்னர் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றன. வெறுக்கத் தக்க பேச்சுக்களை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்பதை நீண்டகாலமாக கோரி வருகிறோம். எதிர்காலத்திலும் வலியுறுத்துவோம்.

கேள்வி: கோட்டாபய ஆட்சி வந்து முஸ்லிம்களுக்கு எதிரான சம்பவங்கள் நடந்தாலும் குரல் கொடுப்பீர்களா?

பதில்: நிச்சயமாக செய்வேன். அளுத்கமை சம்பவம் நடந்த போது கடுமையாக பேசினேன். பொதுபல சேனாவை கண்டித்தேன். இதே போன்று தான் எதிர்காலத்திலும் செயற்படுவேன். கோட்டாபய ஜனாதிபதியாக தெரிவானாலும் எந்த பதவியும் எடுக்க மாட்டேன். சுயாதீனமாக இருந்தாலே சுதந்திரமாக செயற்பட முடியும். நான் சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் தான் குரல் கொடுக்கிறேன்.

-ஷம்ஸ் பாஹிம்-