இரண்டு பாம் எண்ணெய் நிறுவனங்களினால் நாட்டுக்கு 6,130 மில்லியன் ரூபா இழப்பு

 இரண்டு பாம் எண்ணெய் நிறுவனங்களினால்  நாட்டுக்கு 6,130 மில்லியன் ரூபா இழப்பு

இரண்டு முன்னணி பாம் எண்ணெய் நிறுவனங்கள் காரணமாக  2013-2016 வருட காலப் பகுதியில் இலங்கைக்கு 6,130 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பது பாராளுமன்ற கணக்குகள் பற்றிய குழுவில் தெரியவந்தது.

இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக குறித்த காலப் பகுதியில் பிழையற்ற இணக்கமான பொருள் விளக்கக் குறியீட்டினை (HS Code) வழங்காமையால் இந்தத் தொகை இழக்கப்பட்டிருப்பதாக கணக்காய்வு திணைக்களத்தின் விசாரணைகளில் புலப்பட்டது.

இந்த மூன்று வருடங்களில் குறித்த நிறுவனங்களால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்தை அவற்றிலிருந்து பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை எதிர்காலத்தில் மேற்கொள்ள நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகல
நடவடிக்கை எடுத்திருந்ததுடன், இலங்கை சுங்கத் திணைக்களமும் இது தொடர்பில்
விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு
பரிந்துரைத்தது.

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் விஜித ரவிபிரிய இதற்கு இணக்கம் தெரிவித்தார். 2013ஆம் ஆண்டு முதல் இறக்குமதியாளர்களால் விசேட தேவைக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு அவை இரட்டைத் தேவையுடைய வாகனங்களாகப் பதிவுசெய்யப்பட்டமையால் வரியாகப் பெறப்படவேண்டிய 220 மில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு இழக்கப்பட்டுள்ளமையும் இங்கு வெளியானது.

2010 - 2019 வரையான காலப் பகுதியில் 443 விசேட தேவைக்கான வான்களுக்காக தலா 3 மில்லியன் ரூபா வீதம் ஆகக் குறைந்தது 1,300 மில்லியன் ரூபாவை அரசாங்கம் வசூலித்திருக்க முடியும் எனவும் இங்கு புலப்பட்டது.

அத்துடன், மோட்டார் லொறி மற்றும் வான் போன்றவை விசேட தேவைக்கான வாகனங்கள் எனக் கூறி இறக்குமதி செய்யும் செயற்பாட்டின் கீழ் 2010ஆம் ஆண்டு முதல் 10 வான்களும், 414 லொறிகளும் இறக்குமதி செய்யப்பட்டமையால் பாரிய சுங்க வரி முறைகேடு இடம்பெற்றிருப்பதாக கணக்காய்வு சுட்டிக்காட்டியுள்ளமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதேநேரம், ஏறத்தாழ ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான அதிசொகுசு மோட்டார்
வாகனம் விசேட தேவைக்கான வாகனங்கள் பிரிவின் கீழ் 1.5 மில்லியன் ரூபாவை மாத்திரம் அறவிடப்பட்டு சுங்கத் திணைக்களத்தினால் வெளிச்செல்ல அனுமதிக்கப்பட்ட விடயம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. அந்த வாகனம் உரிய வாகனப் பிரிவின் கீழ் விடுவிக்கப்பட்டிருந்தால் அரசாங்கத்துக்கு 56 மில்லியன் ரூபா சுங்க வரி அறிவிடப்பட்டிருக்கும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்ட பின்னர் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆர்ட்டிகலவின் இணக்கப்பாட்டுடன், சுங்க, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு இடையில் கலந்துரையாடல்களை நடத்தி விரைவில் தானியங்கி கணினி ஒப்பீட்டு பொறிமுறையொன்றை நடத்துவதற்கு இந்த குழு முன்னர் வழங்கிய பரிந்துரையை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டுமாயின் அதற்கான சட்டவாக்க நடவடிக்கைகளுக்கும் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் உறுப்பினர்கள் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.

பண்ட ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது சுங்கத் திணைக்களத்தினால் போதுமானளவு உள்ளக கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற விடயமும் இங்கு ஆராயப்பட்டது.

நிர்வாகத்தில் காணப்படும் இடைவெளி காரணமாக ஒரே நிறுவனத்தினால் ஆறு சந்தர்ப்பங்களில் 39,335,091 ரூபா பெறுமதியான வாசனைத் திரவியங்கள் அடங்கிய ஆறு கொள்கலன்கள் வெளிநாட்டு மருந்துகள் எனப் பெயரிடப்பட்டு மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை அரசாங்கத்துக்கு 40,761,600 ரூபா இழப்பு ஏற்பட்டிருப்பதுடன், மோசடியுடன் தொடர்புபட்ட அதிகாரிகளுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கப்படவில்லையென்றும் இங்கு வெளிப்பட்டது.

2019ஆம் ஆண்டு இலங்கையின் வருமானத்தில் 32.48 வீதத்தை சேகரிக்கும் சுங்கத் திணைக்கள அதிகாரிகள், உள்நுழைவதையும் வெளிச்செல்வதையும் பதிவுசெய்யும் கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமை, உள்ளக நிர்வாகத்தின் பலவீனம், திணைக்களத்தின் சட்டப் பிரிவுக்கான சட்டத்தரணி மற்றும் பிரதான கணக்காய்வாளர் ஒருவரை இணைத்துக்கொள்வது போன்ற விடயங்களும் குழு உறுப்பினர்களால் கலந்துரையாடப்பட்டன.

கணக்காய்வு மீள்நோக்கு அறிக்கைக்கான முழுமையான பதில்களுடன் சுங்கத் திணைக்கள அதிகாரிகளை மற்றுமொரு தினம் அழைப்பதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர, பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, அசோக அபேசிங்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, கலாநிதி ஹரினி அமரசூரி, வைத்திய கலாநிதி உபுல் கலபதி, எஸ்.சிறிதரன், நிரோஷா ரத்னசேகர மற்றும் வீரசுமன வீரசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.