பாக். பிரதமரின் பாராளுமன்ற உரை அரசாங்கத்தினாலேயே இரத்துச் செய்யப்பட்டது: லக்ஷ்மன் கிரியொல்ல

பாக். பிரதமரின் பாராளுமன்ற உரை அரசாங்கத்தினாலேயே இரத்துச் செய்யப்பட்டது: லக்ஷ்மன் கிரியொல்ல

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரையினை இரத்துச் செய்யும் தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானமாகும் என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா (முதற்கோலாசான்) சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியொல்ல தெரிவித்தார்

மாறாக, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இது தொடர்பில் எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பாராளுமன்ற உரையினை இரத்துச் செய்யப்பட்டமை தொடர்பில் மக்களுக்கு தெளிவொன்றை வழங்கும் நோக்கில் எதிர்க் கட்சியின் பிரதம கொறடா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கடந்த பெப்ரவரி 08ஆம் திகதி நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் தினேஷ் குணவர்தன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாகவும், பெப்ரவரி 24ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என்றும் அறிவித்தார்.

அதே கட்சித் தலைவர் கூட்டத்தில் சகல கட்சித் தலைவர்களும் இதற்கு அனுமதியளித்தனர். இந்த நிலையில், பெப்ரவரி 18ஆம் திகதி இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டத்தின் போது, இம்ரான் கான் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்தமாட்டார் என சபை முதல அறிவித்தார்.

எதிர்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாகிஸ்தான் பிரதமரின் உரையை செவிமெடுக்க மிக ஆவலாக இருப்பதாகவும், அவரின் பாராளுமன்ற உரை இரத்துச் செய்யப்பட்டதன் காரணம் ஏது என்றும் இதன் போது தான் எதிர்க் கட்சியின் பிரதம முதற்கோலாசான் என்ற வகையில் வினவினேன்.

சபாநாயகரின் அனுமதியுடன், பாகிஸ்தான் பிரதமரின் பாராளுமன்ற உரை கொவிட் - 19 நிலைமைகளை கருத்திற் கொண்டு ஏலவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாற்றமான ஒர் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், இத்தீர்மானம் இலங்கை அரசும், பாகிஸ்தான் அரசும் இனைந்து எடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதன்போது தான் எதிர்க் கட்சியின் பிரதம முதற்கோலாசான் என்ற வகையில், இத்தீர்மானம் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட ஒர் தீர்மான் என்றும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் குறிப்பை இடுமாறு வேண்டிக் கொண்டோன்" என்றார்.