எஸ்.எஸ்.பி நவாஸ் அளித்த பதில் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல: பொலிஸ் தலைமையகம்

எஸ்.எஸ்.பி நவாஸ் அளித்த பதில் முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல: பொலிஸ் தலைமையகம்

வானொலி அலைவரிசை நேர்காணலொன்றில் எஸ்.எஸ்.பி நவாஸ் அளித்த பதில் முன்னரே திட்டமிடப்பட்டதல்ல எனவும் அதற்காக மன்னிப்புக் கோருவதாகவும் பிரதிப் பொலிஸ்மாதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் சுப்ரின்டென்ட் நவாஸ் மீதான முறைப்பாட்டிற்குரிய விளக்கம் என்ற தலைப்பில் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுக்கு பிரதிப் பொலிஸ்மாதிபர் அஜித் ரோஹண கடிதமொன்றை அனுப்பிவைத்திருக்கிறார்.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

"இது கடந்த 3 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் மூலம் பொலிஸ் மேற்கொள்ளப்பட்ட சுப்ரின்டென்ட் நவாஸ் மீதான முறைப்பாடுக்கான பதில் கடிதம் என்பதுடன் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ்மா அதிபர் எனக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.

உங்களுடைய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதுடன் குறித்த விடயம் கடந்த மாதம் 2ஆம் திகதி வானொலி அலைவரிசை ஒன்றில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சியொன்றில் நவாஸ் வெளியிட்ட கருத்து தொடர்பானதாக அமைந்துள்ளது.

அந்த வானொலி நிகழ்ச்சியில் தொகுப்பாளர்  நவாஸிடம் கொழும்பிலிருந்து வேறு பகுதிகளுக்குச் சென்றோர் குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் கையாளப்பட முடியாத ஒரு விதத்தில் பதிலளித்தார். எனினும் இது முன்னரே திட்டமிடப்பட்ட ஒன்றல்ல.

இவ்விடயம் தொடர்பில் நவாஸ் எச்சரிக்கப்பட்டுள்ளதுடன், நாம் இது குறித்து மன்னிப்புக்கோருகிறோம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.