இலங்கை தமிழருக்காக இந்தியா குரல் கொடுக்கும்: மோடி

இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக இந்தியா எப்போதும் இந்தியா குரல் கொடுக்கும் என அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

அந்த மக்களுக்கான இந்தியா பல செயற்திட்டங்களை நன்கொடையாக மேற்கொண்டுள்ளன. அத்துடன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த முதல் இந்திய தலைவர் நானே என அவர் மேலும் கூறினார்.

சென்னையில் இன்று (14) சனிக்கிழமை இடம்பெற்ற கூட்டமொன்றிலேயே பிரதமர் மோடி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய இந்திய பிரதமர்,

இலங்கையில் உள்ள எமது தமிழ் சகோதர சகோதரிகளின் அபிலாசைகள் மற்றும் நலன்புரி தொடர்பாக எமது அரசாங்கம் எப்பொழுதும் அக்கறையுடன் உள்ளது. யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஒரே ஒரு இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் கொண்டுள்ளேன்.

அபிவிருத்தி செயற்றிட்டங்கள் ஊடாக இலங்கை தமிழ் சமூகத்தின் நலன்புரியினை நாம் உறுதிப்படுத்தி வருகின்றோம். கடந்த காலங்களை காட்டிலும் எமது அரசாங்கத்தால் அதிகளவான வளங்கள் தமிழ் மக்களுக்காக வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்களுக்காக 50,000 வீடுகள், பெருந்தோட்ட பகுதிகளில் 4 ஆயிரம் வீடுகள், சுகாதாரத் துறையினை நோக்கும்போது தமிழ் சமூகத்தினரால் பரந்தளவில் பயன்படுத்தப்படும் இலவச அம்புலன்ஸ் சேவைக்காக நாம் நிதியினை வழங்கியுள்ளமை, டிக்கோயாவில் ஒரு மருத்துவமனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை, தொடர்புகளை மேம்படுத்துவதற்காக மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்துக்கான ரயில் பாதை வலையமைப்பானது புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றமை, சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கான விமான சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்தில் இந்தியாவால் நிர்மாணிக்கப்பட்ட யாழ் கலாசார நிலையம் வெகுவிரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என்பதனை நான் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன். தமிழ் மக்களின் உரிமை பிரச்சனைகள் தொடர்பாக இலங்கை தலைவர்களின் கவனத்திற்கு தொடர்ந்தும் கொண்டு செல்லப்படுகிறது.

அவர்கள் சமத்துவம் நீதி சமாதானம் மற்றும் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவதில்  நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். நீண்ட காலமாக எமது மீனவர்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அந்த பிரச்சனையின் வரலாற்றினை நான் கூற விரும்பவில்லை.

ஆனால் அவர்களின் உரிமையுடனான நலன்களை பாதுகாப்பதற்கு எனது அரசாங்கம் எப்பொழுதும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதனை உறுதியாக கூறுகிறேன். இலங்கையில் கைது செய்யப்படும் மீனவர்களை முற்கூட்டியே விடுதலை செய்யப்படுவதனை நாம் உறுதிப்படுத்துகின்றோம்.

எமது காலப்பகுதியில் 1,600க்கும் அதிகமான மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தற்பொழுது இலங்கை வசம் எந்த ஒரு இந்திய மீனவர்களும் இல்லை. அதேபோல 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன" என்றார்.