'குவைத்தில் இலங்கை பெண் மரணித்தது கொரோனாவால் அல்ல'

'குவைத்தில் இலங்கை பெண் மரணித்தது கொரோனாவால் அல்ல'

குவைத்தில் இலங்கையைச் சேர்ந்த பெண்ணொருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தார் என சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என குவைத்திலுள்ள இலங்கை தூதுவராலயம் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்தது.

"குவைத்திலிருந்து அவசர செய்தி" எனும் தலைப்பிலான flyerயொன்று கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

குறித்த flyer இல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"கிண்ணியாவினைச் சேர்ந்த சகோதரி ஒருவர் கடந்த 04.06.2020ஆந் திகதி கொரோனாவினால் வபாத்தாகியுள்ளார். இவரின் சொந்தங்களுடன் தொடர்கொள்ளும் வரை ஜனாஸா அடக்கம் செய்யமால் உள்ளது.

இவரை தெரிந்தால் உடன் கீழுள்ள Whats App No : இலக்கத்துடன் தொடர்புகொள்ளவும். Whats App No : 0094761173064. தயவுசெய்து உரியவர்களுக்கு தகவல் செல்லும் வரை பகிரவும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி முதலில் "இலங்கை முஸ்லிம்கள்" எனும் பேஸ்புக் பக்கத்திலேயே பதிவேற்றப்பட்டிருந்தது. இதனையடுத்து குறித்த செய்தியினை பலரும் பேஸ்புக் மற்றும் வட்ஸ்அப் ஆகியவற்றில் பகிர ஆரம்பித்தனர். எனினும் அந்த பதிவு குறித்த பேஸ்புக் பக்கத்திலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த செய்தியின் உண்மைத் தன்மை தொடர்பில் குவைத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தின் உயர் அதிகாரியொருவரை விடியல் fact checking குழுவினர் தொடர்புகொண்டு வினவியபோது, குறித்த தகவல் பொய்யானது என நிரூபிக்கப்பட்டது.

"அத்துடன் குறித்த பெண் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தாரே தவிர, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமாகவில்லை" என குவைத்திலுள்ள இலங்கை தூதுவராலய பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இந்த பெண்ணின் ஜனாஸா இன்று (08) திங்கட்கிழமை குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

"குவைத்தில் மரணமாகும் வெளிநாட்டு பிரஜைகளின் சடலத்தினை இங்கே நல்லடக்கம் செய்வதென்றால் மரணமானவரின் நெருங்கிய உறவினரொருவரின் சம்மதக் கடிதம் அவசியமாகும்.

அதற்கமைய தூதுவராலயம் வெளிநாட்டு அமைச்சின் ஊடாக குறித்த பெண்ணின் நெருங்கிய உறவினரான மகனினை தொடர்புகொண்டு ஜனாஸாவினை குவைத்தில் நல்லடக்கம் செய்வதற்கான சம்மத கடிதத்தினை பெற்றுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.

"குறித்த கடிதம் கிடைப்பதற்கு ஏற்பட்ட கால தாமதமே ஜனாஸா நல்லடக்கத்திற்கான கால தாமதத்திற்கான காரணம்" என அவர் தெரிவித்தார்.

"எவ்வாறியினும், குறித்த பெண்ணின் ஜனாஸாவினை இன்று நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூதுவராலயம் மேற்கொண்டுள்ளது" என அவர் மேலும் கூறினார்.

"தயவுசெய்து உரியவர்களுக்கு தகவல் செல்லும் வரை பகிரவும்" எனக் குறித்த flyer இல் குறிப்பிடப்பட்டுள்ளமையினால் இந்த செய்தி குறித்த பெண்ணின் உறவினர்களை சென்றடைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பலரும் இந்த flyer இனை சமூக ஊடகங்களில் பகிர ஆரம்பித்தனர்.

ஆனால், குறித்த பெண்ணின் மரணச் செய்தி அவருடைய குடும்பத்தினரை அடைந்து ஜனாஸா நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையிலும் இந்த செய்தி சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

* உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிர்வதை தவிர்ப்போம்.