டெல்டா வைரஸும் அதன் அறிகுறிகளும்!

டெல்டா வைரஸும் அதன் அறிகுறிகளும்!

#COVID19 பிறழ்வுகள் என்ற சொல்லாடல் தற் காலகட்டத்தில் அடிக்கடி காணக்கிடைக்கிறது. இந்த பதம் COVID-19க்கு மட்டுமன்றி எல்லா வைரஸூகளுக்கும் பெருமளவில் பொருந்தவல்லது.

வைரஸ்கள் - தங்கள் வாழ் நாட்களில் அக,  புறக் காரணிகளால் தூண்டப்பட்டு தமது பாரம்பரிய கட்டமைப்பில் சிறிய மாற்றங்களைப் பெற்றுக் கொள்வதால் இந்த பிறழ்வு  அல்லது திரிபு உருப்பெறுகிறது. இவ்வாறு ஏற்படும் பிறழ்வு, பொதுவாக வைரஸூகளுக்கு மட்டுமின்றி எல்லா உயிரினங்களுக்கும் சூழல் மாற்றத்தை வெற்றி கொள்ள ஏதுவாக அமைகிறது.
 
தற்காலத்தில் அறியப்பட்ட COVID-19 என்னும் கொரோனா வைரஸானது -  பல முறை பிறழ்வுற்றபோதும் அதன் அடிப்படை பரம்பரையலகுக் கட்டமைப்பான RNA ஆனது  பொதுவாக Wuhan - China இல் கண்டறிப்பட்ட முதன்மை வைரஸ்  (டிசம்பர் 19) உடன் ஒத்துடையதாகவே இன்னும் காணப்படுகின்றது.

இதன் வெளிப்பாடே இன்னும் PCR பரிசோதனையானது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு தொற்றாளியின் மாதிரியானது   பாரம்பரிய தாய் வைரஸ் மாதிரியுடன் ஒத்துப்பார்க்கப்படுவதன் மூலம் தொற்று உறுதி செய்யப்படுகிறது.

இதுவரையும் அறியப்பட்ட சில பிறழ்வுகள் இங்கு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது. இவை தவிர்த்து இன்னும் பல வைரஸ் திரிபுகள் அறியப்பட்டு பெயரிடப்பட்டுள்ளன. இவ்வாறான திரிபுகள் முதன்மை வைரஸ் உடன் ஒப்பிடும்போது வீரியம் கூடியதாகவும் விரைவில் பரவலடையும் தன்மை கொண்டிருப்பதும்  கண்கூடு.

இதனால் ஏற்படும் நோய்த்தாக்கம் பொதுவாக அதிகமாகவும் அதனால் ஏற்படும்  மரண வீதமும் மிகையாக  உள்ளது. இப்படியாக ஏற்படும் தாங்கங்கள் எமது முதியோரை வெகுவாக பதிப்பது நாம் இதுவரை அறிந்தது. ஆனால் புதிய திரிபுகள் வாலிபர்களையும் சிறார்களையும்  கூட வெகுவாக பாதித்து மரணத்தையும் ஏற்படுத்தி உள்ளன.

#Delta Variant

டெல்டா பிறழ்வானது் - இந்தியா மற்றும் பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட  மூல வைரஸில் இருந்து ஏற்பட்ட திரிபாகும். இந்த புதிய வகை வைரஸானது விரைவில் பரவக்கூடியது் மட்டுமன்றி இதன் தாக்கமும் பாதிப்பும் மிக அதிகமாகும். மேலும் இதன் நோய் அறிகுறிகளாவன:

காய்ச்சலுடன் அதீத தலைவலி:

இத்தலை வலியானது கண்ணை சுற்றி ஏற்படுகிறது. மேலும் வழமையான கொரோனா நோய் அறிகுறிகளான இருமல் , மூச்சு திணறல் என்பன டெல்டா பிறழ்வில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. இன்னும் மணம், சுவையில் எற்படும் மாற்றங்களும் இதன் போது குறைவாக இருக்கும்.

கொரோனா பிறழ்வுகளிலிருந்து எவ்வாறு எம்மைப் பாதுகாப்பது?

1. கைகளை உரிய முறையில் அடிக்கடி கழுவிக்கொள்ளல்  
2. சமூக இடைவெளி 1 -2 மீட்டர் வரையில் பேணல்
3. தேவை நிமிர்த்தம் வெளிச்செல்லும் போது உரிய முறையில் முகக்கவசம் அணிதல்
4.தும்மும் போதும் இருமும் போதும் சுகாதார வழி முறைகளைப் பேணல்
5.தடுப்பூசி பெற்றுக்கொள்ளல்

வழமையில் உள்ள  தடுப்பூசிகழும் புதிய பிறழ்வும்

வழமையில் உள்ள  தடுப்பூசிகள் புதிய பிறழ்வுகளுக்கு எதிராகவும் தொழிற்படவல்லன - என ஆய்வறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறு தடுப்பூசிகள் ஏற்றிக்கொள்வதன் மூலம் குறைந்த பட்சம் நோயினால் ஏற்படும் பாரிய தாக்கங்களான வைத்தியசாலை அனுமதி, அதி தீவிர சிகிச்சைப்பிரிவு அனுமதி என்பனவற்றிலிருந்து குறைந்தபட்சம் பாதுகாப்பையாவது பெற்றுக்கொள்ளலாம்.

Dr M.A.M. Jazeem
MBBS, MRCGP
Fellowship in Diabetes
Specialist Family Medicine.