Quarantine Act இன் கீழ் கொவிட்-19 இனால் உயிரிழந்தவர்களை புதைக்கவும், தகனம் செய்யவும் முடியும்: GMOA

Quarantine Act இன் கீழ் கொவிட்-19 இனால் உயிரிழந்தவர்களை  புதைக்கவும், தகனம் செய்யவும் முடியும்: GMOA

உலகளாவிய ரீதியில் பரவும் கொவிட்-19 இனால் உயிரிழந்தவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்தின் (quarantine act) கீழ் புதைக்கவும், தகனம் செய்யவும் முடியும் என என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று அறிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்கவிற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அனுப்பியுள்ள கடித்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்ஜேவாவினால் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்களை அகற்றும் முறை குறித்து எமது அமைப்பின் உறுப்பினர்கள் பலர் அமைப்பின் நிலைப்பாட்டை வினவியுள்ளனர்.

தனிமைப்படுத்தல் சட்டம் தகனம் மற்றும் அடக்கம் இரண்டையும் மரணித்த உடலை அகற்றுவதற்கான வழிமுறைகளாக அனுமதிக்கிறது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கூறிய சட்டத்தின்படி, இந்த பிரச்சினை தொடர்பான இறுதி தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் உங்களிடம் உள்ளது. மேலும், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலில் உடலை அகற்றுவதற்கு இரண்டு முறைகளும் அனுமதிக்கப்படுகின்றன.

எனவே, பொது சுகாதாரம், வைராலஜி (Virology), சட்ட மருத்துவர்கள் (JMO) மற்றும் மண் பகுப்பாய்வு போன்ற அனைத்து தொடர்புடைய துறைகளிலும் உள்ள நிபுணர்களின் குழுவைக் கலந்தாலோசித்து உங்கள் தீர்மானத்தை எடுக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்.

மேலும் கொவிட் - 19 இனால் பாதிக்கப்பட்ட உடல்களை அகற்றும் முறை குறித்து சிறந்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.