'அபிவிருத்தியை செயற்பாடுகளுக்கு தரவு பகுப்பாய்வு மத்திய பணியகமொன்று அவசியம்'

 'அபிவிருத்தியை செயற்பாடுகளுக்கு தரவு பகுப்பாய்வு மத்திய பணியகமொன்று அவசியம்'

2020 பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் கூடிய மக்களால் வழங்கப்பட்ட மகத்தான ஆணை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்று பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இலங்கையின் திட்டமிடல் சேவை சங்கத்தின் பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கு மகத்தான மக்கள் ஆணையை பெற்றுக்கொடுத்த பொதுமக்கள் இந்நாட்டு அபிவிருத்தியில் தெளிவான மாற்றத்தை எதிர்பார்ப்பதாகவும், அந்த மாற்றத்தைக் கொண்டுவருவதில் திட்டமிடல் சேவைக்கு பெரும் பங்கு உண்டு என்றும் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பங்களிப்பு செய்ய விருப்பம் தெரிவித்த இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கம், அதற்கான நிறுவன கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அவசியம் குறித்து பசில் ராஜபக்ஷவிடம் முன்வைத்தனர்.

அனைத்து அரச சேவைகளையும் மையமாகக் கொண்டு இந்த கட்டமைப்பு மற்றும் நிர்வாக மாற்றங்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கான ஒருங்கிணைப்பு செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக இதன்போது பசில் ராஜபக்ஷ அவர்கள் இலங்கை திட்டமிடல் சேவைகள் சங்கத்தினரிடம் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பசில் ராஜபக்ஷ,

"நாட்டின் தேவைகளுக்கு ஏற்ப மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும் என குறிப்பிட்டார். விசேடமாக தொழிலாளர்களை மையப்படுத்தி இந்நாட்டின் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

அபிவிருத்தி உள்கட்டமைப்பு மேம்பாட்டுடன் மட்டுப்படுத்தப்படக் கூடாது, ஆனால் மக்களின் பங்களிப்புடன் ஒரு விரிவான அபிவிருத்தி செயற்பாட்டை நோக்கி செல்ல வேண்டும். இது பல்வேறு அரச நிறுவனங்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்து தேவையான திட்டங்களை வகுக்கவும், அதற்கு அவசியமான தரவுகளை சேகரித்து நிகழ்கால மற்றும் எதிர்கால தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய தரவு சேமிப்பு மையத்தை அமைக்க வேண்டும்" என்றார்.