ஜெனீவாவில் ஆதரவளித்தமைக்கு பாக். உயர் ஸ்தானிகரை சந்தித்து அமைச்சர்கள் நன்றி தெரிவிப்பு

ஜெனீவாவில் ஆதரவளித்தமைக்கு பாக். உயர் ஸ்தானிகரை சந்தித்து அமைச்சர்கள் நன்றி தெரிவிப்பு

றிப்தி அலி

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்தமைக்காக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்  முஹம்மத் சாத் கட்டாகினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் தேசிய தினத்தினையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நிகழ்வொன்று கடந்த செவ்வாய்க்கிழமை (23) கொழும்பிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டேலொன்றில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் அனைத்து அமைச்சர்களையும் கலந்துகொள்ளுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியதாக தெரிய வருகின்றது. இந்த நிகழ்வு ஆரம்பிப்பதற்கு சில மணித்தியாலங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றது.

வழமையாக திங்கட்கிழமை பி.ப 5.00 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகின்ற நிலையில் இந்த வார அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்ட்டது.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றமையினால் இது தொடர்பில் கலந்துரையாடும் முகமாவே அமைச்சரவைக் கூட்டம் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகாமையிலுள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெறும் பாகிஸ்தானின் தேசிய தின வரவேற்பு நிகழ்வில் அனைத்து அமைச்சர்களும் பங்குபற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராபஜக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சர்களை அறிவுறுத்தினர்.

அத்துடன், குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு இலங்கை ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் செயற்பட்டதற்காக நன்றி தெரிவிக்குமாறு அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதற்கமைய, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன, அமைச்சர்களான தினேஷ் குணவர்த்தன, நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, மஹிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான தயாசிரி ஜயசேகர, துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவன்ன உள்ளிட்ட அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் வெளியுரவு செயலாளர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஜயந்த கொலம்பகே ஆகியோர் நிகழ்வு ஆரம்பம் முதல் இறுதி வரை பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.