தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான பரிந்துரையினை 7 அமைப்புக்கள் நிராகரிப்பு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான பரிந்துரையினை 7 அமைப்புக்கள் நிராகரிப்பு

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை உருவாக்குவது தொடர்பான பரிந்துரையினை ஏழு அமைப்புக்கள் கூட்டாக இணைந்து நிராகரித்துள்ளன.

அடையாளம் கொள்கைக்கான ஆய்வு நிலையம், தமிழ் சிவில் சமூக அமையம், சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையம், விழுது, தளம், திருகோணமலை, புழுதி, திருகோணமலை மற்றும் குரலற்றவர்களின் குரல் ஆகிய அமைப்புக்களே நிராகரித்துள்ளன.

இது தொடர்பில் குறித்த நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை அரசாங்கமானது உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் எனும் போர்வையில் உள்ளகப் பொறிமுறையாக புதியதொரு தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவொன்றைப் பரிந்துரை செய்துள்ளது.

இது எவ்வகையிலும் பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த சமூகத்தின் கோரிக்கைகளோடு ஒத்துப்போகவில்லை என்பதுடன் ஆயுதப் போராட்டத்திற்கு வித்திட்ட அடிப்படைக் காரணங்களை நிவர்த்தி செய்வதாயுமில்லை.

கடந்தகால அனுபவங்கள் மற்றும் உள்ளகப்பொறிமுறைகளில் நம்பிக்கையின்மை என்பவற்றின் பின்னணியில் இத் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நாம் பின்வரும் காரணங்களுக்காக நிராகரிக்கின்றோம்:

1. பாதிக்கப்பட்ட – உயிர் பிழைத்த தமிழ்ச் சமூகமானது அட்டூழியக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணை மற்றும் வழக்குத்தொடுதல் ஆகிய அம்சங்களை உள்ளடக்கியதாக நிலைமாறுகால நீதியின் நான்கு முக்கிக அம்சங்களை அடையும்பொருட்டுடன் வலுவானதும் முழுமையானதுமான சர்வதேசப் பொறிமுறையைத் தொடர்ச்சியாகக் கோரி வருகின்றது.

ஓர் உண்மைக்கான ஆணைக்குழுவால் மட்டும் இக்கோரிக்கையை நிறைவேற்ற முடியாது. பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமூகமானது தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்புக்கூறலினை, அட்டூழியக் குற்றங்களைப் புரிந்தவர்களை இனங்கண்டு அவர்களை நீதிக்குமுன்னால் நிறுத்துவதன் மூலம் அடைவதற்கு கோரிக்கொண்டிருக்கையில், இத்தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது அட்டூழியக் குற்றங்கள் புரிந்தவர்கள் நல்லிணக்கம் எனும் போர்வையில் பொறுப்புக் கூறலிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கு வழிவகுக்கிறது.

2. வெறுமனே உண்மை மூலமாக நிலைமாறுகால நீதியை அடையமுடியும், அது நல்லிணக்கத்திற்கு வழிசமைக்கும் என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள இவ் உள்ளகப் பொறிமுறையானது பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமூகத்தினது போதுமான பங்குபற்றலோ அல்லது இசைவோ இல்லாமல் முன்மொழியப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட – உயிர் பிழைத்த தமிழ்ச் சமூகத்தினது பங்குபற்றல் அரிதாகவுள்ளதுடன், அரசாங்கம் தொடர்புகொண்டதாகக் கூறும் சிவில் சமூகத்தின் சிறிதொருபகுதியை அவர்களின் பிரதிநிதிகள் எனவும் கருத முடியாது.

3. தென்னாபிரிக்கா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் நிறுவப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்களானது ஒடுக்கியோரின் கைகளிலிருந்து ஒடுக்கப்பட்டவர்களின் கைகளுக்கு அதிகாரம் கைமாறியதன் விளைவேயாகும். அதிகாரக் கைமாற்றம், மக்கள் குழுமத்தில் ஒருபகுதியினர் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான பரவலானதும், பாரியதானதுமான மக்கள் கோரிக்கை ஆகியனவே அத்தகைய ஆணைக்குழுக்களினால் கிடைக்கப்பெற்ற நேர்மறையான விளைவுகளுக்குக் காரணங்களாகக் குறிப்பிடமுடியும்.

ஆனால் இக்காரணிகள் இலங்கையில் இல்லை. பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச்சமூகம் செறிந்திருக்கும் வடக்கு - கிழக்குப் பகுதிகள் இன்றும் இராணுவமயமாக்கப்பட்டுள்ளது; அரசியலில் சிங்கள – பௌத்தப் பேரினவாதம் ஆதிக்கம் செலுத்துகின்றது; மனிதாபிமானமற்ற செயற்பாடுகளினூடாக இறுதி யுத்தத்தினை முடிவுக்குக் கொணர்ந்த இராணுவம் தேசிய வீரர்கள் என இன்றும் போற்றப்பட்டு வருகின்றனர்; சிங்கள – பௌத்த அரசானது பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமூகத்துடன் அதிகாரத்தைப் பகிர்வதற்கு மறுப்புத் தெரிவிக்கின்றது.

உண்மைக்கான ஆணைக்குழுக்கள் தீவிர பாகுபாடு, திட்டமிடப்பட்ட அநீதி, அடக்குமுறை மற்றும் சமூகங்களுக்கு இடையிலான ஆழமான பிளவுகள் ஆகியவற்றின் மத்தியில் தோல்வியே அடையும் எனும் யதார்த்தத்தின் அடிப்படையில் நோக்கும்போது, இலங்கையில் உண்மைக்கான ஆணைக்குழுவுக்கான சூழல் இல்லையென்பதை மேற்கூறிய காரணிகள் சுட்டிக்காட்டுகின்றன.

அத்தகைய ஆணைக்குழுவானது நடுநிலையாகச் செயற்படாதென்பதுடன், அது நிலைமாறுகால நீதிதொடர்பான உரையாடலை தனக்குச் சார்பாக முடிவுறுத்த அரசு கையாளும் மற்றுமோர் பக்கச்சார்பான சூழ்ச்சியாகக் கருதப்பட வேண்டும்.

4. இலங்கை அரசாங்கத்தால் கடந்த காலத்தில் நிறுவப்பட்ட பரணகம ஆணைக்குழு, உடலகம ஆணைக்குழு, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு, நல்லிணக்கப் பொறிமுறைக்கான ஆலோசனைப் பணிக்குழு, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் அத்துடன் இழப்பீட்டுக்கான அலுவலகம் உள்ளடங்கலான ஆணைக்குழுக்களின் படுதோல்வியானது பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் இலங்கை அரசின் மீதிருந்த சிறிதளவான நம்பிக்கையையும், உறுதியையும் துடைத்தெறிந்துவிட்டது.

தொடர்ந்து வந்த இலங்கை அரசாங்கங்களானது இத்தகைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளையும் மற்றும் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட, பொறுப்புக்கூறலிற்காக நீதிமன்றப் பொறிமுறைகளை நிறுவவேண்டும் எனும் பரிந்துரையை உள்ளடக்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 ஆகியவற்றையும் முற்றாக அலட்சியப்படுத்தி வந்துள்ளன. இத்தகைய பாராமுகப்போக்கும் தொல்பொருட் திணைக்களத்தின் முனைப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வடக்கு – கிழக்கினைச் சிங்களமயமாக்கும் செயற்பாடுகளும் உண்மைக்கான ஆணைக்குழுவிற்கான முன்மொழிவானது ஒரு கண்துடைப்பே என்பதை மெய்ப்பிக்கின்றது.

5. இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஐம்பத்து மூன்றாவது அமர்வில் உலகளாவிய காலமுறை மதிப்பாய்வின்போது பொறுப்புக்கூறற் திட்டம் மற்றும் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகத்திற்கு இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை பற்றி கண்காணித்து, அறிக்கைசமர்ப்பிக்கும் ஆணை ஆகியவற்றை வலியுறுத்திய தீர்மானங்கள் 46/1 மற்றும் 51/1 நிராகரித்தமையானது இலங்கை அரசாங்கத்தின் வேடத்தன்மையை எடுத்துக்காட்டுவதுடன், ஆணைக்குழுவிற்கான முன்மொழிவின் உண்மை நோக்கத்தையும் சந்தேகத்துக்குட்படுத்துகின்றது.

6. பாதிக்கப்பட்ட – உயிர்பிழைத்த தமிழ்ச்சமூகமானது தாங்கள் அனுவித்த கொடூரங்களை (உண்மைகளை) பல்வேறுபட்ட ஆணைக்குழுக்கழுக்கு முன் எடுத்துரைத்தும் அவை எப்பயனையும் கொடுக்கவில்லை. விரக்தி, சோர்வு மற்றும் மன அதிர்வுகளுக்கு உள்ளாகியுள்ள இவர்கள் இலங்கை அரசை இனியும் நம்ப விரும்பவில்லை.

இலங்கையில் இவர்களுக்கு குறைந்தபட்ச உளவியல்-சமூக ஆதரவுகூட வழங்கப்படாமை மற்றும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களின்மை என்பன உள்ளகப் பொறிமுறைகளுடன் மேலும் ஆபத்தானதான செயலாகவும் மாற்றியுள்ளது.

பயனளிக்கும் என்ற உத்தரவாதமில்லாததும், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகளின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகளில்லாததுமான மற்றோர் ஆணைக்குழுவிற்கு முன் தங்கள் அனுபவங்களை விவரிக்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துவது முற்றிலும் அலட்சியமான, பொறுப்பற்ற மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும்.

முந்தைய பயனற்ற பொறிமுறைகளின் அனுபவமானது பாதிக்கப்பட்ட - உயிர் பிழைத்த தமிழ்ச் சமூகத்தின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை முற்றிலுமாக அழித்துவிட்டது. இவர்கள் உள்ளகப் பொறிமுறையிற் கலந்துகொள்வது தொடர்பாகச் சிந்திக்கவேண்டுமாயின், இலங்கை அரசாங்கமானது முன்னேற்பாடாக பாதிக்கப்பட்ட –  உயிர் பிழைத்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மற்றும் உறுதியைக் கட்டியெழுப்ப வேண்டும். இதன்பொருட்டு தொடர்ந்துவந்த அரசாங்கங்கள் நிறுவிய ஆணைக்குழுக்களின் பின்வரும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்:

இலங்கை அரசாங்கமானது மதச்சார்பற்ற மற்றும் பன்முக அரசை அங்கீகரித்து நிறுவும் வகையில் ஒரு பன்முக, பல மத மற்றும் பல்லினத் தன்மையான இலங்கையை சொல்லிலும், செயலிலும் ஊக்குவித்தல் மற்றும் உருவாக்குதல்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விரைவாக உரியோர்க்குக் கையளித்தல், இராணுவத்தால் நடத்தப்படும் காணி சுவீகரிப்புக்களை உடனடியாக நிறுத்துதல், தீவிர கண்காணிப்பை இல்லாதொழித்தல், வடக்கு – கிழக்கிலுள்ள சிவில் சமூக உறுப்பினர்கள், காணாற் போனவர்களின் குடும்பங்கள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டோர், ஊடகவியலாளர்கள், முன்னாள் போராளிகள், மற்றும் மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்துவோர் போன்றோர் மீதான கண்காணிப்பு, துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளை நிறுத்துதல், பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை நீக்குதல் மற்றும் அதன் கீழ்க் கைதுசெய்யப்பட்டோரை உடனடியாக விடுவித்தல் போன்றவை நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமானது பயங்கரவாதத் தடைச்சட்டத்தினை ஒத்த, சர்வதேச மனித உரிமைகள்ச் சட்டத்திற்கு முரணான சட்டங்களை இயற்றுவதை நிறுத்தவேண்டும்.

அட்டூழியக் குற்றங்களை உள்ளகக் குற்றங்களென போதிக்கும் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். கால வரம்புகள் இன்றி, கடந்த காலங்களில் செய்யப்பட்ட இத்தகைய குற்றங்களைத் தண்டிக்கக்கூடிய வகையில் இச்சட்டங்கள் அமையவேண்டும்.

மனித உரிமை மீறல்கள் அல்லது குற்றங்கள் குறித்து எந்த பதிவும் இல்லாத இராணுவ அங்கத்தவர்களைச் சமூகம் மற்றும் சிவில் வாழ்க்கையில் மறுவாழ்வு அளித்து மீண்டும் ஒன்றிணைக்கும் நோக்கில் ஆயுதப்படைகளைக் குறைக்கும் நடவடிக்கையை அரசாங்கம் படிப்படியாக முன்னெடுக்க வேண்டும்.

அரசாங்கம் நிலைமாறுகால நீதியின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கிய கொள்கை மற்றும் செயற்பாட்டு கட்டமைப்பை உருவாக்கி பகிரங்கப்படுத்த வேண்டும்.

கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் உண்மைக்கான ஆணைக்குழுவொன்று இந்நிலையில் பாதக விளைவுகளையே ஏற்படுத்துமெனவும், அது ஆயுதப்போராட்டத்திற்கு வித்திட்ட அடிப்படைக் காரணிகளை நிவர்த்தி செய்யாது எனவும் நம்புகின்றோம்.

வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களின் நீண்டகால, கோரிக்கைகளை நிவரத்திசெய்வதற்கு அவசியமான கட்டமைப்பு மாற்றங்களை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிக்கான முழுமையானதும், விரிவானதுமான அணுகுமுறையே இத்தருணத்தில் அவசியமாகும்.

ஆதலால் நாங்கள் தொடர்புபட்ட பங்குதாரர்களைப் பின்வருவனவற்றை நிறைவேற்றக் கோருமாறு வேண்டுகிறோம்:

1. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை நிறுவுவதற்காக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை நிறுத்துதல்ளூ

2. சர்வதேச பங்கேற்புடன், உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான அம்சங்களுடன் வழக்குத் தொடுத்தல், இழப்பீடு மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்குமான ஏற்பாடுகளை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிக்கான ஒரு முழுமையான மற்றும் விரிவான அணுகுமுறையை நிறுவுதல்.

3. தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை உடனடியாக ஆரம்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தல்.

4. வடக்கு - கிழக்கை முழுமையாக இராணுவ நடமாட்டமற்ற பகுதிகளாக்குவதுடன், பாரம்பரிய தமிழர் தாயகத்தினுள் நடைபெறும் நில அபகரிப்பு, அத்துமீறல் மற்றும் குடியேற்றத்தை முழுமையாக நிறுத்துதல் மற்றும் இதுவரை சுவீகரிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் நிபந்தனையின்றி விடுவித்தல்.

5. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உடனடி சர்வதேச விசாரணையைத் தொடங்கல் மற்றும் தமிழ் அரசியற் கைதிகளனைவரையும் விடுவித்தல்.

6. தமிழ் சமூகம் இதுவரை ஒடுக்கப்பட்டும், துன்புறுத்தப்பட்டும் வந்துள்ளமையை இலங்கை அரசு ஒப்புக்கொள்ளலும், தேச விடுதலைப் போரின் போது போராடியவர்களையும், இனப்படுகொலை மற்றும் ஏனைய அட்டூழியக் குற்றங்களினால் இறந்தவர்களையும் நினைவுகூருவதற்குத் தடையற்ற உரிமையை உறுதிப்படுத்தல்.

7. நல்லெண்ணப் பேச்சுவார்த்தை மூலமாக தீவிர நிலை மறுசீரமைப்பைக்கொண்ட ஓர் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும். அதில் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் புலம்பெயர்ந்தோரும் பங்கேற்பாளர்களாக இருக்க வேண்டும்.

அத்தகைய தீர்வானது 'வட்டுக்கோட்டைத் தீர்மானம்', 'திம்புக் கொள்கை' ஆகியவற்றுள் உள்ளடங்கிய தமிழர்களின் வரலாற்று கோரிக்கைகள், தமிழ் மக்கள் பேரவையில் முன்மொழியப்பட்ட தீர்மானம் மற்றும் சுதந்திரம் கிடைத்ததன் பின்னர் இலங்கை அரசின் கைகளால் தமிழர்கள் அனுபவித்த திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் அடக்குமுறை ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே எட்டப்படவேண்டும். கையொப்பமிடுவோர்

1. அடையாளம் கொள்கைக்கான ஆய்வு நிலையம்
2. தமிழ் சிவில் சமூக அமையம்
3. சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையம்
4. விழுது
5. தளம், திருகோணமலை
6. புழுதி, திருகோணமலை
7. குரலற்றவர்களின் குரல்