முஸ்லிம் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தத் தீர்மானமுமில்லை: அரசாங்கம்

முஸ்லிம் எம்.பிக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பில் எந்தத் தீர்மானமுமில்லை: அரசாங்கம்

எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வரும் ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் குழுவிற்கு அமைச்சர் பதவிகள் வழங்குவது தொடர்பில் இதுவரை எந்தத் தீர்மானமுமில்லை என அரசாங்கம் இன்று (07) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை இணைப் பேச்சாளரான ரமேஷ் பத்திரன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

"பாராளுமன்றத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது முதல் இன்று வரை குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர்.

இவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது தொடர்பில் இதுவரை அரசாங்கத்தினால் எந்தத் தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை. பாராளுமன்றத்தில் ஆளுந் தரப்பில் 113 பேர் மாத்திரமே அமர முடியும்.

எனினும், தற்போது 150க்கு மேற்பட்டோர் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து வருகின்றனர். இதனால் அரசாங்க தரப்பினைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த் தரப்பில் அமர்ந்து வருகின்றனர்.

அது போன்று குறித்த ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த் தரப்பில் அமர்த்தப்பட்டுள்ளனர். எனினும் இவர்களை அரச தரப்பிற்கு இடமாற்றுவதற்கு தேவையான ஆசன ஒதுக்கீட்டினை மேற்கொள்ளும் அதிகாரம் சபநாயகரிடமே உள்ளது" என்றார்.