IORA மற்றும் காலநிலை மாற்றம்

IORA மற்றும் காலநிலை மாற்றம்

பி.கே.பாலச்சந்திரன்

1997இல் அமைக்கப்பட்ட இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பு (IORA) என்பது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நிலையான அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்ட ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களை சந்திப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு உதவுவதும் இதுவாகும். IORA 23 திறத்துவ நாடுகளையும் 10 உரையாடல் பங்காளர்களையும் கொண்டுள்ளது.

திறத்துவ நாடுகள்: அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், கொமரோஸ் ஒன்றியம், பிரெஞ்சு குடியரசு, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், கென்யா, மடகாஸ்கர் குடியரசு, மலேசியா, மாலைதீவு, மொரிஷியஸ், மொசாம்பிக், ஓமன், சீஷெல்ஸ், சிங்கப்பூர், சோமாலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன்.

மேலும் பத்து உரையாடல் பங்காளிகள்: சீனா, எகிப்து, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, துருக்கி, கொரியா குடியரசு, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகியனவாகும். இதன் தற்போதைய தலைமை பங்களாதேஷ் ஆகும்.

அபாயகரமான பகுதி

இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் (IOR) "உலகின் அபாயகரமான பகுதி" என்று விவரிக்கப்படுகிறது, ஏனெனில் அது இயற்கை மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட அனர்த்தங்கள் ஆகிய இரண்டிற்கும் ஆளாகின்றது.

இயற்கை அனர்த்தங்களாவன: காலநிலை (சூறாவளி மற்றும் வறட்சி), புவியியல் மற்றும் நிலத்தட்டு (பூகம்பங்கள் மற்றும் சுனாமிகள்) மற்றும் நீரியல் (வெள்ளம் மற்றும்  வற்றுப்பெருக்கு அலைகள்).

UNESCAP இன் பிரகாரம், IOR இல் நிகழும் இயற்கை அனர்த்தங்களில் சுமார் 50% காலநிலை, புவியியல் மற்றும் நிலத்தட்டால் ஏற்படுபவையாகும். கடல் மட்டம் அதிகரிப்பதாலும், கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதாலும் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது.

எண்ணெய் கசிவுகள், தீ, நச்சு மற்றும் அழிவுகரமான பொருட்களின் கசிவு, சட்டவிரோத குப்பைகள் மற்றும் ஒழுங்குமுறையற்ற மீன்பிடி ஆகியவற்றின் மூலம் மனிதனும் கடலில் அனர்த்தங்களை உருவாக்குகின்றான்.

ஆனால் இதுவரை, காலநிலை மற்றும் நில அதிர்வு காரணிகள் பரந்த பகுதிகளில் நிலம் மற்றும் கடல் ஆகிய இரண்டிலும் அழிவை ஏற்படுத்துவதால் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்தோனேசியாவில் சுனாமிகள் மற்றும் பூகம்பங்கள், மடகாஸ்கரில் கடுமையான வறட்சி, இந்தியாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள், இந்தியப் பெருங்கடலின் தீவுகளில் பருவகால சூறாவளி, இன்னும் பல அனர்த்தங்கள் ஏற்பட்டன.

2008இல் மியான்மாரில் ஏற்பட்ட சூப்பர் சூறாவளி மற்றும் டிசம்பர் 2004 இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியை ஒருபோதும் மறக்க முடியாது.

உயிர் இழப்புகள் மற்றும் சொத்து சேதம் மற்றும் இயற்கை சூழலின் அழிவு ஆகியவை மிகப்பெரியவையாகும். இந்த அனர்த்தங்கள் பஞ்சங்கள், சமூக ஏற்றத்தாழ்வு மற்றும் பிற துயரங்களையும் தூண்டியுள்ளன. 1991 இலிருந்து 2005 க்கு இடையில், அனர்த்தங்கள் 3,470 மில்லியன் மக்களை பாதித்ததுடன், அவர்களில் 960,000 பேர் உயிரிழந்தனர்.

இந்தியப் பெருங்கடல் IOR நாடுகளில் வானிலையை மாற்றியமைப்பதுடன், மற்றையவிடயங்களுடன் மழை வீழ்ச்சியையும் பாதிக்கிறது. மேலும் இந்தப்பிராந்தியத்தில் மழை வீழ்ச்சி மிகவும் முக்கியமானது.

75% இந்திய விவசாயிகள் நீருக்காக பருவமழையை நம்பியுள்ளனர். கடல் மற்றும் வளிமண்டல செயன்முறைகள் இந்திய பருவமழையை ஒழுங்குபடுத்துவதுடன், இது பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், மீன்வளம் மற்றும் விவசாயத்தை ஆதரிக்கிறது.

ஆனால் காலநிலை மாற்றம் சமநிலையை சீர்குலைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இந்தியப் பெருங்கடலுக்கு மேலாக உள்ள வெப்ப அலைகள் கடலில் இருந்து வெகு தொலைவில் இருந்தாலும் மத்திய இந்தியாவில் பருவமழைவீழ்ச்சியைக் குறைக்கின்றன.

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதிகளின் விரைவான வெப்பமயமாதல் இந்திய துணைக் கண்டத்தில் சூறாவளிகளை தீவிரப்படுத்துகிறது.

குறைந்தபட்சம் ஐந்து நாட்களுக்கு நீரின் வெப்பநிலை பருவகால வரம்பைத் தாண்டினால், கடல் வெப்ப அலை ஏற்படும். கடல் வெப்ப அலைகள் வானிலை முறைமைகளை பாதிக்கலாம், ஏனெனில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை வளிமண்டல அழுத்தம் மற்றும் காற்றின் போக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, காலநிலை மாற்றம் இந்தியப் பெருங்கடலின் பரிமாணத்தை மகத்தான வழிகளில் மாற்றுகிறது என்ற தலைப்பில் அதிரா பெரிஞ்சேரியின் Wire Science இன் ஒரு பகுதி கூறுகிறது.

"இதன் கருத்து என்னவென்றால், கடல் வேகமாக வெப்பமடைகின்றது. இது வெப்பப் பாய்வை மேம்படுத்துகிறது - கடலில் இருந்து வளிமண்டலத்திற்கு சக்தியை மாற்றுகிறது. பொதுவாக, கடலில் உள்ள வெதுவெதுப்பான நீரால் வெளியிடப்படும் வெப்பம் மற்றும் ஈரப்பதன் வெப்பமண்டல சூறாவளிகளுக்கு எரிபொருளாகிறது. எனவே விரைவான வெப்பமயமாதல் சூறாவளிகளின் விரைவான தீவிரத்தை ஆதரிக்கிறது", என்று கோல் கூறினார்.

அனர்த்த முகாமைத்துவம்

அனர்த்த அபாயங்களை முகாமை செய்வது IOR இல் குறிப்பாக அவசரமானது என்று IORA கூறுகின்றது, ஏனெனில் இப்பகுதி அனர்த்தத்தை கையாளும் வளங்கள் மற்றும் சொத்துக்கள் இல்லாததால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிறிய தீவு அரசுகள் மற்றும் அதிக குடித்தொகை அடர்த்தி கொண்ட அபிவிருத்தி அடைந்துவரும் கரையோரத்தை அண்டிய நாடுகளின் தாயகமாகும்.

எனவே அனர்த்த அபாய முகாமைத்துவம் (DRM) என்பது IORA இனுடைய திறத்துவ நாடுகளின் கூட்டு நலன் சார்ந்த பகுதியாகும். எனவே, அனர்த்தங்களை துல்லியமாக எதிர்நோக்குவதற்கும், பதிலளிப்பதற்கும், அதிலிருந்து மீண்டு வருவதற்கும், அரசாங்கங்கள் மற்றும் சமூகங்களில் அறிவு மற்றும் திறன்களை வளர்ப்பதற்கான அவசரமான தேவை உள்ளது, என்று IORA கூறுகிறது.

IORA என்ன செய்கிறது?

காலநிலை மாற்றம் மற்றும் அதன் விளைவுகள் தொடர்பான விழிப்புணர்வு இந்த இலக்குகளை அடைவதற்கு முக்கியமாகும். IORA விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகின்றது.

அது தேசிய அரசாங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச பங்காளர்கள், நன்கொடையாளர்கள், சிவில் சமூகம் மற்றும் தனியார் துறை உட்பட பல் பங்குதாரர்களின் பங்கேற்பை உள்ளடக்கியதால், அனர்த்த முகாமைத்துவம் என்பதை ஒரு பல்துறை எண்ணக்கருவாக அங்கீகரிக்கிறது.

எனவே IORA பங்காண்மைகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டில் உள்ளதுடன் ஆய்வுகள், ஆராய்ச்சி மாநாடுகள் மற்றும் பயிற்சி அமர்வுகள் மூலம் இந்த பாதையில் முன்னேற்றம் கண்டுள்ளது.

IORA தனது பணியை விரிவாக விளக்கி, அதன் "சக்தி வாய்ந்த" காலநிலை குழு, தேசிய மற்றும் துணை - தேசிய அரசாங்கங்களுக்கு காலநிலை மாற்றத்தை வினைத்திறனாக எதிர்கொள்வதற்கு சான்று அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் அமுலாக்கல் கட்டமைப்புகளை வடிவமைக்க உதவுகிறது என்று கூறுகின்றது.

"கொள்கை மேம்பாட்டிற்கான எங்கள் தத்துவம், முழுமையான அடிப்படைநிலை மதிப்பீடுகளை நடாத்துதல், அமுலாக்கல் இடைவெளிகளைக் கண்டறிதல் மற்றும் நடைமுறையான மற்றும் ஆற்றல்மிக்க செயற்பாடு மற்றும் வளங்களைத் அணிதிரட்டும் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.

எங்களின் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அமைப்புகள் வினைத்திறனான கொள்கையை அமுலாக்குவதற்காக அடிக்கடியான பின்னூட்டம் மற்றும் பாடத் திருத்தத்தை உறுதிசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

"நாங்கள் வெற்றிகரமாக பச்சை வீட்டு வாயு (GHG) பதிவேட்டு அமைப்புகளை உருவாக்கியுள்ளதுடன், காலநிலை தணிப்பு மற்றும் இசைவாக்க நடவடிக்கைகளை கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டிற்காக crowdsourcing முறையிலான தகவல் சேகரிப்பு கட்டமைப்பை வடிவமைத்துள்ளோம்".

"தொழில்நுட்ப ரீதியில், எங்களின் குழு உறுப்பினர்கள் விவசாயம் மற்றும் வனவியல் மற்றும் நிலப் பயன்பாடு (AFOLU) துறைகளில் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டிற்கான காலநிலை மற்றும் தாவர மாதிரிகளை மேற்கொள்கின்றனர்".

முறையான உறுதிமொழிகள்

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் குறைந்தபட்சம் கோட்பாட்டளவில் காலநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு உறுதிபூண்டுள்ளன. பாரிஸ் ஒப்பந்தம் என்பது காலநிலை மாற்றம் தொடர்பான சட்டப்பூர்வமான சர்வதேச ஒப்பந்தமாகும்.

இது 12 டிசம்பர் 2015 அன்று பாரிஸில் COP21 இல் 196 திறத்துவ நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 4 நவம்பர் 2016 அன்று நடைமுறைக்கு வந்தது. கைத்தொழிற்துறைக்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடும்போது, புவி வெப்பமடைதலை 2 டிகிரிக்குக் குறைவாக, விரும்பத்தக்க 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்துவதே இதன் குறிக்கோளாகும்.

இந்த நீண்ட கால வெப்பநிலை இலக்கை அடைவதற்கு, நூற்றாண்டின் நடுப்பகுதியில் காலநிலை ரீதியில் நடுநிலையான உலகத்தை அடைவதற்கு பச்சைவீட்டு வாயு வெளியீடுகளின் உலகளாவிய உச்சநிலையை விரைவில் எட்டுவதனை நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும், "செண்டாய் கட்டமைப்பின்" வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, இயற்கை ஆபத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதாக நாடுகள் உறுதியளித்துள்ளன. அனர்த்த அபாயக் குறைப்புக்கான செண்டாய் கட்டமைப்பு 2015-2030 என்பது 2015க்குப் பிந்தைய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் முதலாவது பாரிய ஒப்பந்தமென்பதுடன், இது அனர்த்த அபாயத்திலிருந்து அபிவிருத்தி ஆதாயங்களைப் பாதுகாப்பதற்கு திறத்துவ நாடுகளுக்கு உறுதியான செயல்த்திட்டங்களை வழங்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் பிரகாரம், பாரிஸ் உடன்படிக்கை நடைமுறைக்கு வந்ததிலிருந்தான ஆண்டுகள் ஏற்கனவே குறைவான காபன் தீர்வுகளை உருவாக்கியுள்ளன. "அதிகமான நாடுகள், பிராந்தியங்கள், நகரங்கள் மற்றும் நிறுவனங்கள் காபன் நடுநிலையான இலக்குகளை நிறுவுகின்றன.

வெளியிட்டின் 25%த்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பொருளாதாரத் துறைகளிற்கிடையில் பூஜ்ஜிய-காபன் தீர்வுகள் போட்டித்தன்மை கொண்டதாக மாறுகின்றது. இந்த போக்கு மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் மிகவும் கவனிக்கத்தக்கது என்பதுடன் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு பல புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது" என்று UNFCC இணையதளம் கூறுகிறது.

நிதியுதவிக்கான போராட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அனைத்து நன்கு திட்டமிடப்பட்ட திட்டங்களும் பாரிய நிதியுதவியில் தங்கியுள்ளன. ஆனால் காலநிலை மாற்ற நிறுவனங்களுக்கு நிதியுதவி ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

பணக்கார நாடுகள் காலநிலை மாற்றத்தில் சிறிதளவு அக்கறையே காட்டுகின்றன அல்லது அக்கறை காட்டவில்லை. ஆனால் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் இவ்விடயத்தை எதிர்த்துப் போராடுவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகின்றது.

எகிப்தில் நடைபெற்ற COP27இல் இருந்து திரும்பிய பின்னர் பாராளுமன்றத்தில் பேசிய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுகையில், “G20 நாடுகள் தமது வெளியிடுகையை குறைக்கவில்லை. அவர்கள் வாக்குறுதியளித்த ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவர்கள் எந்த வகையிலும் வழங்கவில்லை.

எங்களுக்கு ஆண்டுக்கு 350 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்பட்டன, நாங்கள் அந்த உறுதிமொழியை கூட நிறைவேற்றவில்லை. அந்த வகையில், COP 26 இன் ஒப்பந்தங்கள் மற்றும் சாதனைகளுக்கு பின்னடைவைக் கொண்டு நாங்கள் COP 27 க்குள் சென்றோம்" என்றார்.

"இப்போது, நீங்கள் COP27இன் ஏற்பாடுகளைப் பார்த்தால், அபிவிருத்தியடைந்த நாடுகள் அல்லது G20 நாடுகள் எதுவும் மற்றையவற்றுடன் சில தீவிரமான உரையாடல்களை நடாத்தவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.

ஆரம்ப நாள் நிகழ்விற்கு மட்டுமே வந்திருந்த சில தலைவர்கள் அறிக்கைகளை வெளியிட்டபோதிலும் அவை பிரதான மாநாட்டில் அல்லாது அதனுடன் இடம்பெற்ற துணை நிகழ்வுகளுடன் தொடர்புடையவையாகும். பின்னர் அவர்கள் அனைவரும் புறப்பட்டனர்”.

உண்மையில், IORA க்கு இது ஒரு பயங்கரமான சூழ்நிலையாகும், ஏனெனில் அதன் உறுப்பினர்கள், குறிப்பாக சிறிய தீவு திறத்துவ நாடுகள், காலநிலை மாற்றத்தின் பேரழிவு வீழ்ச்சியின் சுமைகளைத் தாங்குகிறார்கள்.

"நாங்கள் COP28க்கு சென்று இந்த பிரச்சினைகள் தொடர்பில் G20 நாடுகளுடன் விவாதிப்பதே இதிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி என்று எங்களுக்குள் கலந்தரையாடிக்கொண்டிருந்தோம்.

பி.கே.பாலச்சந்திரன் கொழும்பில் இருந்து பல வருடங்களாக பல்வேறு செய்தி இணையதளங்கள் மற்றும் நாளிதழ்களில் தெற்காசிய விவகாரங்கள் குறித்து எழுதும் ஒரு சுயாதீன ஊடகவியலாளராவார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் எகனாமிஸ்ட் ஆகியவற்றிற்கு கொழும்பு மற்றும் சென்னையில் இருந்து அறிக்கை அளித்துள்ளார். இலங்கையில் டெய்லி மிரர் மற்றும் சிலோன் டுடே ஆகிய பத்திரிக்கைகளில் வாராந்திர பத்தி ஒன்றை எழுதுகின்றார்.

Factum என்பது ஆசியாவை மையமாக கொண்ட சர்வதேச உறவுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் மூலோபாய தொடர்புகள் பற்றிய சிந்தனைக் குழுவாகும், அதனை www.factum.lk மூலமாக அணுகலாம்.

இங்கே வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்கள் ஆசிரியரின் சொந்தக் கருத்துக்கள் என்பதுடன் நிறுவனத்தின் பிரதிபலிப்புக்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.