ஜப்பானிய அரசாங்கத்தினால் வெளியுறவு அமைச்சரின் புகழுரை - 2021 அறிவிப்பு

ஜப்பானிய அரசாங்கத்தினால் வெளியுறவு அமைச்சரின் புகழுரை - 2021 அறிவிப்பு

ஜப்பானிய வெளியுறவு அமைச்சரின் புகழுரை 2021 ஐப் பெறும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை ஜப்பானிய அரசாங்கம் நேற்று (20)அறிவித்திருந்தது.

1. இலங்கை கண் தான சங்கம்

1961ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது முதல், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த ஜே.ஆர்.ஜயவர்தனவின் இறுதி அவாவின் பிரகாரம், இலங்கை கண் தான சங்கத்தினால் (SLEDS) இதுவரையில் 8,000 க்கும் அதிகமான (வருடாந்தம் 200 க்கும் அதிகமான) விழிவெண்படலங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் விழிவெண்படலங்களும், இடது கண் ஜப்பானிய பெண் ஒருவருக்கும், வலது கண், இலங்கை குடிமகன் ஒருவருக்கும் வழங்கப்பட்டிருந்தன.

இதற்கு பிரதியுபகாரமாக, இலங்கை கண் தான சங்கத்துக்கு நன்கொடை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதுடன், ஜப்பான் மற்றும் இலங்கை இடையே பரஸ்பர நட்பு மற்றும் மருத்துவ தொடர்பாடல்களை ஊக்குவித்த வண்ணமுள்ளது.

1951ஆம் ஆண்டில் இடம்பெற்ற சான் பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்பு மலர ஆரம்பித்தது. இந்த நிகழ்வின் போது ஜே.ஆர் ஜயவர்தன மேற்கொண்டிருந்த உரையின் போது, சர்வதேச சமூகத்துடன் ஜப்பான் மீள இணைந்து கொண்டமையை ஆதரித்தும், அதற்கு புத்த பெருமானின் வழிகாட்டலான – வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது, மாறாக அன்பால் வெல்ல முடியும் என்பதை குறிப்பிட்டிருந்தார்.
 
இலங்கை கண் தான சங்கம் என்பது சான் பிரான்சிஸ்கோ மாநாட்டின் போது அறிவிக்கப்பட்டதுடன், செப்டெம்பர் மாதத்தில் 70 வருட பூர்த்தியை கொண்டாடுகின்றது.


2. சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி. கருணாரட்ன - கொழும்பு பல்கலைக்கழகத்தின் வியாபார பொருளாதார பிரிவு, மற்றும் டோக்கியோ இலங்கை அலுவலக பல்கலைகழகத்தின் பணிப்பாளர்

சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி. கருணாரட்ன மூன்று தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கை மற்றும் ஜப்பான் இடையே கல்விசார் தொடர்புகளை முன்னெடுத்த வண்ணமுள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் MEXT புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நாகோயா பல்கலைக்கழகத்தில் தமது பொருளாதார PhD பட்டத்தை பெற்றுள்ள இவர், ஜப்பானின் யுத்தத்துக்கு பின்னரான பொருளாதார அதிசயம் தொடர்பில் கற்பித்ததுடன், இந்த விடயம் தொடர்பில் பல வெளியீடுகளையும் பிரசுரித்திருந்தார்.

இலங்கை ஜப்பானிய பட்டதாரிகள் பழையமாணவர் சம்மேளனத்தில் முக்கிய பங்கை பேராசிரியர் கருணாரட்ன வகிக்கின்றார். தற்போதைய தலைவர் என்பதும் இதில் அடங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையேயும் புலமைப்பரிசில் அடிப்படையில் பரஸ்பர புரிந்துணர்வை வலுப்படுத்துவதில் பங்களிப்பு வழங்கியிருந்ததுடன், இலங்கை மற்றும் ஜப்பான் இடையே இராஜதந்திர உறவுகளின் 60 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு வெளியிடப்பட்ட “A Journey in Harmony: Sixty Years of Japan-Sri Lanka Relations” எனும் ஞாபகார்த்த புத்தகத்தையும் பதிப்பாய்வு செய்திருந்தார்.

2019 ஆம் ஆண்டில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் இலங்கை அலுவலகத்தின் முதல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிரேஷ்ட பேராசிரியர் கருணாரட்ன, சவால்கள் நிறைந்த கொவிட்-19 சூழ்நிலையிலும் ஒன்லைன் நிகழ்ச்சித்திட்டங்களினூடாக ஜப்பானில் கல்வி பயிலுங்கள் என்பதை ஆர்வத்துடன் ஊக்குவித்திருந்தார்.

வெளியுறவு அமைச்சரின் புகழுரை விருது என்பது வருடாந்தம், தமது நாடுகள் மற்றும் ஜப்பான் இடையே பரஸ்பர புரிந்துணர்வு, நட்பு மற்றும் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒன்றிணைவு, தகவல் மற்றும் கலாசார செயற்பாடுகள் போன்றவற்றுடன், இதர சர்வதேச உறவுகளையும் மேம்படுத்தியிருந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இலங்கை கண் தான சங்கம் மற்றும் சிரேஷ்ட பேராசிரியர் எச்.டி.கருணாரட்ன ஆகியோருக்கு இரு நாடுகளுக்கிடையேயும் உண்மையான நட்பை மேம்படுத்தும் வகையில் செயலாற்றுகின்றமைக்காக ஜப்பானிய தூதரகம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றது.