விரிவுரையாளர் உயிருடன் இருக்கும் போதே இறந்ததாக அறிவித்த முன்னணி இணையத்தளங்கள்

விரிவுரையாளர் உயிருடன் இருக்கும் போதே  இறந்ததாக அறிவித்த முன்னணி இணையத்தளங்கள்

அருண் ஆரோக்கியனாதன்

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19ஆம் திகதி இரவு   யானைத் தாக்குதலுக்குள்ளான பெண் விரிவுரையாளர் வைத்தியசாலையின் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக இலங்கையின் முன்னணி இணைத்தளத்தளங்கள் செய்தி வெளியிட்டன

இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை 24ஆம் திகதி மாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விசாரித்த போது இன்னமும் 32 வயதுடைய விரிவுரையாளர் காயத்திரி டில்ருக்ஷி வைத்தியசாலையின் நரம்பியல் பிரிவிலுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சம்பவம் இடம்பெற்று மறுநாளே ( ஜுலை 20) சில ஊடகங்கள் விரிவுரையாளர் இறந்துவிட்டதாக செய்திகளைப் பிரசுரித்திருந்தன. ஆரம்பத்தில் செய்திகளைப் பிரசுரித்த தளங்கள்  கிசுகிசுக்களாகவும் செய்திகளைப் போடுகின்றவை என்று பார்த்தால் www.newswire.lk போன்ற  தரமான செய்திகளை வழங்கும் இணையத்தளங்களும்  விரிவுரையாளர் இறந்துவிட்டதாக செய்திகளைப் பிரசுரித்திருந்தன.

தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினியில் பிரசுரமான செய்தியை அடியொன்றியே விரிவரையாளர் இறந்து விட்டசெய்தியை பிரசுரித்திருந்ததாக அந்த இணையத்தளம் கூறியிருந்ததுடன் தவறைத் திருத்திவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறி நாகரீகமாக நடந்துகொண்டது.

ஆனால் வேறு பல இணையத்தளங்களோ விரிவுரையாளர் உயிருடன் இருக்கின்றார் என்று அறிந்த பின்னரும் தமது தவறுகளைத் திருத்திக்கொள்ள முன்வரவில்லை என்பது கவலைக்கிடமானது.

இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தனது ஃபேஸ்புக் தளத்தில் இவ்வாறான பதிவொன்றைப் போட்டிருந்தார்.

இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தங்கமுத்து சத்தியமூர்த்தியைத் தொடர்புகொண்டபோது அவர் கூறிய வார்த்தைகள் ஊடகவியலாளர்கள் என்று நினைவில் கொண்டிருக்க வேண்டிய படிப்பினையாக அமைந்திருந்தது. 

ஒரு நோயாளி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது அவர் இறந்துவிட்டாரா என்று கேட்காதீர்கள் என்று தனது பேஸ்புக் தளத்தில் பதிவிட்டிருந்த கருத்துக்களை மீள கூறியதுடன் மேலும் சிலவிடயங்களையும் பகிர்ந்துகொண்டார்.

ஒரு நோயாளியின் நிலைமை பாரதூரமாக இருப்பினும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு அவரை எப்படியேனும் உயிர் பிழைக்க வைத்திட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். அப்படியான நிலையில் அவர்களது நம்பிக்கையை நாம் மதிக்க வேண்டும். அவர்களுக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று அவர் எடுத்துரைத்தார்.

செய்திகளை ஏனையவர்களுக்கு முன்னர் போட வேண்டும் என்ற உணர்வு பலர் உறுதிப்படுத்தாத செய்திகளைப் போடுவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. மேலும் சிலர் நம்பகரமான செய்தித்தளங்களில் நம்பியிருக்கும் நிலையில் அந்த தளங்கள் தவறிழைக்கும் போது தவறாக செய்திகளைக் பிரசுரிக்கின்றனர்.

ஒருவர் ஒரு விபத்திலோ வன்முறையிலோ வேறு ஏதேனும் அனர்த்த்திலோ சிக்கி கடுங்காயமுற்று அவர் உயிர்பிழைப்பதற்கு 1% சந்தர்ப்பமே இருந்தாலும் அவர்தம் குடும்பம்  நெருக்கமானவர்கள் நண்பர்களின் நிலைநின்று சிந்தித்து செயற்படவேண்டும். ஊடகங்களுக்கு அது ஒரு செய்தி ஆனால் அவர் சார்ந்தவர்களுக்கு வாழ்க்கை.

எனவே ஊடகங்கள் பொறுப்புடன் இனியேனும் செயற்படவேண்டும் . அதிகம்பேர் பார்க்க வேண்டும் என்பதற்காக போலியான செய்திகளைப்போடுவதை உறுதிப்படுத்ததப்படாத செய்திகளைப் பிரசுரிப்பதை தவிர்த்துக்கொள்ளவேண்டும்.

எப்போதேனும் ஒரு செய்தியை தவறாக பிரசுரிக்கும் ஊடகங்கள் அதனை திருத்திக்கொண்டால் மன்னிக்க முடியும். ஆனால் திட்டமிட்டு போலிச் செய்திகளை பரப்பி மக்களைக் குழப்பும் ஊடகங்களை மக்கள் நிராகரிக்கவேண்டும். மக்கள் நிராகரித்தால் அவர்கள்  ஒன்றில் ஒதுங்கிவிடுவார்கள் அன்றேல் சரியான தடத்திற் குவருவார்கள் .

செய்திகளை இணைத்தளங்களில், ஃபேஸ்புக் பக்கங்களில் கண்டவுடன் அதனை எடுத்த எடுப்பிலேயே பகிர்ந்துவிடக்கூடாது. மாறாக அவை இலங்கையிலுள்ள பெரும் செய்திநிறுவனங்களால் நடத்தப்படும் இணையத்தளங்கள் மற்றும் சமூகவலைத்தளங்களில் வந்துள்ளதாக என்று பார்க்கவேண்டும்.

அதற்கு மேலாக யார் செய்தியுடன் சம்பந்தப்பட்டுள்ளார்களோ உதாரணமாக ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அங்குள்ள பொறுப்பு வாய்ந்த அதிகாரியிடம் உறுதிப்படுத்திக்கொள்ளது மிக அவசியமாகும்.