றிபாய் ஹாஜியார்: தனது உழைப்பால் சமூகத்தையே வாழ வைத்த வள்ளல்

றிபாய் ஹாஜியார்: தனது உழைப்பால்  சமூகத்தையே வாழ வைத்த வள்ளல்

ரூமி ஹாரிஸ்

இலங்கையில் வரலாற்று சிறப்பும், கீர்த்தியும்மிக்க பிரதேசங்களில் தென்னிலங்கையின் பேருவளையும் ஒன்றாகும். இலங்கையின் முதலாவது முஸ்லிம் குடியேற்றமான மருதானை கிராமம்.

பேருவளையைச் சேர்ந்த சில தனிநபர்களது வியத்தகு பங்களிப்புக்களாலும் பேருவளை நாமம் சர்வதேசம் வரை வியாபித்ததுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

அவ்வாறு பேருவளையில் பிறந்து தேசிய ரீதியில் சமூகம், கல்வி, பொருளாதாரம், அரசியல், ஆன்மீகம் என பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கி நாட்டிற்கும், ஊரிற்கும் பெருமை சேர்த்தவர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.

அந்த வகையில் ஊரிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் தமது சொந்த நிதியிலிருந்து கோடானகோடிகளால் எண்ணற்ற சேவைகள் புரிந்த அறிவுத் தந்தை நளீம் ஹாஜியார், கொடை வள்ளல் றிபாய் ஹாஜியார் போன்றவர்களின் வகிபாகம் பாராட்டத்தக்கது.

இந்த ஆக்கம் அண்மையில் காலமான பிரபல சமூக சேவையாளரும், வர்த்தகருமான ஸ்ரீலங்கா சிகாமணி ZAM றிபாய் ஹாஜியார் அவர்களது வாழ்க்கைப் பயணத்தின் சில பக்கங்கள் குறித்து அவதானம் செலுத்தவுள்ளது.

ஆரம்ப காலமும், மாணவப் பருவமும்:

பேருவளை நகர சபையின் முதலாவது அமர்வின் உறுப்பினர்களில் ஒருவரான ஸைனுல் ஆப்தீன் மரிக்கார், தம்பி ஹாஜியார் ஆலியதும்மா தம்பதிகளுக்கு இரண்டாவது பிள்ளையாக ZAM றிபாய், 1936 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி பேருவளையில் பிறந்தார்.

சிறுவன் றிபாய் தற்போதைய பேருவளை மருதானை அல்பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியினை 1941ஆம் ஆண்டு ஆரம்பித்தார். பின்னர் கொழும்பு ஹமீத் அல் ஹுஸைனியா கல்லூரி, கம்பளை ஸாஹிரா கல்லூரி, தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி போன்றவற்றில் தனது பாடசாலைக் கல்வியினை மேற்கொண்டார்.

தொழில் பிரவேசம்:

தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்த மாணவன் றிபாய் உயர்கல்வியினை தொடராமல் தொழில் செய்வதற்கு ஆயத்தமானார். இரத்தினபுரி நகரிலுள்ள கடையொன்றில் பத்து ரூபாய் மாத சம்பளத்திற்கு விற்பனை உதவியாளராக இணைந்துகொண்டார்.

பின்னர் கொழும்பு மருதானையிலுள்ள Colombo Stores இல் தொண்ணூறு ரூபாய் மாத சம்பளத்திற்கு விற்பனையாளராக இணைந்துகொண்டார். அங்கு சில காலம் பணியாற்றிய றிபாய் பின்னர் அந்நிறுவனத்திலிருந்து விலகி பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள Sheriff and Faiz Textile நிறுவனத்தில் நூற்றி இருபத்தைந்து ரூபாய் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் சேர்ந்தார்.

அங்கும் சில காலம் பணியாற்றிய றிபாய் பின்னர் Silk Paradise நிறுவனத்தில் நூற்றி அறுபது ரூபாய் மாத சம்பளத்திற்கு பணியாற்றினார். பின்னர் கொழும்பிலுள்ள Sarathas நிறுவனத்தில் இருநூறு ரூபாய் மாத சம்பளத்திற்கு விற்பனையாளராக இணைந்துகொண்டார்.

பேருவளையிலிருந்து நாளாந்தம் கொழும்பிற்கு போக்குவரத்து செய்வது சிரமமாக இருந்தமையினால் சிறிய வாடகை அறை ஒன்றில் கொழும்பில் தங்கியிருந்தார் றிபாய்.

இவ்வாறு கொழும்பிலுள்ள சில வியாபார நிலையங்களில் பல வருடங்கள் பல்வேறு சிரமங்களோடும், அர்ப்பணங்களோடும் விற்பனையாளராக பணியாற்றி வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு கதைப்பது? எவ்வாறு வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்வது? போன்ற வாடிக்கையாளர் தொடர்பாடல்களையும், விற்பனை நுட்பங்களையும் றிபாய் பல வருட அனுபவமூடாக கற்றுக்கொண்டார்.

வாடிக்கையாளர்களுடன் இன்முகத்துடன் உறவாடி பொருட்களை விற்பனை செய்வதில் றிபாய் கைதேர்ந்தவராக இருந்தார். கடைசிவரை அவரது வியாபாரத்தின் வெற்றிக்கு இது பேருதவியாக இருந்ததெனலாம்.

இவ்வாறு வியாபார நிலையங்களில் பணியாற்றிக்கொண்டே சிறிய சேமிப்புக்களைக்கொண்டு தனது ஓய்வு நேரங்களில் சிறியளவிலான வியாபாரங்களையும் அவ்வப்போது மேற்கொண்டார் றிபாய்.

தான் ஒரு விற்பனையாளர் என்ற நிலையிலிருந்து வியாபாரி என்ற அந்தஸ்தை அடைவதற்கான கனவுப் பயணத்தினை அப்போதே ஆரம்பித்தார் றிபாய்.

திருமண வாழ்க்கை

1967ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி கொழும்பைச் சேர்ந்த உயர் குடும்பத்துப் பெண்ணான ஸித்தி பாயிஸா என்பவரை திருமணம் செய்தார் றிபாய். 'கொழும்பில் இவ்வாறான உயரிய அந்தஸ்துள்ள பெண் ஒருவரை திருமணம் முடிப்பது குறித்து தான் நினைத்துக்கூடப்பர்க்கவில்லை.

இது இறைவனின் பேரருளாகும்' என்று றிபாய் ஹாஜியார் தனது வாழ்க்கை வரலாறு தொடர்பிலான ஆவணப்படத்தில் தனது மனைவி குறித்து கூறியிருந்தார். இறைவனின் பேரருளினால் குடும்ப வாழ்வில் ஒரு ஆண் பிள்ளையும், இரண்டு பெண் பிள்ளையுமாக மூன்று பிள்ளைகளும், பதின்மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

ZAM றிபாய் அவர்கள் வியாபாராத்தில் மும்முரமாக இருந்த அதேவேளையில் குடும்ப வாழ்வில் தனது மனைவிக்கு அன்புமிகு கணவனாகவும், பிள்ளைகளுக்கு சிறந்த தந்தையாகவும், வழிகாட்டியாகவும், பேரப்பிள்ளைகளுடன் பாசம்மிக்க (பாட்டணார்) அப்பாவாகவும் மிளிர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

றிபாய் ஹாஜியாரின் குடும்ப வாழ்விலும், வியாபாரத்திலும், சமூக சேவைகளிலும் உறுதுணையாய் இருந்த அவரது அன்பு மனைவி ஸித்தி பாயிஸா அவர்கள் 2018ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார்கள்.

தொழிலதிபர்

திருமணத்தின் பின்னர் றிபாய் அவர்களது வாழ்க்கையிலும், வியாபாரத்திலும் வேகமான எழுச்சியும், வளர்ச்சியும் ஏற்பட்டதெனலாம். Refai’s எனும் பெயரில் ஆடை வியாபார நிலையமொன்றை நடாத்தி தனது வியாபார கனவினை ஆரம்பித்தார் ZAM றிபாய் ஹாஜியார்.

பின்னர் அவரது மனைவியின் குடும்பத்தினரால் கொழும்பு Oberoi ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்ட புத்தக வியாபார நிலையத்திற்கு பொறுப்பளாரராக றிபாய் ஹாஜியார் நியமிக்கப்பட்டார்.

இச்சந்தர்ப்பத்தில் மாலையில் தனக்கு அறிமுகமான இரத்தினக்கல் வியாபாரத்தில் ஈடுபடும் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார் ZAM றிபாய்.

அவர்களுக்குத் தேவையான இரத்தினக்கற்களை தனது உறவினர்கள் மூலமாக பெற்று விற்பனை செய்ய ஆரம்பித்தார். இதன்மூலம் குறிப்பிடத்தக்களவிலான இலாபத்தினை பெற்றுக்கொண்டார். இதுவே ZAM றிபாய் அவர்களது இரத்தினக்கல் வியாபாரத்தின் ஆரம்ப படிக்கற்களாகும்.

பின்னர் தனது ஒன்றுவிட்ட சகோதரரான ஸாபிர் பாஷா அவர்களின் உதவியுடன் கொழும்பு ஹோட்டல்களிலுள்ள வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை சந்தித்து இரத்தினக்கல் வியாபாரத்தினை மேற்கொண்டுவந்தார் ZAM றிபாய்.

இரத்தினக்கல் வியாபாரத்தில் றிபாய் ஹாஜியார் அவர்களிடம் காணப்பட்ட உண்மை, நேர்மை, நியாயமான விலை, உயர்ந்த தரம் போன்றவற்றினால் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் வர்த்தகர் றிபாய் ஹாஜியாருடனான வர்த்தக தொடர்புகளை பேணிக்கொண்டனர்.

இதன்மூலம் சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுக்கொண்டார் றிபாய் ஹாஜியார். தனக்கென தனியான வாடிக்கையாளர் வலையமைப்பொன்றினை றிபாய் உருவாக்கிக்கொண்டார்.

நாளுக்கு நாள் வியாபாரம் அமோகமாக நடைபெற ஆரம்பித்தது. கொழும்பிலுள்ள தனது சொந்தவீட்டிலேயே ஒரு இரத்தினக்கல் காட்சியறையினை அமைத்து வியாபாரத்தினை மேற்கொண்டார். பின்னர் நாளடைவில் வியாபாரத்தின் வளர்ச்சி காரணமாக றிபாய் ஹாஜியார் தனது வியாபாரத்தை நிறுவனமயப்படுத்த எண்ணினார்.

1976ஆம் ஆண்டு தனது பெயரின் முதலெழுத்துக்களைக்கொண்டு ZAM Gems எனும் வர்த்தக நாமத்தில் இரத்தினக்கல் வியாபார நிலையமொன்றை ஒரேயொரு ஊழியருடன் ஆரம்பிததார்.

தனது அயராத முயற்சியின் பலனாகவும், இறைவனின் பேரருளினாலும் விற்பனையாளராக தொழில் சந்தையில் பிரவேசித்த ZAM றிபாய், தொழிலதிபர் ZAM றிபாய் ஹாஜியாராக பரிணமித்தார். இறைவனின் பேரருளினாலும், அயராத உழைப்பினாலும் வர்த்தகராகும் தனது கனவினை நனவாக்கிக்கொண்டார் றிபாய் ஹாஜியார்.

ZAM Gems இரத்தின்க்கல் வியாபாரத்தில் தேசிய ரீதியில் மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் தனக்கென தனியிடத்தினையும், நன்மதிப்பினையும் குறுகிய காலத்திலேயே ஈட்டிக்கொண்டது.

இதன்மூலம் கொழும்பு பம்பலப்பிட்டியில் ZAM Gems தனது சொந்தக் கட்டடத்திலேயே தனது காட்சியறையினை 1989 ஆம் ஆண்டு நிறுவியது. ZAM Gems பின்னர் தனது கிளையினை கண்டி நகரில் ஆரம்பித்தது.

மேலும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் உட்பட நாட்டின் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், வர்த்தக அங்காடிகள் போன்றவற்றில் காட்சியறைகளை ZAM Gems நிறுவியது. ZAM Gems வர்த்தக நாமம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் பேரபிமானத்தை பெற்றமையினால் கடல்கடந்த நாடுகளிலும் சர்வதேச முன்னனி விமான நிலையங்களில் ZAM Gems தனது காட்சியறைகளை நிறுவி போட்டி நிறைந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் சந்தையில்

தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இதுவரை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் 15 கிளைகளைக் கொண்டுள்ளது ZAM Gems நிறுவனம். வர்த்தகத் துறையில் தேசிய, சர்வதேச மட்டங்களில் பல்வேறு விருதுகளையும், சான்றிதழ்களையும் ZAM Gems பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ZAM Gems ஊடாக எண்ணற்ற இரத்தினக்கல் வியாபாரிகள் தங்களது இரத்தினக் கற்களுக்கு நியாயமான விலையினை பெற்று இலாபமடைந்து வருவதுடன், ZAM Gems காட்சியறைகளில் மற்றும் ஆபரண வடிவமைப்பு தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர்.

ZAM Gems வியாபாரத்தினூடாக இலங்கையின் தேசிய பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்களவிலான அந்நியச்செலாவணி கிடைத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொடை வள்ளல்

ZAM றிபாய் ஹாஜியார் கோடீஸ்வரரானதன் பின்னர் கொடை வள்ளலலான ஒருவரல்ல. மாறாக விற்பனையாளராக கடையில் பணியாற்றும் போதே பெற்றுக்கொண்ட சிறிய சம்பளத்திலேயே தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தனது சக்திக்கேற்ப உதவிபுரியும் நற்பழக்கத்தினைக்கொண்டவர். அவரது வியாபாரத்தையும், வளர்ச்சியையும் போலவே அவரது பிறருக்கு உதவும் பண்பும் கூடவே வளர்ந்;தது என்பது பாராட்டுக்குரியது.

ZAM றிபாய் ஹாஜியாரைவிட பன்மடங்கு கோடீஸ்வரர்கள் பேருவளையில், இலங்கையில் வாழ்ந்தார்கள், வாழ்கின்றார்கள். ஆனால் அவர்களில் பலர் அவர்கள் மட்டுமே வாழ்ந்தார்கள். அனுபவித்தார்கள்.

ஆனால் றிபாய் ஹாஜியார் தான் மட்டும் வாழாது, தனது குடும்பத்தினரையும், ஊர் மக்களையும், சமூகத்தினரையும், நாட்டு மக்களையும் தன்னால் இயன்றளவு வாழவைத்தார்' என்பதே அவரது தனித்துவமாக இருந்தது.

"எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும், வாழ்வு வந்தால் அனைவரையும் வாழவைப்போமே.." என்ற பாடலினையே றிபாய் ஹாஜியார் அடிக்கடி முனுமுனுத்தாக அறியமுடிகிறது.

அதனால்தான் இன்று அவர் இறந்த பின்னரும் அவரைப்பற்றி இந்த பத்திரிகை மட்டுமல்லாது ஏனைய ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என எல்லா ஊடகங்களும் றிபாய் ஹாஜியார் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது.

செல்வத்தைக் கொடுக்கின்ற இறைவன் எல்லோருக்கும் அதனை பிறருக்கு வழங்குவதற்கான உள்ளத்தினை கொடுப்பதில்லை. அவ்வாறு இரண்டும் கிடைக்கப்பெற்ற சொற்பமானவர்களில் றிபாய் ஹாஜியாரும் ஒருவரே.

றிபாய் ஹாஜியாரது சமூக சேவைப்பணிகளைத் தடுக்காமல் அவரது நற்பணிகளை ஊக்குவித்த பெருமை அவரது மனைவி உட்பட அவரது பிள்ளைகள், உடன் பிறப்புக்கள மற்றும் குடும்பத்தினரையே சாரும்.

அவரது குடும்பத்தினரது பூரண ஒத்துழைப்புடன் இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமையினால் தங்குதடையின்றி றிபாய் ஹாஜியார் அவர்களினால் சமூக சேவைப்பணிகளை முழுவீச்சுடன் மேற்கொள்ளமுடியுமாக இருந்ததெனலாம்.

ZAM Trust எனும் சமூகசேவை நிதியத்தினை நிறுவி அதன்மூலம் குடும்பத்தினர்கள், ஊழியர்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள், அனர்த்த நிவாரணங்கள், வீடமைப்புத் திட்டங்கள் என இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி பல்வேறு சமூக நலப்பணிகளை மேற்கொண்டுவந்தார் றிபாய் ஹாஜியார்.

தனது செல்வச் செழிப்பிலும் பெண்கள்; கல்வியினை வலியுறுத்தியது மட்டுமல்லாது முன்னுதாரணத்தினையும் தனது குடும்பத்திலேயே உருவாக்கினார். தனது மகள் வர்தா றிபாய் அவர்களை வைத்தியராக்கினார். நாட்டிற்கும், சமூகத்திற்கும் பல்வேறு சேவைகளை வைத்தியர் வர்தா றிபாய் அவர்கள் மேற்கொண்டு வருகின்றமை பாராட்டத்தக்கது.

ZAM றிபாய் ஹாஜியார் அவர்களது பொருளாதாரம், கல்வித்துறை, சமூக சேவைப் பங்களிப்புக்களை பாராட்டி கௌரவிக்கும் முகமாக இலங்கை ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற அதியுயர் விருதுகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சிகாமணி விருது 2005 ஆம் ஆண்டு ZAM றிபாய் ஹாஜியார் அவர்களுகு வழங்கி வைக்கப்பட்டது.

குடும்பத்தினருக்கான உதவி

உழைக்க ஆரம்பித்த காலம்முதலே இளைஞர் றிபாய் தனது சொற்ப வருமானத்திலிருந்தே தனது நெருங்கிய குடும்பத்தினருக்கு தன்னால் இயலுமான பொருளாதார ஒத்துழைப்புக்களை வழங்கிவரும் ஒருவராகவே இருந்தார்.

பின்னர் தனது பொருளாதார வளர்ச்சிக்கேற்ப குடும்பத்தினருக்கான அவரது நன்கொடைகளும் அதிகரித்த வண்ணமே இருந்தன. குடும்பத்தினருக்குத் தேவையான ரமலான் கால உலர் உணவுகள் முதல் திருமணத்திற்கான உதவித்தொகைகள், நோயாளிகளுக்கான மருத்துவ செலவுகள், சுயதொழில் வாய்ப்புக்கள், மின்சாரம் மற்றும் குழாய் நீர் இணைப்பு போன்றவற்றை பெற்றுக்கொள்வதற்கான கொடுப்பனவுகள், வீடு கட்டிக்கொடுப்பது வரை குடும்பத்தினருக்கு தேவையான பல்வேறு உதவிகளையும் நீண்ட காலமாகவே மேற்கொண்டுவந்தார்.

குடும்பத்தினரோடு மட்டும் நின்றுவிடாது தனது பழைய வகுப்புத் தோழர்கள், அயலவர்கள், நண்பர்கள் என சகலருக்கும் எந்தவித வேறுபாடுமின்ற உதவிய தாராள மனம்படைத்தவர் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.

ஊழியர்களுக்கான உதவி

ZAM GEMS நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கையும், நேர்மையும், அர்ப்பண சேவையும்மிக்க அதன் ஊழியர்களது வகிபாகம் மெச்சத்தக்கது. அதனை கருத்திற்கொண்டு தனது ஊழியர்களுக்கு கௌரவமான வாழ்க்கையினை வழங்கவேண்டுமென்பதற்காக ஊழியர்களுக்குத் தேவையான பல்வேறு ஒத்துழைப்புக்களை ZAM GEMS வழங்கிவருகிறது.

உலர் உணவுப் பொருட்கள், பாடசாலை உபகரணங்கள், திருமண உதவித்தொகைகள், மருத்துவ உதவிகள், வீடமைப்பு போன்ற ஒத்துழைப்புக்களை தனது ஊழியர்களுக்கு வழங்கிவருகின்றது.

கல்வித்துறை

ZAM றிபாய் ஹாஜியார் அவர்கள் தனது ZAM TRUST ஊடாக பாடசாலைகளுக்கான கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு பெருமளவிலான நிதியினை வழங்கியுள்ளார். பாடசாலைகளுக்குத் தேவையான வளங்களை வழங்குவதனூடாக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தி கல்வித்துறையில் மறுமலர்ச்சியினை ஏற்படுத்துவதே ZAM றிபாய் ஹாஜியார் அவர்களது குறிக்கோளாக இருந்தது.

அதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளுக்குத் தேவையான கட்டடங்களை ணுயுஆ வுசரளவ அன்பளிப்புச் செய்துள்ளது. குறிப்பாக பேருவளையில் அமைந்துள்ள மாளிகாஹேனை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்குத் தேவையான சகல வசதிகளுடனும் கூடிய மூன்று மாடிக் கட்டடங்கள் நான்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் இப்பாடசாலை ZAM றிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயமாக பெயர்மாற்றம் செய்யப்பட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு 12 இல் அமைந்துள்ள பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு நான்கு மாடிக் கட்டடமொன்றும், தெமட்டகொடையில் அமைந்துள்ள ஹைரியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்குநான்கு மாடிக் கட்டடமொன்றும், மக்கொனை அல் ஹஸனியா மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், தர்கா நகர் ஸாஹிரா கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், பேருவளை மஹகொடை ILM ஸம்ஸுதீன் வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், அட்டுளுகமை அல் கஸ்ஸாலி தேசிய பாடசாலைக்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், வியங்கல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், களுத்துறை முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டடமொன்றும், பேருவளை மருதானை அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கு கட்டடங்கள் கட்டுவதற்கான காணியொன்றும், விசாலமான விளையாட்டு மைதானமும் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பேருவளை மருதானை அல் பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் கல்லூரியினை ஆரம்பிக்கும் போது பாடசாலைக்குத் தேவையான காணியினை 1936ஆம் ஆண்டு ZAM றிபாய் அவர்களின் தந்தையான மர்ஹும் ஸைனுல் ஆப்தீன் மரிக்கார் அவர்கள் அன்பளிப்புச்செய்திருந்தமை இங்கு நினைவுகூறத்தக்கது.

மேலும் களுத்துறை மாவட்டத்திலுள்ள பல முஸ்லிம் பாடசாலைகளுக்கு பல்வேறு உதவிகளை ZAM றிபாய் அவர்கள் வழங்கியுள்ளார்கள்.

ஆன்மீகத்துறை

சன்மார்க்க விழுமியங்களுடனும், அறநெறிகளுடனும்கூடிய சமூகமொன்றை கட்டியெழுப்புவதில் பள்ளிவாசல்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அந்தவகையில் ZAM TRUST ஊடாக பேருவளை, எலந்தகொடை ஷேக் முஸ்தபா ஜும்ஆ பள்ளிவாசல் முழுமையாக கட்டப்பட்டதோடு, பேருவளை மொல்லியமலை ஹிழ்ரியா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் வெலிப்பன்னை மஸ்ஜிதுன் நபவி ஜும்ஆ பள்ளிவாசல் என்பன புனரமைப்புச் செய்து கொடுக்கப்பட்டன.

மேலும் பேருவளை மஸ்ஜிதுல் அப்றார் ஜும்ஆ பள்ளிவாசலின் மையவாடி நவீனமயப்படுத்தல் பணிகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியேதாடு காலத்திற்குக் காலம் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாசலின் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கும் உதவிகள் செய்யப்பட்டுள்ளன. களுத்துறை மாவட்டத்திலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களுக்கு ZAM றிபாய் ஹாஜியார் அவர்கள் பல்வேறு நன்கொடைகளை வழங்கிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்துறை

கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும், கட்டட வசதிகளையும் ZAM TRUST அன்பளிப்புச்செய்து வருகிறது.

வீடமைப்பு

ZAM TRUST பேருவளை மற்றும் மன்னார் பிரதேசங்களில் நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளை வறிய மற்றும் தேவையுடையோருக்கு அன்பளிப்புச் செய்துள்ளது. குறிப்பாக மன்னார் பிரதேசத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீண்டும் தமது பூர்வீக பூமிகளில் மீளக்குடியேறிய குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டமொன்று அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2004ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த பேருவளை மருதானை மக்களுக்கு மஸ்ஜிதுல் அப்ரார் பள்ளிவாசலினால் நிர்மாணிக்கப்பட்ட தொடர்மாடி வீடமைப்புத் திட்டத்திறகு ZAM TRUST குறிப்பிடத்தக்களவிலான பங்களிப்பினை வழங்கியிருந்தது.

மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான மின்சார இணைப்பு மற்றும் குழாய்நீர் இணைப்புக்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

மாதாந்த கொடுப்பனவுகள்

ZAM TRUST மாதந்தம் நாடளாவியரீதியில் தொண்ணூறு விதவைகள், மற்றும் அநாதைகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கிவருவதுடன், தெரிவுசெய்யப்பட்ட முப்பது பல்கலைக்கழக மாணவர்களுக்குத் தேவையான புலமைப்பரிசில்களை மாதாந்தம் வழங்கிவருவதுடன், வறிய நூறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை மாதாந்தம் தொடர்ந்தும் அன்பளிப்புச் செய்து வருகிறது.

மேலும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு ரமழான் மாதத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களும், ஸகாத் உதவித் தொகைகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.

கூட்டு சமூகசேவை

ZAM TRUST தனிப்பட்ட நிதியமாக இருந்து பல்வேறு சமூகசேவைப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில் நாடளாவிய ரீதியில் சமூக சேவைப்பணிகளை மேற்கொண்டு வருகின்ற ZAMZAM Foundation, Fathih Academyபோன்ற முன்னனி சமூக சேவை அமைப்புக்களுடனும் இணைந்தும் செயற்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

மேலே பட்டியலிடப்பட்ட சமூக சேவைகள் மட்டுமல்லாது சமூக முன்னேற்றத்தையும், இறை திருப்தியையும் இலக்காகக்கொண்டு இன்னும் பல்வேறுவிதமான சமூகப்பணிகளை ZAM TRUST மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இறப்பு

தர்மம் தலைகாக்கும் என்பதுபோல ணுயுஆ றிபாய் அவர்கள் சுமார் 85 வருடங்கள் உயிர் வாழ்ந்தார். இன்றைய காலகட்டத்தில் ஒரு மனிதன் ஐம்பது வயதினை தாண்டுவதே அபூர்வமமானது.

அந்த வகையில் உறவினர்களையும், ஏழைகளையும் சேர்ந்து நடந்தமையினாலும், அதிகமதிகம் தர்மம் செய்தமையினாலும் இறைவன் அன்னாருக்கு நீடித்த ஆயுளை வழங்கியிருந்தான் எனலாம்.

2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி அதிகாலையில் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் ணுயுஆ றிபாய் அவர்கள் COVID - 19 தொற்று காரணமாக காலமானார்.

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா கிழக்கிலங்கையின் ஓட்டமாவடி, மஜ்மா நகரிலுள்ள கொரோனா தொற்றாளிகளுக்கான விசேட மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மண்ணில் மலர்ந்திருந்த
மாணிக்கத்தையே
மஜ்மா மண் தன்னுள்
மறைத்துக் கொண்டாள்.
மாமனிதருக்கு
மனிதம்மிக்க தன்மடியில்
மண்ணறை வழங்கி
மஜ்மா நகர்
மகிமைபெற்று
மகுடம் சூடிக்கொண்டாள்.
மஜ்மா மண்ணில் இனி
மறுமைவரை மலர்ச்சிதான்....