பிரதமருடனான சந்திப்பினை அடுத்து PHIகளின் போராட்டம் முடிவு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அலரி மாளிகையில் இன்று (28) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பினை அடுத்து பொதுச் சுகாதார பரிசோதகர்களின் போராட்டம் நாளை புதன்கிழமை காலை 7.30 மணிக்கு முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது. 

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ள அதிகாரங்களின்படி ஏதேனும் வழக்கு தொடர்வதாயின் அதனை சுகாதார வைத்திய அதிகாரியுடன் (MOH) கலந்தாலோசித்து செய்வதற்கும், பொது சுகாதார பரிசோதகர்கள் (PHI) மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி இடையே இது தொடர்பில் ஏதேனும் முரண்பாடு ஏற்படின், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை நாடி நடவடிக்கை எடுப்பதற்கும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பிரதமர் முன்னிலையில் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்துடன் இன்று முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த உடன்பாட்டிற்கு வந்துள்ளனர்.

அதன்படி, தங்கள் கடமைகளைச் செய்யும்போது தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தை மீறாத வகையில் செயற்படவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் ஒப்புக்கொண்டுள்ளது.

இதன்போது பொது பரிசோதனை சேவையில் நிலவும் பிரச்சினைகள் குறித்தும் சங்கத்தினர் பிரதமருக்கு விளக்கமளித்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் அங்கு கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க,

"தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டம்" தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொது பரிசோதகர்களின் வேண்டுகோளின் பேரில் பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த கட்டளைச் சட்டத்தை செயற்படுத்தும் போது பொது சுகாதார பரிசோதகர்களுக்கு உள்ள அதிகாரங்களின்படி ஏதேனும் வழக்கு தொடர்வதற்கு தேவைப்படின் அதன்போது சுகாதார வைத்திய அதிகாரியின் ஒப்புதலை பெற்றுக்கொள்வதாகவும் அதற்கு மேலும் பிரச்சினையொன்று காணப்படுமாயின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுப்பதற்கும் உடன்பாடு எட்டப்பட்டது.

1897 இல் வெளியிடப்பட்ட கட்டளை சட்டத்தில் சாத்தியங்கள் உள்ளதுடன் மற்றும் சில இடங்களில் சிறிய சிக்கல்கள் உள்ளன. அவை காலப்போக்கில் மாற வேண்டும். எதிர்காலத்தில் உருவாகும் பாராளுமன்றத்தின் ஊடாக இந்த கட்டளைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே

"சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகம் என்பது ஒரு குடும்பமாக வேலை செய்ய வேண்டிய இடமாகும். அங்கு விசேட அங்கத்தவர்தான் பொது சுகாதார பரிசோதகர் என்பது. அங்கு அவர்கள் மருத்துவ அதிகாரிகள் மற்றும் கூடுதல் மருத்துவ அதிகாரிகளுக்கு தலைமைத்துவம் வழங்குகின்றனர்.

அதன்படி, கட்டளைச் சட்டத்தில் உள்ளவற்றை மீறாத வகையில் உள்ள சட்ட கட்டமைப்பின் கீழ் நீதிபதியின் அறிவுறுத்தல்களின்படி இந்த விடயங்கள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, எந்தவொரு சட்டத்தையும் திருத்தாமல் கொவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மற்றும் தேர்தல் சுகாதார சட்டங்களை கையாள்வதற்கும் இன்றைய தினம் உடன்பாடு எட்டப்பட்டது.

ஒரு குழுவாக, எதிர்காலத்தில் பழைய சட்டங்களை புதுப்பித்து நிகழ்காலத்திற்கு பொருந்தும் வகையில் பொது சுகாதார சேவையை மிகவும் திறமையாக செய்துக் கொள்வதற்கு தேவையான வகையில் தயாரித்துக் கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. இன்று, அனைவரும் ஒருஅணியாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டனர்.

பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண

"1897ஆம் ஆண்டின் 03ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் அதிகாரம் தொடர்பில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த 16ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொது சுகாதார பரிசோதகர்கள் தொழிற் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கையின் போது சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் அரச சுகாதார அதிகாரிகள் சங்கத்துடன் கலந்துரையாடினர்.

ஆனால் அதன்போது தீர்க்க முடியாத பிரச்சினைகள் இருந்தன. எனவே, இது குறித்து இன்று பிரதமருடன் கலந்துரையாடினோம். சட்டமா அதிபர் திணைக்களம் விவரித்தபடி, 1897 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரிவு 38 இன் படி பொது பரிசோதகர்கள் ஒரு பரிசோதகராக அதிகாரம் பெற்றிருக்கிறார்கள் என்றும் அதன்படி அவருக்கு எந்தவொரு சாதாரண நேரத்திலும் வளாகமொன்றுக்குள் செல்வது சுகாதார மீறலாக இருப்பின் பரிசோதனை செய்தல், வழக்கு தொடர்வதற்கு அதிகாரம் உள்ளதாக இந்த கலந்துரையாடலின் போது கூறப்பட்டது.

ஒரு பரிசோதகருக்கு உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கான அதிகாரம் இருப்பதால் இந்த கட்டளைச் சட்டத்திற்கு இணங்க, நாம் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கிறோம்.

திணைக்களத்தின் நிர்வாக கட்டமைப்பைப் பராமரிப்பதற்கான ஒரு சங்கம் என்ற வகையில், வழக்குத் தாக்கல் செய்யப்படுவதாயின் சுகாதார சேவை அதிகாரியுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கவும், சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் இடையே ஏதேனும் வழக்கு தாக்கல் தொடர்பில் கருத்து முரண்பாடு ஏற்பட்டால் அது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனையின் பேரில் வழக்குத் தாக்கல் செய்யவும் ஒப்புக்கொண்டோம். கட்டளைச் சட்டத்தை மீறாமல் கடமைகளைச் செய்ய நிர்வாக மட்டத்தில் ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இன்று பிற்பகல், எமக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற 20 சங்கங்கள் மற்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் நிர்வாகக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் நாம் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடரலாமா? வேண்டாமா? என்பது குறித்து தீர்மானிப்போம். நல்ல பதிலை பெற்றுக் கொள்ள முடியும் என்று நாம் நம்புகிறோம்.

குறித்த சந்திப்பில் பிரதமரின் செயலாளர் காமினி செனரத், சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எம்.முணசிங்க, சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சின் சட்ட அதிகாரி ஆர்.அஹமட், சட்டமா அதிகர் திணைக்களத்தை பிரதி நிதித்துவப்படுத்திய சிரேஷ்ட அரச சட்டத்தரணி கலாநிதி அவந்தி பெரேரா, அரச சட்டத்தரணி இந்துனி புஞ்சிஹேவா, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் பராக்கிரம வர்ணசூரிய, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டி சொய்சா மற்றும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பலர் கலந்துக் கொண்டனர்.