PTAஇன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவு

PTAஇன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவு

றிப்தி அலி

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு தகலவறியும் உரிமைக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 28ஆம் திகதி முன்னர் இந்தப் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறும் தகலவறியும் உரிமைக்கான ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சுரேன் டி பெரேரா என்பவரினால் பொலிஸ் திணைக்களத்திடம் மேற்கொள்ளப்பட்ட தகவலறியும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதனையடுத்து தகலவறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு தொடர்பான விசாரணைகளை ஆணைக்குழு முன்னெடுத்திருந்தது.

ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேயவர்த்தன, ஆணையாளர்களான ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹினி வல்கம, சிரேஷ்ட சட்டத்தரணிகளான கிஷாலி பின்டோ ஜயவர்த்தன மற்றும் ஜகத் லியனாராச்சி ஆகியோரினால் இந்த மேன் முறையீடு தொடர்பிலான தீர்ப்பு கடந்த வியாழக்கிழமை (06) வழங்கப்பட்டது.

விண்ணப்பதாரியினால் கோரப்பட்டதற்கமைய கடந்த 2019 ஜனவரி 1ஆம் திகதியிலிருந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல், அவர்களின் வயது, பால், மாவட்டம், கர்;ப்பிணித் தாய்மார்களின் விபரம், தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையங்களின் விபரம் போன்ற தகவல்களை வழங்குமாறு ஆணைக்குழு உத்தரவிட்டது.

தேசியப் பாதுகாப்பு காரணமாக இந்தத் தகவல்களை வெளியிட முடியாது என பொலிஸ் மா அதிபரினால் தெரிவிக்கப்பட்ட விடயத்தினை ஏற்பதற்கு ஆணைக்குழு மறுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
 
அத்துடன், மேன் முறையீட்டாளருக்கு முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கியதற்காகவும், ஆணையம் கேட்ட கேள்விகளுக்கு முறையாக பதிலளிக்காததற்காகவும் பொலிஸ் திணைக்களம் ஆணைக்குழுவினால் கடுமையாக கண்டிக்கப்பட்டது.