கொவிட் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்போம்: பிரதமர்

கொவிட் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்போம்: பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு மக்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இன்று (16) காலை நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர் ,

"கொவிட் தொற்று முதன் முதலாக வந்தபோது அதனை கட்டுப்படுத்த முடியுமானதாயிற்று. கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி பணிக்குழு, அத்தியவசிய சேவை ஜனாதிபதி பணிக்குழு, அரச துறை, சுகாதார துறை, இராணுவம் உள்ளிட்ட முப்படையினர், பொலிஸார் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர்.

விசேடமாக உளவுத்துறை மற்றும் சுகாதார துறை ஆகியன செய்த அர்ப்பணிப்பை இங்கு நிச்சயம் நினைவுகூற வேண்டும். இக்காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை சந்தித்து வருகின்றனர். அது தொடர்பாக இங்கு நிபுணர்கள் தெளிவுபடுத்துவர்.

நாங்கள் எப்போதும் மக்களின் பாதுகாப்பிற்காக நடவடிக்கை எடுத்தவர்கள். அதனால் எதிர்காலத்தில் மக்களை பாதுகாப்பதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தேர்தல் காலம் என்பதால் கொரோனா இரண்டாவது அலை நிலவி வருகிறது என தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றனர். மக்கள் பீதியில் உள்ள நிலையில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தாது செயற்பட வேண்டியது எமது பொறுப்பாகும்" என்றார்.

ஊடகவியலாளர்: சுகாதார ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடாமை தேர்தலுக்கு இடையூறாகக்கூடும் என தேர்தல் ஆணையாளர் கூறுகின்றார்.

பிரதமர் - உண்மையில் அந்த வர்த்தமானியை வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட் வருகிறது.

சுகாதார அமைச்சர் – தேர்தல் குறித்த ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிட தயார். நாளை அல்லது நாளை மறுதினம் வர்த்தமானி வெளியிடப்படும்.

ஊடகவியலாளர்: தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகள் மாத்திரமா வர்த்தமானியில் வெளியிடப்படும்?

சுகாதார அமைச்சர் - தேர்தல் ஆணையம் முதன்மையான ஒழுங்குவிதிகளை வர்த்தமானியில் வெளியிடுமாறு கோரியுள்ளது. தேர்தல் ஆணையம் கோரியுள்ள தேர்தலுடன் தொடர்புடைய ஒழுங்குவிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அந்த வர்த்தமானியை வெளியிட்ட பின்னர் தேவையான சுகாதார ஆலோசனைகள் அனைத்தையும் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுப்போம்.

தேர்தல் ஆணையம் எழுத்து மூலமாக கோரியுள்ள ஒழுங்குவிதிகள்  நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி செயலாளரும் அறிவித்துள்ளார். எனவே அதற்கு நாம் முக்கியத்துவமளித்துள்ளோம்.

ஊடகவியலாளர்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை நிறுத்தினாலும், கொரோனா நிலைமையுடன் தேர்தல் கூட்டங்களை நடத்துவது அபாயமானது தானே?

பிரதமர் - சமூகத்தில் கொரோனோ வைரஸ் தொடர்பில் தோன்றிய பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல் கூட்டங்களை நடத்துவதை மூன்று தினங்களுக்கு நிறுத்தியது. சுகாதார சட்ட விதிகளை கடைப்பிடித்து நாம் இன்று முதல் மீண்டும் தேர்தல் கூட்டங்களை ஆரம்பிக்கின்றோம்.

ஊடகவியலாளர் - சில சில மாகாணங்களை முடக்குவதற்கான அவசியம் உள்ள போதிலும், தேர்தல் காரணமாக, அந்த பிரதேசங்களை முடக்காதிருப்பதாக குற்றச்சாட்டொன்று அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ளது.

பிரதமர் - நாட்டில் அவ்வாறானதொரு நிலை இல்லை.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்  – நோயாளர்கள் அனைத்து மாவட்டங்களிலும் இருப்பதாக வதந்தியொன்று காணப்படுகிறது. அவ்வாறானதொரு நிலை இல்லை. இருபத்தைந்து பேர் மாத்திரமே வெளியே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதில் குண்டசாலை அதிகாரியின் குடும்ப உறுப்பினர்களும் உள்ளடங்குவர். சாதாரணமாக ஒரு நபரிலிருந்து 20 பேருக்கு தொற்றலாம் என கணக்கிடப்பட்டு, அவர்கள் அனைவரையும்  தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வதே நடைபெற்று வருகிறது.

அவ்வாறு தனிமைப்படுத்த அழைத்து செல்வதால் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிமைப்படுத்தலுக்கு அழைத்து செல்வது என்பது அவர்கள் கொவிட் தொற்றாளர்கள் என்து அல்ல. அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படக்கூடும் என்ற யூகத்திலேயே தனிமைப்படுத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிலவேளைகளில் தனிமைப்படுத்தலில் இருக்கும் வேளையில் அவர்கள் நோய் தொற்றாளர்கள் என உறுதிபடுத்தப்பட்ட சந்தர்ப்பங்களும் உள்ளன. ஏதேனுமொரு இடத்தில் வைரஸ் பரவல் இடம்பெறுமாயின் நாம் அந்த பரவலை கட்டுப்படுத்தவே பிரதேசமொன்றை முடக்குகின்றோம். சமூக ஊடகங்களிலேயே அதிக தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஊடகவியலாளர்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்வது போதாது என தெரிவிக்கின்றனர்.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் - இதுவரை பீ.சீ.ஆர். பரிசோதனைகள் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ஒரு நாளில் எண்பத்து இரண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் 682 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மே மாதத்தில் ஒரு நாளில் 1393 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஜுன் மாதத்தில் ஒரு நாளில் 1422 பரிசோதனைகள்  மேற்கொள்ளப்பட்டன. 

ஜுலை மாதம் ஆகையில் நாம் தற்போது 1466 பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். நாம் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வேகத்தை அதிகரித்திருப்பது இதன்மூலம் புலப்படுகிறது.  அது போன்று நமக்கு முதலாவது ஒரு இலட்சம் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்வதற்கு 95 நாட்கள் ஆகின.

இரண்டாவது இலட்சத்தை மேற்கொள்வதற்கு எமக்கு வெறும் 24 நாட்கள் மாத்திரமே சென்றது. பீ.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதில் எமது வேகத்தையே இது புலப்படுத்துகிறது.

வட கொரியாவையும் இலங்கையையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். வீதியில் இறங்கி பீ.சீ.ஆர் பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியம் இலங்கையில் இல்லை.

ஊடகவியலாளர்: ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்டுவந்த பீ.சீ.ஆர். பரிசோதனைகள் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்: பீ.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மிகவும் உதவியிருந்தது. இந்த பரிசோதனையானது நாட்டிற்கு பொறுப்பு கூறும் ஒரு விடயமாகும்.

அனைவரும் விரும்பும் விடயங்களை செய்ய முடியாது. ஒரு காலத்தில் எந்தவொரு நோயாளரும் அடையாளம் காணப்படாத நிலை காணப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் யாரேனும் ஒருவரை நோயாளி என கூறுவதற்கு முன்னர் நாம் இருமுறை சிந்தித்து பாரக்க வேண்டும். இது தொடர்பில் ஏற்பட்ட ஒரு பிரச்சினையினால் ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் பரிசோதனை மேற்கொள்வதிலிருந்து விலக வேண்டி ஏற்பட்டது.

அமைச்சர் பந்துல குணவர்தன - ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் கடந்த காலத்தில் 12,000 பரிசோதனைகள் வரை மேற்கொண்டது. அது தொடர்பில் பல்கலைக்கழகத்தில் நாம் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

சுகாதார அமைச்சர் -  கொரோனா தொற்று பரவலின்போது அதனை கட்டுப்படுத்தும் செயற்பாட்டில் ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சேவை அளப்பரியது. அது நிச்சயம் பாராட்டத்தக்கது. அது மாத்திரமன்றி வைரசுடன் விளையாட வேண்டாம் என நாமே அவர்கனை கோரியிருந்தோம்.

பிரதமர் - நோயாளர் அல்லாத ஒருவரை நோயாளர் என அறிவிப்பது உண்மையில் ஒரு நபருக்கு செய்யும் துரோகமாகும்.

ஊடகவியலாளர்: தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் உள்ளவர்கள் சமூகத்தில் இணைக்கப்பட்ட நடவடிக்கை அல்லவா கடந்த தினங்களில் இடம்பெற்றது. இந்த குற்றச்சாட்டுடன் வைத்தியசாலைகளில்இ தனிமைப்படுத்தல் நிலையங்களில் பணியாற்றுவோர் தொடர்பில் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.

இராணுவ தளபதி - தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை என நீங்கள் கூறுவீர்களாயின் அது தவறானதொரு கருத்தாகும்.

முகாம்களிலிருந்து வெளியே சென்றவர்களினால் நோய் தொற்று பரவியதாக இல்லை. புனர்வாழ்வு நிலையங்களிலிருந்து வெளியே சென்றவர்களினாலேயே தொற்று பரவியுள்ளது. முதல் முறையாக கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்திலேயே நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அதிலேயே நாம் அறிந்துக் கொண்டோம் ஆரம்பம் கந்தகாடு என்று முகாமுக்குள் இருந்தவர்கள், அதன் ஆலோசகர்கள் விடுமுறையில் சென்றிருந்த அதிகாரிகள் அனைவரையும் முகாமுக்குள் அழைத்து வந்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.

அத்துடன் முகாமிலிருந்து விடுமுறையில் சென்றவர்களின் குடும்பத்தாரையும் முகாமுக்குள் அழைத்து தனிமைப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் – 14 நாட்களுக்குள் நோய் அறிகுறி வெளிப்படும் என்பதே சாதாரணமாக வைத்திய நிபுணர்களின் எண்ணம். ஆலோசகர்கள் சமூகத்திற்கு சென்று 14 நாட்கள் இதுவரையில் கடந்துள்ளது. அவர்களது நோய் சமூகத்தில் பரவியிருந்தால் இதுவரை நோயாளர்கள் அடையாளம் காண்பது ஆரம்பிக்கப்பட்டிருக்கும்.

ஊடகவியலாளர்: புனர்வாழ்வு நிலையத்தில் திடீரென இவ்வாறானதொரு நிலை எவ்வாறு ஏற்பட்டது

இராணுவ தளபதி – பொரள்ளை மற்றும் கொழும்பு தொற்றாளர்கள் மற்றும் தொடர்புடைய நபர்களை நாம் தனிமைப்படுத்தியது இரண்டு இடங்களில் அது கந்தகாடு மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களாகும். அவர்களை தனிமைப்படுத்தலின் பின்னர் சமூகத்துடன் இணைப்பதா இல்லையா என்ற விடயம் தோன்றியது. போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே அங்கிருந்தனர்.

ஊடகவியலாளர்: கொரோனா தொற்று குறித்த தற்போதைய நிலை என்ன?

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் - இதுவரை 2,673 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 650 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கந்தகாட்டில் 533 பேர் காணப்படுகின்றனர்.

அவர்கள் அனைவரும் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் நலமாகக் காணப்படுகின்றனர். சுகாதார துறையினரும், இராணுவத்தினரும் அவர்களுக்கான சேவையை ஆற்றிவருகின்றனர். எவருக்கேனும் சுவாசப் பிரச்சினைகள் காணப்படின் அவர்கள் வெலிகந்த வைத்தியசாலைக்கு அனுப்பப்படுவர். இலங்கையிலுள்ள அனைத்து நிறுவனங்களிலும் சுகாதார சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டும். நாம் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

ஊடகவியலாளர்: கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை நடத்தி கொவிட்-19 குறித்த பீதியை பரப்பாதிருக்க அவர்களின் ஆதரவை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்தாலென்ன?

பிரதமர் - தற்போதைய சூழ்நிலையில் கட்சித் தலைவர்களை கூட்டி கலந்துரையாடுவது என்பது ஏற்புடையதாக அமையாது. ஆனால், கொவிட் ஐ அரசியலாக்க வேண்டாம் என அனைத்து கட்சிகளிடமும் இதனூடாக கேட்டுக் கொள்கிறேன்.

ஊடகவியலாளர்: பாரிய சவாலுக்கு மத்தியில் இம்முறை பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கேட்டுள்ளீர்கள்?

பிரதமர் - இம்முறை நாம் எதிர்பார்ப்பது மூன்றில் இரண்டு பெரும்பான்மை.

ஊடகவியலாளர்: வாக்குளை எண்ணுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

பிரதமர் - ஆம். வேறு நாட்களில் போன்றல்ல இம்முறை வாக்குகளை எண்ணுவது. தேர்தல் ஆணையமே உரிய அதிகாரம் கொண்டது. இரண்டு நாட்கள் தாமதமாகி வாக்கு எண்ணுவோம் என்றாலும் நாம் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.