அக்கரைப்பற்று சுனாமி வீட்டுத் திட்டத்தினை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

அக்கரைப்பற்று சுனாமி வீட்டுத் திட்டத்தினை பயனாளிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

அக்கரைப்பற்று, நுரைச்சோலை பிரதேசத்தில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுனாமி வீட்டுத் திட்டத்தினை துரித கதியில் பயனாளிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இது தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று (16) திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான தயா கமகே, பைசால் காசீம், எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், ஏ.எல்.எம்.நசீர், கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், கே.கோடீஸ்வரன் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.

குறித்த வீட்டுத் திட்டத்தினை துரிதாமாக கையளிப்பது தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

எனினும் அமைச்சர் தயா கமகேயின் கருத்தினால் விசேடமாக கூட்டப்பட்ட இந்த கூட்டம் எந்தவித தீர்மானமுமின்றி முடிவுற்றது என அவர் குற்றச்சாஞ்சாட்டினார்.

இந்த கூட்டம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், விடிவெளிக்கு மேலும் குறிப்பிடுகையில்,

'நாட்டிலுள்ள இன விகிதாரசத்திற்கு அமைய குறித்த வீட்டுத் திட்டம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அமைச்சர் தயா கமகே இதன்போது தெரிவித்தார்.  எனினும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் பலத்த எதிர்ப்பினை வெளிட்டதுடன் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த வீட்டுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட சவூதி அரேபிய தூதுவர் அப்துல் நாசர் எச். அல் ஹாரீதும், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கே இந்த வீடுகள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே கருத்து வெளியிட்டார்.

அமைச்சர் தயா கமகேயின் கருத்தினால் இந்தக் கூட்டம் எந்தவித தீர்மானமுமின்றி நிறைவுபெற்றது. எவ்வாறாயினும் அம்பாறை மாவட்ட செயலாளர் தலைமையில் மிக விரைவில் கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானமொன்றை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டது.

இதனால் இந்த வீட்டுத் திட்டம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் பகிர்ந்தளிக்கப்படும் என்ற நம்பிக்கையுள்ளது. இதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுக்கும்' என்றார்.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால்  பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களுக்காக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரபின் முயற்சியினால் சவூதி அரசாங்கத்தினால் இந்த வீட்டுத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டது.

550 கோடி ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டுத் திட்டத்தில் 500 வீடுகள், ஆண்கள் மற்றும் பெண்கள் பாடசாலைகள், பள்ளிவாசல், வைத்தியசாலை, நூலகம், பொதுச் சந்தை, கலாசார மண்டபம் மற்றும் பேரூந்து நிலையம் ஆகியன உள்ளடங்கியுள்ளன.

இந்த வீடமைப்புத் திட்டம் உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்பட இருந்த நிலையில், ஜாதிக ஹெல உறுமயவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கமைய இந்த வீட்டுத் திட்டத்திலுள்ள வீடுகள் மூவின மக்களின் விகிதாரசத்திற்கமைய பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா தலைமையிலான உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழுவினால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் 2007ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டம் இன்று வரை உரிய பயனாளிகளுக்கு கையளிக்கப்படாமல் பாழடைந்தும், சேதமடைந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்ட சவூதி அரேபியாவின் சூரா சபையின் (பாராளுமன்றம்) தலைவர் கலாநிதி அப்துல்லா பின் மொஹமட் பின் இப்ராஹிம் அஷ் ஷெயின் விடுத்த வேண்டுகோளினை அடுத்தே அக்கரைப்பற்று சுனாமி வீடமைப்புத் திட்டம் தொடர்பாக கூட்டம் சபாநாயகரினால் கூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது

-றிப்தி அலி-