கொவிட்-19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்துக்கு உதவும் வகையில் ஜப்பானினால் நிதியுதவி

கொவிட்-19க்கு எதிரான இலங்கையின் போராட்டத்துக்கு உதவும் வகையில் ஜப்பானினால் நிதியுதவி

கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு எதிராக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதற்காக 800 மில்லியன் ஜப்பானிய யென் (சுமார் 1,400 மில்லியன் ரூபாய்) தொகையை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது.

மருத்துவ சாதனங்களை பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்த நன்கொடை நிதி வழங்கப்பட்டுள்ளது.  இந்த நன்கொடை தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நிகழ்வு நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சில் இன்று (08) புதன்கிழமை இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் சுகியாமா அகிரா மற்றும் நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆடிகல ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

கொவிட-19 தொற்றுப் பரவல் என்பது மனித குலத்துக்கு பெரும் ஆபத்தைத் தோற்றுவித்துள்ளதுடன், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அவசர மருத்துவ நிலையை கவனத்தில் கொண்டு, இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பிரகாரம், கடந்த மார்ச் மாதம் முதல் ஜப்பானிய அரசாங்கத்தினால் மருத்துவ சாதனங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகள் போன்றன வழங்கப்பட்ட வண்ணமுள்ளன.

இந்த சவால் நிலையை கட்டுப்பாட்டினுள் பேணுவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உறுதியான தலைமைத்துவத்தை பாராட்டியதுடன், ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையில் தொடர்ந்தும் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு மேம்படுத்திப் பேணும் வகையில், உதவிகளை பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நன்கொடையினால் பெற்றுக்கொள்ளப்பட்ட சாதனங்களில் MRI ஸ்கானர்கள், CT ஸ்கானர்கள், சிஸ்டம்கள் மற்றும்; சென்ரல் மொனிடர்கள் போன்றன அடங்குகின்றன.

இவை உடனடியாக கொவிட்-19 சிகிச்சைகள் வழங்கப்படும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளிலும், சிகிச்சை நிலையங்களிலும் பொருத்தப்படுடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால மற்றும் சுமூக உறவுகளை பிரதிபலிக்கும் வகையில், கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவது மாத்திரமன்றி, இலங்கையில் நிலைபேறான மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதிலும் ஜப்பானிய அரசாங்கம் பங்களிப்பு வழங்கும்.

இது இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நன்மதிப்;பு மற்றும் சுபீட்சத்தை மேம்படுத்துவதாக அமைந்திருக்கும்.