மின்சார நெருக்கடிக்கு தீர்வு: புதுப்பிக்கத்தக்க சக்தியினைப் பயன்படுத்தும் யாழ். பல்கலை

மின்சார நெருக்கடிக்கு தீர்வு: புதுப்பிக்கத்தக்க சக்தியினைப் பயன்படுத்தும் யாழ். பல்கலை

கிளிநொச்சியிலிருந்து றிப்தி அலி

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் இலவசக் கல்வியின் மூலம் பல்லாயிரக் கணக்கான பல்துறைசார் பட்டதாரிகளை உருவாக்கி வருகின்றது.  இதற்காக மின்சாரம், நீர் போன்ற பல அத்தியவசிய சேவைகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டியுள்ளது.

இந்த சேவைகளை ஒருபோதும் புதுப்பிக்கத்தக்க முடியாது. இதனால், பல்கலைக்கழகம் உட்பட உலகத்திலுள்ள அனைத்து தரப்பினரும் காலநிலை மாற்றத்தின் காரணமாக புதுப்பிக்கத்தக்க சக்திகளை தேடி அலைகின்றனர்.

எமது நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் எரிபொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால், நாடளாவிய ரீதியில் மின்சாரத் தடை ஒவ்வொரு நாளும் அமுல்படுத்தப்படுகின்றது.

இதனால், மக்கள் பல சொல்லொன்னாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். இவ்வாறான நிலையில், புதுப்பிக்கத்தக்க சக்திகளைக் கொண்டு மின்சார உற்பத்தியினை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, புதுப்பிக்கத்தக்க சக்திகளில் ஒன்றான சூரிய சக்தியினை கொண்டு மின்சார உற்பத்தியினை மேற்கொள்ளும் நடவடிக்கையினை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தற்போது முன்னெடுத்து வருவதுடன் அதில் வெற்றியும் கண்டுள்ளது.

மருத்துவ பீடம், பொறியியல் பீடம், பிரயோக விஞ்ஞான பீடம் உள்ளிட்ட பல பீடங்களைக் கொண்ட இந்த பல்கலைக்கழகம், யாழ். வளாகம், கைதடி வளாகம் மற்றும் கிளிநொச்சி வளாகம் ஆகியவற்றினையும்; கொண்டுள்ளது.   

கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகரில் பல ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  கிளிநொச்சி வளாகத்தில் - பொறியியல், விவசாயம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய பீடங்கள் காணப்படுகின்றன.
இதில் பொறியியல் பீடத்தினாலேயே சூரிய சக்தியினைக் கொண்டு மின்சார உற்பத்தி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்காக கடந்த 2014ஆம் ஆண்டு இந்த பீடத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால்; நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மின் சக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை ஆகியவற்றின் ஊடாகவே இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கூரைக்கு மேலான சோலார் பீவி முறைமையின் ஊடாக 60 கிலோவார்ட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக 12 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகம் போன்று, பேராதெனிய, ருகுணு மற்றும் மொரட்டுவை ஆகிய பல்கலைக்கழகங்களிலும் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

"இதில், யாழ். பல்கலைக்கழகம் சிறந்த பெறுபேற்றினை வழங்கியிருந்தது" என இப்பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் ஏ. அற்புதராஜா தெரிவித்தார்.

"எமது வளாகம் அமையப் பெற்றுள்ள பிரதேசத்தின் காலநிலையே இதற்கான பிரதான காரணமாகும். இதனால் எமது பீடத்திற்கான மின்சாரக் கட்டணம் பாரியளவில் குறைவடைந்துள்ளது" என அவர் மேலும் கூறினார்.

சூரிய சக்தியின் ஊடாக மின்சார உற்பத்தியினை மேற்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கையினை யாழ். பல்கலைக்கழகம் தற்போது முன்னெடுத்துள்ளது.

இதற்கமைய கணக்காளர்கள், பாடசாலை அதிபர்கள் போன்ற பல்வேறு தரப்பினரை பல்கலைக்கழகத்திற்கு நேரடியாக அழைத்து வந்து இந்த மின்சார உற்பத்தி  தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் முதற் தடவையாக நீரில் மிதக்கும் சோலரின் ஊடாக மின்சார உற்பத்தியினை மேற்கொள்ளும் செயற்திட்டம் கடந்த 2020ஆம் ஆண்டிலிருந்து இப்பீடத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.  

இந்த செயற்திட்டத்திற்காக 10 மில்லியன் ரூபா நிதி நோர்வேயினால் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து பொருட்களும் நோர்வேயிலிருந்து கொண்டுவரப்பட்டு அவர்களினாலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரயோக விஞ்ஞானத்திற்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகமும் யாழ். பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த செயற்திட்டத்தின் இணைப்பாளராக கொழும்பிலுள்ள நோர்வே தூதுவராலயம் செயற்படுகின்றது.

இங்கு மாதாந்தம் உற்பத்தி செய்யப்படும் சுமார் 5,000 கிலோவார்ட் மின்சாரம் தேசிய கீரிட்டுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் விவசாய பீடங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது.

இதேவேளை, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்கள் பல்கலைக்கழகம்  விடுமுறை என்பதால் இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.

வரட்சியான காலத்தில் நில மட்டத்திற்கும், மழை காலத்தில் நீரை விட அதிக உயரத்திற்கு சுயமாக மாற்றமடையக் கூடிய வகையில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும்,  "சூரிய சக்தியினால் மின்சாரத்தை உற்பத்தி செய்வது  தொடர்பில் மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் குறித்த விழிப்புணர்வினை வழங்குவதே பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்" என பேராசிரியர் ஏ. அற்புதராஜா கூறினார்.

இந்த செயற்திட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளில் ஏதிர்பார்க்கப்பட்ட அடைவு மட்டத்தினை விட அதிகமாக தற்போது சாதித்துவிட்டோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்தினால் ஏற்படும் சுற்றாடல் மாற்றங்கள் தொடர்பில் தற்போது யாழ். பல்கலைக்கழகத்தினால் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.  

இந்த மின்சார உற்பத்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் குளத்தின் நீரினை வெற்றுக் கைகளினால் தொட்டாலும் மின்சாரம் பாய்ச்சப்படுவதற்கான வாய்ப்பில்லாத வகையில் மிகவும் பாதுகாப்பாக மின் உற்பத்தி செயற்திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை எமது கள விஜயத்தின் போது நேரடியாக அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, யாழ். பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தினை வெற்றிகரமான ஒரு செயற்திட்டமாகவே நாங்கள் கருதுகின்றோம் என கொழும்பிலுள்ள நோர்வே தூதுவராலயம் தெரிவித்தது.

"இச்செயற்திட்டத்தின் மூலம் பல்கலைக்கழகத்திற்கு மாதாந்தம் சுமார் 8 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கப் பெறுகின்றது" எனவும் தூதுவராலயம் குறிப்பிட்டது.

இது போன்று உள்நாட்டில் காணப்படும் வளங்களைக் கொண்டு மிதக்கும் சோலார் மின்னுற்பத்தி நடவடிக்கையினை முன்னெடுப்பதை தூதரகம் வரவேற்கின்றது.

எதிர்காலத்தில் தனியார் துறையின் உதவியுடன் இந்த திட்டத்தினை விரிவாக்க முடியும் என தூதுவராலயம் நம்பிக்கை வெளியிட்டது. இது போன்று, புதுப்பிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்தி மின்சார உற்பத்தி செய்வதற்கான பல திட்டங்களை வட மாகாணத்தில் முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

குறிப்பாக மன்னார், பூநகரி, கொதாரமுனை போன்ற பிரதேசங்களில் காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பில் இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றையும் கடந்த மார்ச் மாதம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 500 மெகாவோட் மின்சாரத்தினை புதுப்பிக்கத்தக்க சக்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்காக மன்னார் மற்றும் பூநகரி ஆகிய பிரதேசங்களில் 500 மில்லியன் அமெரிக்க டொலரினை இந்தியாவின் அதானி நிறுவனம் முதலீடு செய்யவுள்ளது.

இதேவேளை, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.

குறிப்பாக, யாழ். பல்கலைக்கழகத்தினால் மின்சாரம் உற்பத்தி செய்வது போன்று ஏனைய பல்கலைக்கழகங்களும் தங்களுக்கு கிடைக்கின்ற புதுப்பிக்கத்தக்க வளங்களைக் கொண்டு மின்சார உற்பத்தியினை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

இதற்காக வேண்டி பல்கலைக்கழகங்களுக்கு இடையில் சிறந்த வலையமைப்பொன்றினை உருவாக்கி தொழிநுட்பங்கள், வளங்கள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றினை பகிர்ந்துகொள்வதன் மூலம் மின்சார உற்பத்தியினை பல்கலைக்கழகங்களினால் வினைத்திறனாக மேற்கொள்ள முடியும்.

இதன் ஊடாக நாடு இன்று எதிர்நோக்கியுள்ள மின்சார நெருக்கடிக்கு நிச்சயம் தீர்வு பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை.