றிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும்: சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

றிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும்: சமூக வலைத்தளங்களில் கோரிக்கை

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமைப் பதவியிலிருந்து றிஸ்வி முப்தி விலகிக் கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

சென்ற வாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு றிஸ்வி முப்தி வட்டிலப்ப பொதிகளை எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளதையடுத்தே இவ்வாறான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

இது தொடர்பில் தனது முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்குகளில் பதிவிட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் புதல்வர் அமான் அஷ்ரப், றிஸ்வி முப்தி உடனடியாக தனது பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளார்.

"சமூகத்திற்கு சக்தி வாய்ந்ததும் பொறுப்புவாய்ந்ததுமான தலைமைத்துவத்தை வழங்க தவறியது ஒரு விடயம். ஆனால் உங்களது நடத்தைகள் ஊடாக சமூகத்திற்கு அவமானத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்தியதை ஒருபோதும் மன்னிக்க முடியாது. உங்களால் சமூகத்திற்கு அழிவு. றிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும்" என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை வரவேற்றுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் உமர்லெப்பை யாக்கூப், "நிச்சயமாக, உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். அவர் பதவி விலக வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று மேலும் பலரும் அமான் அஷ்ரபின் கோரிக்கையை வரவேற்று பதிவுகளை இட்டுள்ளனர்.

"அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவை மறுசீரமைப்பதற்கு சிவில் சமூகத்தினர் முன்வர வேண்டிய நேரம் இது" என லிபர்டி சர்வதேச கல்லூரியின் பணிப்பாளர் முப்தி ஹாஷிம் குறிப்பிட்டுள்ளார்.

"றிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும். அவர் பல தடவைகள் சமூகத்தை குறைத்து மதிப்பிட்டுள்ளார்" என யூனியன் வங்கியின் பணிப்பாளர் சப்ரி கௌஸ் தெரிவித்துள்ளார்.

"அவர் பதவி விலக வேண்டும் எனும் கருத்துடன் உடன்படுகிறேன். அவர்கள் இவ்வாறு தவறிழைப்பது இரண்டாவது தடவையாகும். முதலில் ஆணைக்குழுவில் ஒலிப்பதிவு செய்து தவறு செய்தார்கள். இப்போது இதனைச் செய்துள்ளார்கள். அவர்கள் வெட்கக் கேடான, முட்டாள்தனமான தலைவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்" என ரிஸ்வி பாரூக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று ரிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும் என பிஸ்மி அல்குர்ஆன் பாடசாலையின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

"ரிஸ்வி முப்தி, தயவு செய்து பதவி விலகுங்கள்" என அவர் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று சட்டத்தரணி மபூஸ் அகமட், "நிச்சயமாக ரிஸ்வி முப்தி பதவி விலக வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமான் அஷ்ரபின் பதிவின் கீழ் கருத்து வெளியிட்டுள்ள பிரபல அரசியல்இ சமூக செயற்பாட்டாளர் பிரசாத் வெலிகும்புர "அவர் ஏன் அவற்றை எடுத்துச் சென்றார்? அதன் ஊடாக அவர் எதிர்பார்த்தது என்ன? இது பற்றி விளக்கமளிக்குமாறு முஸ்லிம் சமூகம் அவரிடம் வலியுறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.